சிறுகதை

கோயில் திருவிழா – ராஜா செல்லமுத்து

புரட்டாசி மாதம் அதிகாலையில் எழுந்து ஆண்டாள் பாசுரங்கள் பாடி திருப்பள்ளி எழுச்சி பாடி பெருமாள் கோவிலில் பூஜை புனஸ்காரம் செய்ய வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் எல்லாம் பெருமாள் கோயிலுக்கு தினமும் அதிகாலையிலேயே வந்து கொண்டிருந்தார்கள்.

அசைவ உணவுகளை அறவே ஒதுக்கிய பக்தர்கள் அந்த மாதம் முழுவதும் பயபக்தியோடு தெய்வீக சிந்தனையோடு வலம் வந்தார்கள் பயபக்தியோடு தினமும் பூஜை செய்தார்கள்.

திருவிழாவில் தினந்தோறும் கோயிலில் ஏதாவது ஒரு விழாக்கள் நடந்து கொண்டே இருக்கும். திருவிழாவில் முதல் நாள் கோயிலில் அன்பளிப்பு வந்த துணிகளை ஏலமிட்டார்கள். எல்லோருக்கும் அன்னதானம் இட்டார்கள்.

அந்தத் தெரு முழுதும் பந்தல் சீரியல் போட்டு அலங்கரித்திருந்தார்கள். பயபக்தியோடு இருந்த ஆட்கள் சிலர் செருப்பு கூட போட்டு போவதற்கு பயந்து கைகளில் செருப்பை எடுத்துச் சென்றார்கள்.

அந்தத் தெருவிற்கு திருவிழாவின் கடைசி நாளான அன்று தன் நண்பனை பார்க்க வந்தான் சிவ நேசன்.

பெருமாள் கோயில் தெருவில் வந்த சிவநேசனுக்கு திடீரென்று வேறு தெருவில் வந்து விட்டோமா? என்று தோன்றியது .

அக்கம் பக்கத்தில் விசாரித்து நண்பன் வீட்டுக்கு செல்லலாம் என்று நினைத்தான் சிவநேசன்.

அந்தப் பகுதி முழுவதும் சீரியலால் நிரப்பப்பட்டு சினிமா பாடல்களில் காமரசம் தூக்கலாக இருக்கும் பாடிக்கொண்டிருந்தார்கள்.

ஒருவேளை நாம் தவறுதலான இடத்திற்கு வந்து விட்டோமோ? விலாசம் தவறி வந்து விட்டோமா? என்ற வருத்தப்பட்டான் சிவநேசன்.

ஆனால் நண்பன் இருக்கும் தெரு இதுதான் google மேப்பும் அதுதான் காட்டுகிறது.

ஆனால் ஏதோ பாட்டு கச்சேரி நடந்து ஒரே அலப்பறையாக இருக்கிறதே? இது என்னவென்று அருகில் இருப்பவர்களிடம் கேட்கலாம் என்று நினைத்தான் சிவநேசன்.

அப்படியே அருகில் இருந்தவரிடம் கேட்டான்.

சார் பெருமாள் கோயில் எங்க இருக்கு? என்று கேட்டான் சிவநேசன்.

இப்படியே நடந்து நேரா போங்க பெருமாள் கோவில் வந்துரும். பெருமாள் கோவிலுக்கு பக்கத்துல தான் நீங்க சொல்ற அட்ரஸ் என்றான் அந்த வழிப்போக்கன்.

அந்த வழிப்போக்கன் சொன்ன வழியே நடந்து வந்தான் சிவநேசன். அவன் தெருவைக் கடக்க முடியாத அளவுக்கு ஆட்கள் நாற்காலி பாேட்டு அமர்ந்திருந்தார்கள் மக்கள்.

பொதுமக்களின் முன்பாக பெருமாள் கோயில் இருந்தது. காேயில் மேடையில் சினிமாப் பாடல்களைப் பாடி கொண்டிருந்தார்கள்.

அந்தப் பாடல்களைக் கேட்ட சிவநேசனுக்கு தூக்கி வாரிப் போட்டது.

ஒரு மாத காலங்கள் பெருமாளுக்கு விரதமிருந்து அசைவ உணர்வுகளைத் தவிர்த்து சாமிக்கு சேவை செய்து கடைசியில் ஆபாசமான சினிமா பாடல்கள் தான் கோயில் முன்பு பாடுவதா? என்ன இது நியாயம்? இவர்களுக்கு பக்தி முழுவதும் சினிமாவுக்குள் தான் சென்று விடுகிறதா? என்று வருத்தப்பட்டான் சிவநேசன்

நண்பனின் வீடு பெருமாள் கோயிலுக்கு பின்புறம் இருந்ததால் அவன் எப்படியும் இந்த கூட்டத்தைக் கடந்து தான் செல்ல வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டது .

நடந்து அவர்களைக கடந்து நண்பன் வீட்டிற்குச சென்றான் சிவநேசன்.

சினிமா பாடல்களைப் பாடிக்கொண்டே இருந்தார்கள். கோயில்ல இவ்வளவு அழகா பூஜை புனஸ்காரம் பண்ணிட்டு கடைசில சினிமா பாட்டு ஒலிக்க விடுறாங்க.அதுவும் ஆபாசம் இருந்த பாடல்களை. இது என்ன நியாயம் ? என்று நண்பரிடம் விவாதித்தான் சிவநேசன்.

இது அத்தனையையும் கேட்டுச் சிரித்த சிவநேசன் நண்பன்

மக்கள உற்சாகப்படுத்தணும்னா சினிமா பாடல்கள் தவிர வேற வழியில்ல. அத நீயேன் தப்பா நினைக்கிற ? கடவுளுக்கே பாடல் பிடிக்குது .அதான் கேட்டுட்டு பேசாம இருக்கு .உனக்கு என்ன பிரச்சினை என்றான், நண்பன். ஏன் இந்த மக்கள் இன்னும் திருந்தாமல் இருக்கிறார்கள்? வானத்தில் என்ன இருக்கிறது என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் இந்த யுகத்தில் இன்னுமா தெருக்களில் பாட்டுக்கச்சேரி நடத்திக் கொண்டிருப்பது ? இவர்களின் அறிவு இன்னும் விருத்தியடையவில்லையே? வருத்தப்பட்டான் சிவநேசன்.

பெருமாள் கோயிலின் வாசலில் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தன சினிமா பாடல்கள்.

அந்தப் பாடல்களில் கரைந்து கொண்டிருந்தன, பெருமாளின் பக்தி கீதங்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *