செய்திகள்

இன்னும் 5 நாட்களில் மீண்டும் இணைய சேவை: மணிப்பூர் முதல்வர் உறுதி

இம்பால், அக்.19–

மணிப்பூரில் இன்னும் நான்கு ஐந்து நாட்களில் இணைய சேவை மீண்டும் வழங்கப்படும் என்று மாநில முதல்வர் என்.பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவைக் கூட்டத்துக்கு பின்னர், நாகாக்களின் ஆதிக்கம் அதிகமுள்ள உக்ரூல் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் பிரேன் சிங், “இணைய சேவை இல்லாமல் மக்கள் சந்தித்துவரும் அவதியை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் சில சக்திகள் சூழ்நிலையைத் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு பிரச்சினைகளை உருவாக்குவதால் இணைய சேவையைத் தடை செய்யப்பட்டுள்ளது. இன்னும் நான்கு ஐந்து நாட்களில் இணைய சேவை திரும்பக் கிடைக்கும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக அன்று பகலில், உக்ரூல் மற்றும் கம்ஜோங் மாட்டங்களில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் ரூ.64.38 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களைத் துவக்கி வைத்தார். அப்போது பேசிய பிரேன் சிங், “மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப உக்ரூல் நகரத்தை வளர்ச்சி அடையச் செய்ய அரசு ஆர்வமாக உள்ளது. தலைநகர் இம்பாலுக்கு அடுத்து உக்ரூல் மிக முக்கியமான ஒரு நகரம். ஆனால் தண்ணீர் தட்டுப்பாடு இங்கு மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. இதனைத் தீர்ப்பதற்காக நகரில் குடிநீர் வசதியை பெருக்க ரூ.6 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரூ.180 – ரூ.200 கோடி செலவில் ஓர் அணை கட்ட திட்டமிடப்பட்டு வருகிறது” என்றார். மேலும், போதைப் பொருட்களுக்கு எதிரான பிரச்சாரத்தில் சமூதாயத் தலைவர்கள், கிராமத்தின் தலைவர்களின் நிலையான ஆதரவுக்காக நன்றி தெரிவித்துக் கொண்டார்.

மணிப்பூரில் குகி மற்றும் மைதேயி இன மக்களுக்கிடையே ஏற்பட்ட கலவரங்களைத் தொடர்ந்து மாநிலத்தில் இணைய சேவைகளுக்கு தடைவிதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *