செய்திகள்

உடல் உறுப்புக்களை தானம் செய்த பெண்ணுக்கு அரசு மரியாதை : தெருவுக்கு அரவது பெயர் சூட்டப்பட்டது

குடும்பத்தினர் நெகிழ்ச்சி

சென்னை, ஜன. 17–

உடல் உறுப்புக்களை தானம் செய்திருக்கும் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் ஓய்வு பெற்ற கண்காணிப்பாளர் கற்பகாம்பாள் எனப்படும் பானுமதியின் மறைவுக்கு தமிழக அரசு சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

மேலும் அவர் குடியிருந்து வந்த அயப்பாக்கம் ஊராட்சியில் தெருவின் பெயருக்கு ‘பானுமதி அம்மாள்’ என்று பெயர் சூட்டப்பட்டு, பெயர்ப்பலகை வைக்கப்பட்டது.

மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் பானுமதி. வயது 68. ‘திடீர்’ உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். போக்குவரத்துக் கழகத்தில் டெலிபோன் ஆப்பரேட்டராக வேலைக்குச் சேர்ந்தவர், 2014ம் ஆண்டில் ஓய்வு பெற்றார். கணவர் விஜயகுமார். 3 மகன்கள் (வி.பாலசுப்பிரமணியம், சரவணன், வினோத்குமார்), ஒரு பேரன், 2 பேத்திகள். சவிகரண்.

உடல்நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார். பானுமதி அம்மாளின் இருதயம், நுரையீரல், ஈரல், கண்கள் ஆகிய உடல் உறுப்புக்களை குடும்பத்தார் தானம் செய்தனர்.

இந்நிலையில் திருவள்ளூர் துணை கலெக்டர் நேரில் வந்து, பானுமதி அம்மாள் உடல் மீது மாலை வைத்து அரசு சார்பில் மரியாதை செலுத்தினார். பின் உடல் தகனம் செய்யப்பட்டது.

சிறப்பு தீர்மானம்

பானுமதி வாழ்ந்த தெருவுக்கு ‘பானுமதி அம்மாள் தெரு’ என, பெயரிட ஊராட்சி மன்றம் சார்பில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, அயப்பாக்கம் ஊராட்சி தலைவர் வீரமணி கூறுகையில், ‘‘பொது மக்கள் பிரச்சனைகளில், பானுமதி அம்மாள் தாமாக முன் வந்து குரல் கொடுத்து வந்தார். அவரது நினைவாக, அவர் வாழ்ந்த தெருவுக்கு அவர் பெயர் வைக்க சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். இம்மாதம் 26ந் தேதி நடக்கும் கிராம சபை கூட்டத்தில், அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த உள்ளோம்’ என்றார்.

அரசு சார்பில் இறுதி மரியாதை, அவர் வசித்த தெருவுக்கு அவரது பெயர் வைத்திருப்பது குறித்து குடும்பத்தினர் நெகிழ்ச்சி அடைந்து அரசுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவிப்பதாக சகோதரி பவானி ராம்கோபால் தெரிவித்தார்.

இருக்கும்போது சமூக ஆர்வலராக சமூகப்பணியைத் தொடர்ந்தவர், மரணத்துக்குப் பிறகு 4 பேருக்கு வாழ்க்கை அளித்திருப்பதில் குடும்பம் நெகிழ்ச்சியுடன் பெருமை கொள்வதாகவும் அவர் கண்கலங்கியபடி தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *