செய்திகள்

மழைக்காலங்களில் பின்பற்ற வேண்டிய மின் பாதுகாப்பு வழிமுறைகள் என்னென்ன?

அரசு தலைமை மின் ஆய்வாளர் விளக்கம்

சென்னை, டிச.3-–

மழைக்காலங்களில் பின்பற்ற வேண்டிய மின் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த விளக்கத்தை அரசு தலைமை மின் ஆய்வாளர் வெளியிட்டுள்ளார்.

வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரம் அடைந்துள்ளது. இந்த நிலையில் மழைக் காலங்களில் பின்பற்ற வேண்டிய மின் பாதுகாப்பு வழிமுறைகளை அரசு தலைமை மின் ஆய்வாளர் ஞா.ஜோசப் ஆரோக்கியதாஸ் வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

* மின்கம்பங்களில் ஆடு, மாடு போன்ற வீட்டு விலங்குகளை கட்டக்கூடாது. மின் கம்பங்களில் பந்தல், கொடிக்கம்பி மற்றும் கயிறு போன்றவற்றை கட்டக்கூடாது. எக்சாஸ்ட் மின்விசிறிகள் மற்றும் வீட்டு உபயோக மின் சாதனங்களை தவறாமல் சுத்தம் செய்வது தீ மற்றும் மின் அதிர்ச்சி அபாயங்களை தடுக்க உதவும்.

* மின்சார மேல்நிலை கம்பிகளின் அருகில் பட்டங்கள் பறக்கவிடவேண்டாம். பவர் பிளக்குகளுக்குள் குச்சி, கம்பி போன்றவற்றை நுழைக்க வேண்டாம். எந்த திரவத்தையும் பயன்படுத்தி சுவிட்சுகளை சுத்தம் செய்யவேண்டாம். ஈரமான நிலையில் மின்சாதனங்களை இயக்க வேண்டாம்.

* பிளக் சுவிட்சை அணைத்த பிறகே மின் விசிறி, அயர்ன்பாக்ஸ், செல்போன் சார்ஜர் போன்றவற்றை பிளக்கில் இணைக்க வேண்டும். மின்சார சார்ஜரில் இணைப்பில் இருக்கும்போது செல்போனை பயன்படுத்தக்கூடாது. சுவிட்ச் போர்டு, மின்மோட்டார், தண்ணீர் பம்பு மோட்டார் போன்றவற்றின் மீது தண்ணீர், மழைநீர் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இடி, மின்னலின்போது மின்னணு

சாதனங்களை பயன்படுத்தாதீர்கள்

* இடி அல்லது மின்னலின்போது கான்கிரீட் கூரையிலான பெரிய கட்டிடம், வீடு போன்ற பெரிய கட்டிடங்களிலோ, உலோகத்தால் மேலே மூடப்பட்ட பஸ், கார், வேன் போன்ற வாகனங்களிலோ தஞ்சம் அடையுங்கள். திறந்த வெளியிலோ, மரத்தின் அடியிலோ, பஸ் நிறுத்தங்களின் கீழோ, நீச்சல் குளத்தின் அருகிலோ தஞ்சம் அடையவேண்டாம். டி.வி., மிக்சி, கிரைண்டர், கணினி, செல்போன், மின், மின்னணு சாதனங்கள் போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம்.

* மின் மாற்றிகள், மின்பெட்டிகள், மின் கம்பிகள் ஆகியவற்றை தொடவும், அதற்கு அருகில் செல்லவும் கூடாது. மின்கம்பிகள் அறுந்து கிடந்தால் தொட முயற்சிக்க வேண்டாம். கீழே விழுந்த மின்கம்பியில் இருந்து குறைந்தபட்சம் 30 அடி தூரத்தில் நிற்கவும், மின்கம்பத்தின் அருகில் அல்லது லைனை தொடும் எதனையும் நெருங்க வேண்டாம். மின்சார மேல்நிலை கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை அகற்ற மின்துறை அலுவலர்களை அணுக வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *