செய்திகள்

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரிநீர் திறப்பு: 4 ஆயிரம் கன அடியாக குறைப்பு

புழல் ஏரியிலிருந்து நீர் திறப்பு 2 ஆயிரம் கன அடியாக உயர்வு

காஞ்சிபுரம், நவ. 30–

செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்தின் அளவு சற்று குறைந்து வருவதால், ஏரியில் இருந்து இன்று காலை திறக்கப்பட்ட உபரி நீர் திறப்பு 6,000 கன அடியிலிருந்து 4 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல புழல் ஏரியிலிருந்து நீர் திறப்பு 2 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து வருவதால், சென்னை குடிநீர் ஏரிகளுக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை, செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஆகிய ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகளுக்கு நீர்வரத்தும் அதிகரித்து உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் அருகே செம்பரம்பாக்கம் பகுதியில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி 25.51 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ளது. ஏரியின் நீரளவு உயரம் 24 அடி, ஏரியின் முழுக் கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடி.

செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு இன்று 3,098 கன அடியாக அதிகரித்தது. ஏரியின் பாதுகாப்பை கருதி நேற்று 1,500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்ட நிலையில், இன்று காலை உபரி நீர் திறப்பு 2,566 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. தொடர்ந்து உபரி நீர் திறப்பு 6,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. மழை சற்று நின்று வரத்து குறைந்துள்ளதால் உபரி நீர் திறப்பு 4 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியின் உபரி நீர் செல்லும் கால்வாயின் கரையோரம் வசிக்கும் வழுதலம்பேடு, சிறுகளத்தூர், திருமுடிவாக்கம், குன்றத்தூர், காவனூர் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் அடையாற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுள்ளது.

புழல் ஏரியில்…

புழல் ஏரியின் முழுக் கொள்ளளவு 3,300 மி. கன அடி. தொடர் மழை காரணமாக புழல் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. ஏரியின் அளவு 3,074 மில்லியன் கன அடியாக உள்ளது. ஏரிக்கு நீர் வரத்து வினாடிக்கு 389 கன அடியாக உள்ளது.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரிக்கு வரும் உபரி நீரை அணையின் பாதுகாப்பு கருதி இன்று காலை 2,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான நாரவாரிகுப்பம், வடகரை, கிராண்ட்லைன், புழல், வடபெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம், கொசப்பூர், மணலி மற்றும் சடையான்குப்பம் ஆகிய பகுதிகளில் கால்வாயின் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *