செய்திகள்

தனிநபர் வருமானத்தில் இந்தியா 138 வது இடம்

இதுதான் 10 ஆண்டு மோடி ஆட்சி நிலைமை : காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை காட்டம்

2014 இல் 100 ரூபாய் இன்று ரூ.60 க்கு சரிவு

சென்னை, ஏப். 05–

ஏழை எளிய மக்களை பாதித்துள்ள மோடியின் ஆட்சியால் தனிநபர் வருவாய் குறைந்துள்ளது போல, ரூபாய் மதிப்பும் சரிந்து போனது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பாஜக மீது குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின விழாவில் டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, பிரதமர் மோடி பேசும் போது, ‘இந்திய பொருளாதாரத்தை 2024 ஆம் ஆண்டிற்குள் 5 டிரில்லியன் கோடி டாலராக – அதாவது இந்திய மதிப்பில் 390 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு உயர்த்தப் போவதாக முழங்கினார். ஆனால், இதுவரை ஒன்றும் நடக்கவில்லை. அதனால் இலக்கை தற்போது 2026 ஆம் ஆண்டிற்கு தள்ளி வைத்து விட்டார்.

138 வது இடத்தில் இந்தியா

மொத்த உள்நாட்டு உற்பத்தி பற்றி பேசுகிற பிரதமர் மோடி, தனிநபர் வருமானம் ரூபாய் 1 லட்சத்து 72 ஆயிரமாக குறைந்திருப்பதை பற்றி கவலைப்படுவதே இல்லை. ஒட்டுமொத்த வளர்ச்சி என்பது குறிப்பிட்ட கார்ப்பரேட்டுகளுக்கு தானே தவிர, பெரும்பாலான இந்திய குடிமக்களுக்கு இல்லை. இதன் காரணமாக தனிநபர் வருமான அடிப்படையில் உலக நாடுகளின் வரிசையில் இந்தியா 138-வது இடத்தில் இருக்கிறது.

2013 ஜூலையில் அகமதாபாத் பொதுக்கூட்டத்தில் மோடி பேசும் போது, ‘நாடு சுதந்திரம் அடைந்த போது, இந்தியாவின் ஒரு ரூபாய் மதிப்பு அமெரிக்காவின் ஒரு டாலருக்கு இணையாக இருந்தது. காங்கிரஸ் ஆட்சியில் ஏற்பட்ட பணவீக்கத்தால் ரூபாயின் மதிப்பு சரிந்து போனது” என்று குறிப்பிட்டிருந்தார். ஒரு நாட்டின் பொருளாதார வளத்தை டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பின் மூலமாகத் தான் முடிவு செய்யப்படுகிறது. அப்படி பார்த்தால், 2014 இல் ரூபாய் 54.78 ஆக இருந்த ரூபாயின் மதிப்பு, 2024 இல் மோடியின் 10 ஆண்டு ஆட்சியில் ரூபாய் 83.59 ஆக கடுமையாக சரிந்துள்ளது.

இதன்மூலம் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 சதவிகிதம் குறைந்துள்ளது. ஒருவரிடம் 100 ரூபாய் இருந்தால் அதன் இன்றைய மதிப்பு 60 ரூபாய் மட்டும் தான். இதுதான் மோடியின் டாலர் புரட்சி. இதன் காரணமாக இந்திய மக்களின் வாங்கும் சக்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி தரவுகளின்படி வருமான வரி, கார்ப்பரேட் வரி உள்ளிட்ட நேரடி வரி வசூல் 2023 ஆம் நிதியாண்டில் மொத்த தொகை ரூபாய் 14 லட்சத்து 42 ஆயிரம் கோடி. ஆனால், ஜி.எஸ்.டி. உள்ளிட்ட மறைமுக வரி வசூல் ரூபாய் 29 லட்சத்து 8 ஆயிரம் கோடி.

மக்களை நேரடியாக பாதிக்கிற மறைமுக வரியான மொத்த ஜி.எஸ்.டி. வரி வசூலில் 64 சதவிகிதமானது 50 சதவிகித அடித்தட்டு மக்களிடமிருந்து வசூலிக்கப்படுகிறது. ஆனால், 10 சதவிகிதம் உள்ள பெரும் பணக்காரர்களிடமிருந்து வெறும் 3 சதவிகித ஜி.எஸ்.டி. மட்டுமே வசூலிக்கப்படுகிறது என்பது எவ்வளவு கொடுமை.

கடன் சுமை அதிகரிப்பு

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2004 முதல் 2014 வரை ஒன்றிய அரசின் மொத்த கடன் ரூபாய் 55 லட்சம் கோடியாக இருந்தது. அது தற்போது 183 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 67 ஆண்டுகளில் ரூபாய் 55 லட்சம் கோடியாக இருந்த கடன், கடந்த 10 ஆண்டுகளில் 128 லட்சம் கோடி கடன் சுமையை பா.ஜ.க. ஏற்றியுள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 87 சதவிகிதம் ஆகும். இதுதான் மோடி சொல்லும் பொருளாதார புரட்சி. இதே நிலை நீடித்தால் இந்தியா திவால் நிலையை நோக்கி செல்வதை தடுக்க முடியாது.

2014 ஆம் ஆண்டிற்கு முன்பு ஒவ்வொரு இந்திய குடிமகன் மீதும் இருந்த கடன் ரூபாய் 43,000. இப்போது 2024 இல் மோடியின் ஆட்சியில் இந்த கடன் ரூபாய் 1 லட்சத்து 27 ஆயிரமாக உயர்ந்திருக்கிறது. இதுதான் நிர்மலா சீதாராமனின் நிதி மேலாண்மை லட்சணம் ?

எனவே, கடந்த 10 ஆண்டுகளாக பிரதமர் மோடியின் ஆட்சியால் இந்திய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. விலைவாசி உயர்ந்திருக்கிறது. வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. மாநில உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு திட்டமிட்டு வஞ்சிக்கப்பட்டு வருகிறது. இதற்கெல்லாம் விமோசனம் காண பாசிச, சர்வாதிகார பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுகட்ட இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு தமிழ்நாட்டு வாக்காளர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *