செய்திகள் நாடும் நடப்பும்

கல்விப் புரட்சியே பொருளாதார வளர்ச்சி: நோபல் பரிசுகளைக் குறி வைக்க இந்தியா தயார்


ஆர். முத்துக்குமார்


ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் விடைபெற்று செல்லும் நேரத்தில் நோபல் பரிசுகளை வென்ற நாட்டின் கல்வி சாதனைகள் இந்தியா உட்பட பல நாடுகளுக்கு வியப்பைத் தரத்தான் செய்கிறது.

வெடிகுண்டுகளை வடிவமைத்து பல ஆயிரம் கோடிகள் சம்பாதிக்கும் வல்லமையை ஆல்பிரட் நோபல் பெற்றார். பெரும் பணக்காரராக உயர்ந்தாலும் உலகெங்கும் நாச கும்பலை உருவாக்கி சர்வநாச சக்தியாக இருக்கும் துப்பாக்கியை அவர்களிடம் வழங்கி விட்டோமே என்ற கவலையில் தான் இறந்த பிறகு உலக நன்மைக்கு வழிவகுக்கும் விஞ்ஞானிகள், அறிவாளிகள், சமூக ஆர்வலர்களுக்கு உலகளாவிய அங்கீகாரமும் பெரும் நிதியையும் பரிசாக கொண்ட நோபல் பரிசை அறிவித்தார்.

இதுவரை அமெரிக்கா 400 நோபல் பரிசுகளையும் பிரிட்டன் 137 மற்றும் ஜெர்மனி 111 நோபல் பரிசுகளையும் இவ்வாண்டு வரை பெற்று முதல் மூன்று இடத்தை பிடித்துள்ளது.

தற்போது யுத்த சிக்கலில் மாட்டிக்கொண்டு தவிக்கும் இஸ்ரேல் 13 நோபல் பரிசுகளை வென்றுள்ளது. அவர்கள் நாட்டு பிரஜைகள் அமெரிக்க பல்கலைக்கழகங்களிலும் இங்கிலாந்து, ஜெர்மனி உட்பட பல நாடுகளில் நடத்திய ஆய்வுகளுக்கு அதிக அளவில் இந்த உயர் விருதை பெற்று சாதித்துள்ளார்கள்.

ஒரு நாட்டின் மக்கள் தொகையில் அவர்கள் வாழும் பகுதியில் ஒரு சதுர கிலோ மீட்டரில் தடுக்கி விழுந்தால் நோபல் பரிசு வென்றவர் வீடு அதிகம் இருக்கும் நாடாக இருப்பது இஸ்ரேலின் பெருமையாகும்.

சீனாவில் 8 பேர் மட்டுமே நோபல் பரிசு வென்றுள்ளனர். இந்தியர்கள் 12 பேர் இதுவரை நோபல் பரிசை பெற்று இருக்கிறார்கள்.

ஆசிய பகுதியில் மிக அதிக நோபல் பரிசு வென்றவர்கள் ஜப்பானியர்கள் ஆவர். உலக பட்டியலில் ஐந்தாவது இடத்தில் 29 பேர் வென்று இப்பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

ஜனத்தொகை, பொருளாதார நிலைமை என்பன ஓர் வரையறை கிடையாது, ஆராய்ச்சியை வளர்க்க தடை போடாது ஆதரித்தால் உச்சத்தை எட்டலாம் என்பதற்கு கனடா –28, சுவிட்சர்லாந்து – 27, ஆஸ்திரியா – 22 பேர் இவ்விருதை தட்டிச் சென்றிருப்பதே நற்சான்றாகும்.

மிகச்சிறிய நாடுகளான பிரான்சில் 71 பேரும் ஸ்வீடன் நாட்டில் 32 பேரும் இவ்விருதை பெற்றிருப்பதை நாம் மறந்து விடக்கூடாது.

படிப்பறிவில் அமெரிக்கா 90 சதவிகித வளர்ச்சியை எட்டி இருக்கிறது. பின்லாந்து, லக்சம்பர்க், நார்வே, உஸ்பெகிஸ்தான் நாடுகளில் 100 சதவிகித படிப்பறிவு இருப்பதை ஐ.நா. அறிக்கை கூறுகிறது.

வளர்ந்த பொருளாதாரங்களான அமெரிக்காவிலும் நியூசிலாந்திலும் பிரிட்டனிலும் 99 சதவிகிதமும் உக்ரைனில் சற்றே கூடுதலாக 99.76 சதவிகிதமும் ரஷ்யாவில் 99.72 சதவிகிதமும் இருக்கிறது.

சீனாவில் 96 சதவிகிதமும் இந்தியாவிலோ 72.23 சதவிகித படிப்பறிவு இருப்பது உலக ஜனத்தொகை பட்டியலில் முதல் இரண்டு இடத்தை பிடித்துள்ள நாடுகளின் நிலைமையாகும்.

இந்தியாவில் படிப்பறிவு ஏன் பின்தங்கி இருக்கிறது? மிக பண்டைய நாகரீகமாக இருக்கும் நாம் 18–ம் நூற்றாண்டில் இருந்தே அதாவது ஆங்கிலேயர் பிடியில் அடிமைப்பட்டு இருந்த காலம் முதலே படிப்பறிவில் பின்தங்கி விட்டோம்.

விடுதலை பெற்ற 1947–ம் ஆண்டு முதலே கல்விக்கு முக்கியத்துவம் தந்து படிப்புக்கு முக்கியத்துவம் தர துவங்கினாலும் பிற துறைகளுக்கு தரப்பட்ட நிதி முதலீடு, கல்வி கட்டுமானத்திற்கு குறிப்பாக உயர்கல்வி கட்டுமானத்திற்கு தரும் வசதியை பெறவில்லை.

இந்நிலையில் 100 சதவிகிதம் பேர் எழுத படிக்க வைப்பதில் நாம் முழு கவனத்தையும் செலுத்தினோம்; இன்று நமது இளைய தலைமுறை படிப்பறிவில் சிறந்தாலும் உயர் ஆய்வுகளுக்கு அமெரிக்கா அல்லது ஐரோப்பிய நாடுகளில் சென்று நமது அறிவு திறனை முதலீடாக செலவு செய்கிறோம்.

இதன் பயனாக உருவாகும் பல ஆராய்ச்சிகளின் இறுதி கட்ட வெற்றியில் நமது இளைஞர்களின் பெயர் இடம் பெறாது போனாலும் நமது பங்களிப்பு பெரும் சதவிகிதம் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

வருங்காலங்களில் ஆராய்ச்சி துறைக்கென நிதி பங்களிப்புக்கு பிரத்யேக மத்திய மாநில பட்ஜெட்டுகளை கொண்டு வரவேண்டிய காலம் வந்துவிட்டது.

இந்தியா இன்று உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இருக்கிறது. இங்கிருந்து முதல் நிலைக்கு செல்ல வேண்டிய ஊக்க சக்தி விஞ்ஞான ஆய்வுகளாகும். புதிய கண்டுபிடிப்புகள் தனிநபர் வருமானத்தை பல மடங்கு உயர்த்தும் வல்லமை கொண்டது. நாட்டின் வளத்தை அழிக்காமல் வளர ஏதுவான தளமும் ஆகும்.

இப்படி பிரத்யேக ஆய்வுகளுக்காக பட்ஜெட் அறிவிப்பை ஏற்படுத்தினால் நம் ஆராய்ச்சியாளர்கள் அடுத்த 10 ஆண்டுகளில் நோபல் பரிசுகளை ஆண்டுக்கு ஆண்டு பெறும் செய்தியே அக்டோபர் மாதங்களில் உலக ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக இருக்கும். அதை நோக்கி பயணிக்கத் தயாராவோம்!

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *