செய்திகள் நாடும் நடப்பும்

சினிமாத் துறைக்கு பொற்காலம், ஆனால் ரசிகர்கள் வராமல் போவதால் தவிக்கும் திரையரங்குகள்!


ஆர். முத்துக்குமார்


பண்டிகை நெருங்கி விட்டால் தமிழகமெங்கும் என்ன படம் ரிலீசாகப் போகிறது? என்ற விவரம் எல்லோர் இல்லங்களிலும் இருக்கும். சமீப காலங்களில் உச்ச நட்சத்திரங்களின் படங்களைத் தவிர திரையரங்குகளில் ஆள் நடமாட்டம் இருப்பதாகவே தெரியவில்லை.

ஆங்கிலப் படங்களும் வேற்று மொழி திரைப்படங்களும் பெருவாரியாக தமிழ் அல்லது ஆங்கிலத்தில் அடி வசனங்களுடன் இருப்பதால் ஓடிடி தளங்களில் ரசிக்கப்படுகிறது.

இது தமிழ்த் திரை உலகிற்கு பெரிய இழப்பாக இருக்காது என்றாலும் திரையரங்கங்கள் வெறிச்சோடி காணப்படுவதால் அங்கேயெல்லாம் அடுத்த 5 ஆண்டுகளில் புது மால்களாகவும் அடுக்குமாடி வீடுகளாகவும் அல்லது திருமணமண்டபமாகவும் மாறி விடும்!

திரையரங்குகளை நம்பி வாழும் பலருக்கு இனி இதில் பிழைப்பு நடத்தவே முடியாது என்று புரிந்து கொண்டு வேறு வர்த்தக முதலீடுகள் பற்றி தீவிரம் காட்ட ஆரம்பித்து வருவது தான் உண்மை.

இந்நிலையில் கடந்து சென்ற 2023ல் தமிழ் சினிமாத்துறை ரூ.3500 கோடி வருமானம் பெற்று வசூல் சாதனை புரிந்துள்ளது. இந்த ஆண்டில் வெளியான 256 படங்களில் வெற்றி பெற்ற படங்கள் வெறும் 24 தான். இது மொத்தம் வெளியான திரைப்படங்களில் 9% மட்டுமே. இதில் பல படங்கள் ரூ.100 கோடி வசூலைத் தொட்டிருக்கிறது. அதே நேரம் வெளியான மொத்தப் படங்களில் 188 படங்கள் சிறு பட்ஜெட் படங்கள். இதில், 4 படங்கள் மட்டுமே வெற்றி பெற்றிருக்கினறன. 10–15 படங்கள் லாபம் இல்லா விட்டாலும் போட்டது கிடைத்ததால் தப்பித்து இருக்கிறது. மற்ற 168 திரைப்படங்கள் பலத்த நஷ்டத்தைச் சந்தித்திருக்கின்றன.

கொரோனா காலக்கட்டத்தில் திரைப்படங்களின் ஓடிடி பிரீமியர் அதிக அளவு இருந்தது. 2021ம் ஆண்டில் 45 படங்கள் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாயின. இதனால் திரையரங்ககளுக்கு பெரும் அச்சுறுத்தலாக ஓடிடி தளங்கள் உருவெடுத்து விட்டதாகக் கூறப்பட்டது. நேரடியாக ஓடிடி தளங்களில் படங்களை வெளியிடக்கூடாது என்று தியைரங்க உரிமையாளர்களிடம் இருந்து எதிர்ப்பும் எழுந்தன.

கடந்த 2022ம் ஆண்டு 25 படங்கள் மட்டுமே ஓடிடியில் நேரடியாக வெளியிடப்பட்டன. ஆனால் 2023ம் ஆண்டு அந்த எண்ணிக்கை மொத்தமாகச் சரிந்து வெறும் 6 படங்கள் மட்டுமே பிரீமியர் ஆகியிருக்கிறது. அதுவும் சிறிய பட்ஜெட் படங்கள் மட்டுமே வெளியாகி இருக்கினறன. இதனால் இனி பெரிய பட்ஜெட் படங்கள் ஓடிடியில் நேரடியாக வெளியாக வாய்ப்பில்லை என்கிறார்கள்.

அச்சுறுத்தலாக கருதப்பட்ட ஓடிடி தளங்கள் தமிழ் திரைப்படங்களைப் பொறுத்தவரை 2ம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆனால் திரைப்படங்களை ரசித்துப் பார்க்கும் எண்ணிக்கை திரையரங்குகளில் குறைந்திருப்பது தான் நம் கண் முன் இருக்கும் நிதர்சனம்.

ஓடிடியின் வளர்ச்சிகளுக்கு அதிமுக்கிய காரணம் வருடம் ரூ.2000க்கும் குறைவாக சந்தா கட்டி விட்டால் வீட்டிலிருந்தபடி நமக்கு பிடித்த நேரத்திற்கு பிடித்த படங்களை பார்க்க முடிகிறது. மேலும் குடும்பத்தாரின் வற்புறுத்தலோ, நிர்பந்தமோ இன்றி நமது கையடக்க செல்போனிலோ, மடிக்கனிணியிலோ அல்லது கம்ப்யூட்டரிலோ பிரத்யேகமாகப் பார்த்து மகிழ முடியும். அது மட்டுமின்றி எந்த மொழிப் படமாக இருந்தாலும் நமக்கு புரியும் மொழியில் காட்சிகளுக்கான வசனங்களை எழுதி யிருப்பதைப் படித்து படத்தை ரசிக்கவும் முடிகிறது.

இவையெல்லாம் இன்றைய தலைமுறைக்கு கிடைத்திருக்கும் வசதிகள் ஆகும். எப்படி மவுனப் படங்கள் அதிநவீன 70 எம்எம் ஸ்டீரியோ படங்களாக மாறிய கட்டத்தில் நமது பாரம்பரிய கலைகள் மீது அபிமானம் குறைந்ததோ, டிவியின் வருகையால் நாடகம் புறக்கணிப்பால் பாதித்ததோ இனி திரையரங்குகளின் நிலையும் பரிதாபமானதாகவே மாறும் அபாய கட்டத்தை எட்டி விட்டது. இது காலச் சுழற்சியின் காரணமாக ஏற்படும் மாற்றம், அதைப் புரிந்து கொண்டு ஏற்றுக் கொண்டாக வேண்டிய நிலையில் இருக்கிறது.

அடுத்த வாரம் பொங்கல் ரிலீஸ் என்ன? அதை ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்க்கிறார்கள்.

கடந்த 2023ம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு உற்சாகமான ஆண்டாக மாறியிருக்கிறது. ஆண்டின் கடைசி வாரமான டிசம்பர் 29ந் தேதி வெளியான 11 படங்களையும் சேர்த்து கடந்த ஆண்டு 256 திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. இதில் மெகா, மீடியம், சிறு பட்ஜெட் படங்களும் அடங்கும். இதுவரை எந்த வருடமும் இத்தனைப் படங்கள் தமிழில் வெளியானதில்லை என்பதால் இதை ஆரோக்கியமாகப் பார்க்கலாம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *