சிறுகதை

குள்ளநரிக் கூட்டம் – மு.வெ.சம்பத்

முருகன் எப்போதுமே பொது நல சேவை செய்வதில் ஆர்வம் உள்ளவர். அவருடன் இணைந்த அவர் மனைவியும் சமூக சிந்தனை நிறைந்தவராக அமைந்ததில் முருகன் ஆனந்தம் அடைந்தார்.

இவர் வசிக்கும் பகுதிகளில் இவர் சமூக சேவை செய்வதை மக்கள் வரவேற்றதோடு மட்டுமல்லாமல் இவருக்கு உதவிகள் செய்தனர்.

நாளடைவில் இவர் தொண்டு செய்வது பல இடங்களுக்குப் பரவி இவர் பெயர் பிரபலமானது. இதன் விளைவாக இவரைத் தேர்தலில் நிற்கும்படி மக்கள் வற்புறுத்தி நிற்க வைத்து சட்டசபைக்கு சட்ட மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்தனர். இவர் தனிப்பட்ட முறையில் கட்சி சார்பில்லாமல் நின்று வென்றார். தனக்கு வரும் மாத ஊதியத்தில் பாதியை மக்களுக்கு வசதி ஏற்படுத்த செலவிடுவார். இவர் பகுதியில் சுகாதார முறைப்படி தண்ணீர், தரமான கழிவுநீர் வடிகால், வீடுகள் தோறும் கழிப்பறை வசதி, விழாக்கள் நடத்த மண்டபம், பொது நூலகம், விளையாட்டுத் திடல் போன்ற பல வசதிகளை ஊர் மக்களுடன் சேர்ந்து செய்தார். தெருக்கள் சுத்தமாக வைத்திருக்க மக்களிடம் நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தி இருந்தார். பக்கத்து கிராமங்களில் விவசாயம் நல்ல முறையில் நடைபெற தன்னால் இயன்ற உதவிகளைச் செய்தார். பிள்ளைகள் படிக்க நல்ல சுகாதாரமான பள்ளியை ஊர் மக்கள் ஒத்துழைப்புடன் கட்டி நல்ல ஆசிரியர்களை அமர்த்தி தரமான கல்வி கிடைக்க வழி செய்தார். மக்களுக்கு கைவினைப் பொருட்கள் தயாரிக்க கற்றுத் தந்து அந்த பொருட்களை நல்ல விலைக்கு விற்றுத் தந்து மக்களின் வாழ்வை மேம்படுத்தினார்.

இவரது ஈடுபாடு மற்றும் தன்னலமற்ற சேவை இவரை இரண்டாவது தடவையாக சட்ட மன்ற உறுப்பினராக மக்கள் தேர்ந்தெடுத்தார்கள். இவரிடம் வந்து வேலையை முடித்துக் கொண்டு செல்பவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே சென்றது. இவர் யாரிடமும் ஒரு பைசா கூட எதிர்பார்க்கவும் மாட்டார். வாங்கவும் மாட்டார். இவரை பிழைக்கத் தேரியாத ஆள் என்று இவர் நேர்படவே கூறுபவர்கள் உண்டு. இதற்கெல்லாம் முருகன் தனது புன்னகையையே பதிலாக தருவார்.

சட்ட மன்றத்தில் கேள்வி நேரத்தில் இவர் தவறாமல் கலந்து கொண்டு தனது பகுதிப் பிரச்னைகளை முன் வைப்பார். ஆளுங்கட்சி அமைச்சர்களுடன் இணக்கமாகச் சென்று பல காரியங்களை முடித்துக் கொள்வார்.

இவருடன் சில நாட்களாக கண்ணாயிரம் மற்றும் கந்தன் இருவரும் இவருடன் ஒற்றிக் கொண்டார்கள். முருகன் இருவரிடமும் சற்று விலகியே இருந்தார். இருந்தாலும் அவர்கள் முருகன் பின்னேயே தொடர்ந்தார்கள்.

சில நாட்களில் முருகனுக்கு எல்லாமே இவர்கள் தான் என்ற பாவனையை உண்டாக்க முற்பட்டார்கள் இருவரும்.

முருகன் தனது தந்தை வழிக் காலம் தொட்டு வளர்த்து வந்த பசுத் தொழிலை விடாது தொடர்ந்தார். வைக்கோல் அடுக்க தனி இடம் ஒதுக்கியிருந்தார். கண்ணாயிரம் சில நாட்களாக முருகனிடம் ஏன் நீங்கள் உங்கள் முன்னேற்றத்தில் கவனம் கொள்வதில்லை என்றதும் முருகன் அவரை முறைத்து விட்டு தயவு செய்து ஆதாயம் தேடி இங்கு வராதீர்கள் என்றார். உடனே கந்தன் இடை மறித்து கண்ணாயிரத்தைக் கடிந்து கொண்டு வருகிறோம் என்று கூறி விடை பெற்றார்கள்.

முருகன் சட்ட மன்ற கூட்டங்கள் செல்வதிலும் சில திறப்பு விழாவிற்கு செல்வதென இருந்ததால் அவரால் சொந்த வேலையில் கவனம் செலுத்த இயலவில்லை. அவர் மனைவியே எல்லாவற்றையும் கவனிக்க வேண்டியதாயிற்று. கண்ணாயிரமும் கந்தனும் இவர் வீட்டுக்கு வரவேயில்லை இடைப் பட்ட நாட்களில்.

அன்று சென்னையில் இருவர் முருகனை சந்தித்து அமைச்சரைப் பார்த்து தங்களுக்காக ஒரு காரியம் செய்து கொடுக்குமாறு கூற, முருகன் அவர்களை அழைத்துக் கொண்டு அமைச்சரிடம் சென்று அவர்கள் கோரிக்கையைக் கூறி விட்டு அங்கிருந்து நகர்ந்தார். இதற்குப் பிறகு அவர்கள் முருகனை சந்திக்கவில்லை. அவர்களுக்கு கிடைத்த வேலை பற்றி கூறவுமில்லை. இதைப் பற்றி முருகன் கந்தனிடம் கூற, கந்தன் நன்றி கெட்ட உலகம் சார் என்றார். இதையடுத்து முருகன் நடவடிக்கைகளை கந்தன் கவனிக்க ஆரம்பித்தார்.

அன்று காலை ஊரே பரபரப்பானது. முருகன் வீட்டு வாசலில் வருமான வரித்துறை அதிகாரிகள் வந்திருந்தார்கள். முருகன் வீட்டை சோதனை செய்தார்கள். அங்கு ஏதும் கிடைக்காதவர்கள் சற்று முருகனிடம் வேறேதும் இடம் உங்களுக்கு உள்ளதா எனக் கேட்க, முருகன் மாடுகள் இருக்கும் இடத்தைக் காண்பித்தார். அங்கு அவர்கள் ஆய்வு செய்து கொண்டு வரும் வேளையில் ஒரு இடத்தில் நடக்கும் போது சப்தம் மாறி வர அங்கு தோண்ட அங்கு பெட்டகங்கள் நிறைய அடுக்கி வைக்கப்பட்டு அதில் பணம், நகைகள் நிரப்பப்பட்டிருந்தன. முருகன் தனக்கு எதுவும் தெரியாதெனக் கூற, அதிகாரிகள் மொத்த மதிப்பைக் கணக்கிட்டு வரி ஏய்ப்பு செய்ததாகக் கூறினார்கள். முருகனை தங்களது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார்கள்.

உடனே சுற்றியுள்ள பகுதிகளில் உள்ளவர்கள் எல்லோரும் முருகனை வசை பாடினார்கள். ஒன்றும் தெரியாத பாப்பா சேர்த்ததாம் வைக்கல் போரில் கோடி கோடி என்று நக்கல் பாட்டு வேறு பாடினார்கள். முருகனின் மனைவி இது ஒரு சதி இதை முறியடிப்பேன் என்று வருபவர்களிடம் கூறினார்.

அன்று வருமான வரித்துறை அதிகாரிகள் முருகன் மனைவியை அழைத்து விசாரணை செய்தார்கள். அவர் தனது கணவர் நடவடிக்கையெல்லாம் கூறி விட்டு தனது மனதில் ஒன்று தோன்றுகிறது என்று ஒரு கருத்தைக் கூறினார். மறு நாள் வருமான அதிகாரி எடுத்த நடவடிக்கையில் கண்ணாயிரம் மற்றும் கந்தன் வரவழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப் பட்டார்கள். முதலில் தங்களுக்கு எதுவும் தெரியாது என்றவர்கள் பின் விசாரணையில் கேட்ட கேள்விகளுக்கு ஒரு சமயத்தில் முரண்பாடான கருத்தைக் கூறினர்.

அவர்களை உரிய முறையில் விசாரணை செய்ததில் கந்தன் ஒரு நாள் முருகன் இருவருக்கு செய்ததையும் அவர்கள் தன்னை மறந்ததையும் கூறியதைக் கூறினார். நான் முருகன் அவர்களுக்குத் தெரியாமல் அவர்களைத் தொடர்பு கொண்டு முருகன் அவர்கள் செய்த காரியத்திற்காக பணம் கேட்டார் என்று கூறி அவர்களிடம் பெரிய தொகையைப் பெற்றோம். பின் இரண்டு பேரிடமும் பணம் பெற்றோம். சில நபர்கள் தொடர்பு கிடைத்ததும் அவர்களது கணக்கு வராத பணத்தைக் காப்பாற்றித் தருவதாகக் கூறி பணத்தை வாங்கினோம். அதை வைப்பதற்கு பாதுகாப்பான இடம் தேடியதில் முருகன் அவர்கள் இடம் தான் பாதுகாப்பானது என்று நினைத்து அங்கு நாங்கள் அவருக்குத் தெரியாமல் வைக்கல்போரைத் தேர்ந்தெடுத்து பணத்தை பாதுகாத்தோம். ஏனெனில் முருகன் அவர்களுக்கு நல்ல பெயர் நிலவியதால் அதை பயன் படுத்திக் கொண்டோம், உங்களுக்கு தெரியப்படுத்தியது நாங்கள் அல்ல, எப்படி இது வெளியே தெரிந்தது என்பது எங்களுக்குத் தெரியாது என்றும் முருகன் அவர்களுக்கு இதில் எந்த சம்பந்தமும் இல்லை என்றார்கள். இவர்களுக்கு பணம் கொடுத்தவர்களைத் தொடர்பு கொண்ட போது அது உண்மை என்று தெரிந்ததும் முருகன் அவர்களை அழைத்து அவரிடம் இவற்றையெல்லாம் தெரிவித்து அரசியலில் உள்ளவர்கள் தன்னிடம் சேர்பவர்களை தேர்வு செய்வதில் கவனமாக இருக்க வேண்டுமெனக் கூறி அவரை பிரச்னையிலிருந்து விடுவித்தார்கள்.

மறு நாள் செய்தித்தாள்களில் முருகன் நிரபராதி என்றும் பணத்தைப் பதுக்கியவர்கள் பிடிபட்டார்கள் என்ற செய்தியை படித்த பின் தான் முருகன் நிம்மதியடைந்தார்.

பணம் பாதுகாக்க கொடுத்தவர்களே காட்டிக் கொடுத்தாக அறிந்தார் முருகன். அப்போது முருகனைப் பார்க்க வந்தவர்கள் ஐயா எங்களை மன்னித்து விடுங்கள் என்றனர்.

முருகன் மனைவி தனது செயல் தனது கணவனைக் காப்பாற்றியது என்றும் இனிமேல் எந்த குள்ளநரி கூட்டத்தையும் நம்பி தேர்வு செய்து வீட்டிற்குள் விடக் கூடாதெனவும் முடிவு எடுத்தார்.

அப்போது தொலைக் காட்சியில் சத்தியமே லட்சியமாய் என்ற பாடல் ஒலித்தது. அந்த பாடலில்,

‘‘எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே ,

உன்னை இடர வைத்து

தள்ளப் பார்க்கும் குழியிலே

குள்ளநரி கூட்டம் வந்து குறுக்கிடும்,

நல்லவருக்கு தொல்லை தந்து மயக்கிடும்;

அத்தனையும் தாண்டி காலை முன்வைய்யடா’’

என்ற வரிகளைக் கேட்டு,

முருகன் அவர் மனைவி இருவரும் புன்னகைத்துக் கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *