செய்திகள்

கடுமையான பனி மூட்டம்: வட மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்

டெல்லியில் 9 விமானங்கள் திருப்பி விடப்பட்டன

புதுடெல்லி, ஜன. 14–

வடமாநிலங்களில் கடுமையான பனி மூட்டம் நிலவுவதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் விமான, ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் தரையிறங்க முடியாததால், 9 விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன.

வட மாநிலங்களில் கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது. வாட்டி வதைக்கும் குளிரால் மக்கள் நடுங்கி வருகிறார்கள். தலைநகர் டெல்லியில் காலை வேளையில் வெப்ப நிலை 3.6 டிகிரி செல்சியசுக்கும் கீழ் செல்வதால் கடுமையான குளிர் காணப்படுகிறது. கடுமையான பனி மற்றும் குளிர் காரணமாக வட மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் கூறியதாவது:-

இமாச்சல பிரதேசம், டெல்லி, உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களின் ஒரு சில இடங்களில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது. உத்தரபிரதேசம், டெல்லி, பஞ்சாப், அரியானா ஆகிய மாநிலங்களில் கடுமையான பனி மூட்டம் நிலவும். பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் குளிர் அதிகமாக காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடும் பனி மூட்டத்தால் 50 மீட்டருக்கும் குறைவாக உள்ள தொலைவு மட்டுமே கண்ணுக்கு புலப்பட்டால் ரெட் அலர்ட் எச்சரிக்கையும், 50–200 மீட்டர் வரை தெரிந்தால் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக 20க்கும் மேற்பட்ட ரெயில்கள் தாமதமாக புறப்பட்டன. 10க்கும் மேற்பட்ட விமானங்களின் வருகை, புறப்பாடுகளில் தாமதம் ஏற்பட்டன. இதனால் பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளானார்கள்.

9 விமானங்கள்

திருப்பி விடப்பட்டன

மோசமான வானிலை காரணமாக விமானங்கள் தரையிறக்க இயலாத சூழல் நிலவுகிறது. டெல்லி வந்தடைய வேண்டிய 9 விமானங்கள் வேறு நகரங்களுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளன.

அதிகாலை 4.30 முதல் 10.30 வரை தரையிறங்க வேண்டிய விமானங்கள் திருப்பப்பட்டுள்ளன.

பன்னாட்டு விமானம் ஒன்று முதலில் மும்பைக்குத் திருப்பப்பட்டது. அங்கும் தரையிறக்க முடியாததால் ஜெய்ப்பூருக்குத் திருப்பப்பட்டுள்ளது.

டெல்லியின் பல்வேறு இடங்களில் காற்றின் தரக் குறியீடு மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது. ஆனந்த் விஹார்–478, நேரு மைதானம்–465, இந்திரா காந்தி விமான நிலையம்––465 என்ற நிலையில் காற்றின் தரக் குறியீடு உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *