சிறுகதை

கூகுள் பே, போன் பே – ராஜா செல்லமுத்து

..

பழக்கடையில் இருந்து பிளாட்டினம் விற்கும் ஜுவல்லரி வரை போன் பே கூகுள் பே என்று டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாறிவிட்டார்கள் மக்கள் .

கல்லாவில் பணத்தை நிரப்பி எச்சில் தொட்டு எண்ணும் சுகம் சிந்தும் சில்லறைகளின் சங்கீத ச சத்தம் இவைகள் எல்லாம் நாளடைவில் காணாமல் போய்விட்டன.

அந்த அளவிற்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மனிதன் பரிமாற்றங்களைச் செய்து கொண்டிருக்கிறான் .

அது ஒரு வகையில் நிம்மதியான விஷயமும் கூட. கையில் இருக்கும் பணத்தை எண்ணிக் கொடுக்கும் போது மனது வருத்தப்படும் டிஜிட்டல் ஆக இருக்கும் பணத்தை பரிமாற்றம் செய்யும்போது வருத்தம் கொஞ்சம் குறைந்திருக்கும்.

இந்த கோட்பாட்டில் தான் வாழ்ந்து கொண்டு இருந்தான் முரளி. அவனுடைய எல்லாத் தேவைகளும் டிஜிட்டல் ஆகவே இருந்தது.

கையில் பணமும் சில்லறை வைத்துக் கொள்வதில்லை யாராவது கேட்டால்

எதற்கு கையில் பணம்? அதுதான் போன் பே இருக்கு கூகுள் பே இருக்கு ஸ்கேன் பண்ணித் தட்டி விட்டுட்டு போயிட்டே இருக்க வேண்டியது தான்.

இது நமக்கு சவுரியமும் கூட. எவனும் பிக்பாக்கட் அடிக்க முடியாது. பணத்தை வைத்திருக்கிறாேம் ; பயமும் நமக்கு இருக்காது. அதுக்கு மேல நம்ம கையில் இருந்து காசு கொடுக்கும்போது வருத்தமா இருக்கும் .இது எவ்வளவு செலவாகுதுன்னு .

ஆனா டிஜிட்டல்ல பண்ணும் போது நமக்கு அதுல வருத்தம் கம்மியா தான் இருக்கும் என்று

ஏன் பணம் வைத்துக் கொள்ளவில்லை ?என்று கேட்கும் நண்பர்களிடம்

தன்னுடைய விளக்கத்தை விலாவாரியாகச் சொல்வான் முரளி.

தினமும் எங்கு சென்றாலும் இந்த பரிவர்த்தனையில் தான் இயங்கிக் கொண்டிருந்தது அவனது பரிமாற்றங்கள்.

பணத்தைப் போட்டதும் ஒரு பெண்ணின் குரல் இத்தனை ரூபாய் பெற்றுக் கொண்டேன் நன்றி என்று ஆங்கிலத்தில் வரும். அதைக் கேட்டதும் பொருளை விற்பவர்கள் நமக்கு பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தி விட்டார்கள் என்ற நம்பிக்கையில் அந்த வாடிக்கையாளர்களிடமிருந்து விடை பெறுவார்கள்.

நீண்ட காலமாக டிஜிட்டல் பரிவர்த்தனை செய்து கொண்டிருக்கும் முரளி யோசனை செய்தான்.

நாம் இது போல தான் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்து கொண்டிருந்தான்.

ஆனால் அவனின் வங்கி இருப்பு மட்டும் குறையவே குறையாது. இது என்ன ஆச்சரியம் ? என்று அவனுக்கு மட்டுமே தெரிந்த விஷயம் .

ஒரு நாள் ஒரு கடையில் சாப்பிட்டு விட்டு டிஜிட்டல் பரிவர்த்தனை செய்து கொள்கிறேன் என்று பணத்தை போன் பேயில் போட்டான்

சாப்பிட்ட பணத்திற்காக அந்த பெண்ணின் பதிவு செய்யப்பட்ட குரல் வந்தது.

கடைக்காரன் தன்னை உஷார் படுத்திக் கொண்டு பணம் வந்ததற்கான ஸ்கிரீன் ஷாட் காட்டுங்க என்றான் முரளியிடம் இதைக் கேட்ட முரளி அதான் பணம் போயிருச்சுல்ல பிறகு எதுக்கு ஸ்க்ரீன் ஷாட் கேக்குறீங்க என்றான்

இல்ல ரொம்ப காலமா இந்த ஓட்டல்ல தான நீ சாப்பிடுற? ஒரு நம்பிக்கையில் நீ ஃபோன் பேல பணம் போடுறேன்னு நினைச்சுட்டு இருந்தோம். வாய்ஸ் மட்டும் தான் வருது . ஆனா எங்க வங்கி கணக்கில பணம் ஏறலயே இது என்ன? என்று தெரிஞ்சுக்கிறதுக்காக தான் இன்னிக்கி ஒன்ன கேட்டேன் என்றான் கடைக்காரன்.

சுற்றி இருந்த ஆட்கள் எல்லாம் ஏதோ ஒரு பிரச்சனை என்று சூழ்ந்து கொண்டார்கள்.

உண்மையைச் சொல்லு என்ன பண்ணி வச்சிருக்க ? என்று முரளியைச் சட்டையை பிடித்து கேட்டான் கடைக்காரன்

பதில் சொல்ல முடியாமல் விழித்தான் முரளி.

சார் நான் பண்ணது தப்புதான் என்ன மன்னிச்சிடுங்க என்றான்.

எவ்வளவு நாளா இந்த மாதிரி ஃபிராடுத்தனம் பண்ணிட்டு இருக்க? என்று கேட்டபோது

பல வருஷமா சார் என்றான்.

சுற்றி இருந்தவர்களுக்கு எல்லாம் வியப்பாக இருந்தது.

இது எப்படி சாத்தியம்? முரளியே தன் தவறை வாய் திறந்து சொன்னான்.

சார் விஞ்ஞானம் என்னென்னமோ நல்லதையும் தப்புகளையும் நமக்கு கத்துக் கொடுத்திருக்கு . நான் தப்ப மட்டும் எடுத்துக்கிட்டேன். இந்த வாய்ஸ ரெக்கார்ட் பண்ணி வச்சுக்கிட்டேன். எவ்வளவு பணம் போடுறோமோ அதை நான் கிளிக் பண்ணனும்னா. எவ்வளவுக்கு நாம பொருட்களை இல்ல கடைக்கு தர வேண்டியது இருக்காே அந்த பணமும் வாய்ஸும் மட்டும் தான் வரும். ஆனா நம்ம பணம் போகாது. இது ஒரு விதமான டெக்னிக் சார் ஸ்கேன் பண்ற மாதிரி பண்ணுவேன். ஆனா வெளில வந்துட்டு ஏற்கனவே நான் ஸ்டோர் பண்ணி வச்சிருக்கிற வாய்ஸ் ரெக்கார்ட் ஆன் பண்ணுவேன். எவ்வளவு பணம் செலுத்தணுமோ அந்த பணத்தை டிக் பண்ணுவேன். அந்த பணம் பாேயிரும் என்று அவன் அதை செய்து காட்டிய போது சுற்றி இருந்தவர்களுக்கு எல்லாம் வியப்பாகப்பட்டது.

எவ்வளவு பித்தலாட்டம், ஃபிராடு பண்றாங்க. இனிமே எவன்கிட்டயும் போன் பே யும் வேணாம் எதுவும் வேணாம். கையில காச குடுத்து சாப்பிட்டு போங்க

என்று போன் பே செய்யும் க்யூ ஆர் கோட்டை தூக்கி எறிந்தான் கடைக்காரன்

முரளியை அங்கிருப்பவர்கள் நையப் புடைத்தார்கள். இருந்தாலும் ஒரு சிலர் முரளியை அடித்து விட்டு அவனைத் தடவி கொடுத்தார்கள்.

தம்பி அந்த தொழில்நுட்பத்தை எங்களுக்கும் கொஞ்சம் சொல்லி தாரியா ? என்று அங்கிருந்தவர்கள் கேட்டபோது

ரத்தம் வழியும் கால்களோடு அந்த இடத்தை விட்டுத் தப்பித்து ஓடினான் முரளி.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *