செய்திகள்

விவசாயிகளின் சமூக ஊடகங்களை முடக்கியதில் உடன்பாடு இல்லை: எக்ஸ் தளம் அறிவிப்பு

டெல்லி, பிப். 22–

விவசாயிகளின் போராட்டம் தொடர்பான பல கணக்குகள் ஒன்றிய அரசால் முடக்கப்பட்ட உத்தரவில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என எக்ஸ் தளம் தெரிவித்துள்ளாது.

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. விவசாயிகள் போராட்டம் பிப்ரவரி 13 ந்தேதி தொடங்கி, இன்று 10-வது நாளாகப் பஞ்சாப்-அரியானா எல்லையில், விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் விவசாயிகள் சங்கங்கள் மற்றும் அரசுகளுக்கு இடையே பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்துள்ளன.

இந்நிலையில், விவசாயிகளின் போராட்டம் தொடர்பான கணக்குகள் மற்றும் இடுகைகளை இடைநிறுத்த எக்ஸ் தளத்திற்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டது. உள்துறை அமைச்சகத்தின் கோரிக்கையை ஏற்று மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 69A பிரிவின் கீழ் பிப்ரவரி 14 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இந்த உத்தரவுகள் வெளியிடப்பட்டன.

177 ஊடகக் கணக்குகள் முடக்கம்

மேலும் உள்துறை அமைச்சகத்தின் கோரிக்கையின் பேரில், சட்டம் ஒழுங்கை பராமரிக்க 177 சமூக ஊடகக் கணக்குகள் மற்றும் இணையதள இணைப்புகளைத் தற்காலிகமாக மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ், ஸ்னாப்சாட் மற்றும் சில சமூக ஊடக தளங்களின் கணக்குகள் மற்றும் இணைப்புகளை முடக்க ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து அனைத்து கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த நடவடிக்கை எடுத்ததில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என எக்ஸ் தளம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து எக்ஸ் நிறுவன பதிவில், ‘ஒன்றிய அரசின் உத்தரவுக்கு ஏற்ப இந்தியாவில் மட்டுமே இந்தக் கணக்குகள் மற்றும் இடுகைகளை முடக்கியுள்ளோம். எவ்வாறாயினும், இந்த நடவடிக்கையில் நாங்கள் உடன்படவில்லை, விவசாயிகளின் போராட்டத்திலும் கருத்துச் சுதந்திரம் வேண்டும் என்று நம்புகிறோம்.

எங்கள் கொள்கைகளுக்கு இணங்க, பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு இந்த நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பையும் வழங்கியுள்ளோம். ‘சட்டக் கட்டுப்பாடுகள் காரணமாக, நிர்வாக உத்தரவுகளை வெளியிட முடியவில்லை. ஆனால் வெளிப்படைத்தன்மைக்காக அவற்றைப் பகிரங்கப்படுத்துவது அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *