செய்திகள் நாடும் நடப்பும்

விண்வெளியில் ஆய்வுகள் செய்யப்போகும் நான்கு அஞ்சா நெஞ்சங்கள்

இஸ்ரோ முயற்சிக்கு பிரதமர் மோடி பச்சைக்கொடி


ஆர். முத்துக்குமார்


மனிதன் விண்வெளியைக் கண்டு பிரமிக்காத நாளே இல்லை! அந்த விண்வெளிக்குச் சென்றால் பூமியின் வெளிவட்டப் பாதை வரை மட்டுமே மனிதன் உயிர் வாழும் காற்று மண்டலமும் தட்ப வெப்பமும் இருக்கும்.

அதைக் கடந்து மேலே சென்றால் உயிர் வாழ எடுத்துச் செல்ல வேண்டிய வாழ்வாதாரச் சுமை அதிக எடை கொண்டதாக இருப்பதால், மனிதன் பிற கிரகங்களுக்குச் சென்று திரும்புவது தற்போதைய விஞ்ஞானத்தால் நமக்கு கிடைத்திருக்கும் தொழில்நுட்ப கருவிகளால் முடியாத காரியமாகவே இருக்கிறது.

அதாவது ஒரு வழிப்பயணமாக பிற கிரகங்களுக்கு சென்று குடி பெற வாய்ப்புகள் இருக்கிறது.

ஆனால் அமெரிக்கர்கள் மட்டுமே நிலவில் மனிதனை கால்தடம் பதிக்க வைத்து சில மணி நேரம் பற்பல ஆய்வுகளை மேற்கொண்டதுடன் கை நிறைய நிலவின் மண்ணையும் எடுத்துக்கொண்டு மீண்டும் பூமிக்கு திரும்பினார்கள். இன்று வரை அது மிகப்பெரிய வரலாற்றுச் சாதனை என்பதை அறிவோம்.

ஆனால் ரஷ்யர்கள் தான் பலமுறை விண்வெளிக்கு மனிதனை அனுப்பி வைத்து வாயு மண்டலத்தையும் தாண்டிய வெளி வட்டப்பாதையில் மனிதர்களை செயற்கைகோளில் தங்க வைத்து, ஆய்வுகள் நடத்தி வெற்றிகரமாக பூமிக்கு திரும்ப வைத்துள்ளனர்.

இந்தப் போட்டியில் சீனர்கள் மிக சமீபமாக 2003ல் இளைஞர் ஒருவரை விண்வெளிக்கு அனுப்பி ஆய்வுகளை நடத்தி விட்டு பூமிக்கும் திரும்ப வைத்து அசத்தினர்.

அந்தப் பட்டியலில் விரைவில் அடுத்ததாக சேர இருப்பது இந்திய விண்வெளி விஞ்ஞானிகளாக இருக்கப் போகிறார்கள்.

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் மூலம்விண்வெளிக்கு செல்லும் 4 வீரர்களை பிரதமர் மோடி சமீபத்தில் நாட்டுக்கு அறிமுகப்படுத்தினார்.

கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார். அங்கு ரூ.1,800 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள டிரைசோனிக் காற்று சுரங்கம், மகேந்திரகிரி இஸ்ரோ வளாகத்தில் கட்டப்பட்டுள்ள செமி கிரையோஜெனிக் ஒருங்கிணைந்த இன்ஜின் மற்றும் நிலை பரிசோதனை மையம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் பிஎஸ்எல்வி ஒருங்கிணைப்பு வசதி ஆகிய 3 திட்டங்களை பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்.

பின்னர் மனிதர்களை விண்வெளிக்கும் அனுப்பும் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு செல்லும் 4 வீரர்களை நாட்டுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அதன்படி குரூப் கேப்டன்கள் பிரஷாந்த் பாலகிருஷ்ணன் நாயர், அங்கத் பிரதாப், அஜித் கிருஷ்ணன், விங் கமாண்டர் சுபான்ஷு சுக்லா ஆகிய நால்வரும் அடுத்த ஆண்டு விண்வெளிக்கு செல்வது அதிகாரப்பூர்வமாக‌ அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பிரதமர் மோடி நால்வருக்கும் ககன்யான் திட்டத்தின் லோகோ பேட்ஜை அணிவித்தார்.இஸ்ரோ கடந்த 2019–-ம் ஆண்டு ககன்யான் திட்டத்தை அறிவித்து, மனிதர்களை அனுப்புவதற்கான வியூகங்களை வகுத்து வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் 4 வீரர்கள் விண்கலம் மூலம் விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளனர். அதன்படி 4 வீரர்களும் தரையில் இருந்து 400 கிமீ தூரம் கொண்ட விண்வெளி சுற்றுவட்டப் பாதைக்கு அனுப்பப்பட உள்ளனர். அங்கு 3 நாட்கள் ஆய்வு மேற்கொண்டு பூமிக்கு மீண்டும் பத்திரமாக திரும்பி வருவார்கள்.

இந்த திட்டத்தின் கீழ் விண் வெளிக்கு அனுப்புவதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகள், பெங்களூரு விமானப்படை தளத்தில் பணியாற்றும் 50-க்கும் மேற்பட்ட விமானப்படை வீரர்களை தேர்வு செய்தனர்.அவர்களுக்கு பல்வேறு தேர்வுகளை நடத்தி இறுதியாக 12 பேரை தேர்வு செய்தது.

அவர்களுக்கு பெங்களூரு இஸ்ரோ மையத்தில் மட்டுமல்லா மல் ரஷ்யாவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தில் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன.

விண்வெளி செல்லும் குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன் கடந்த 1982–-ம் ஆண்டு ஏப்ரல் 19-ம்தேதி சென்னையில் பிறந்தார். அவர் தேசிய பாதுகாப்பு அகாடமியில் (NDA) இருந்து தேர்ச்சிபெற்றவர் ஆவார். விமானப்படை பயிற்சி அகாடமியில் சிறப்பாக செயல்பட்டதற்காக குடியரசுத் தலைவரின் தங்கப் பதக்கம் மற்றும் மரியாதை வாள் ஆகியவற்றை பெற்றார்.

இவர் பயிற்சி விமானிகளுக்கு பயிற்றுவிப்பாளராகவும் உள்ளார். சுகோய், மிக், ஜாகுவார், டோர்னியர், ஏஎன்-32 என பல்வேறு வகையான விமானங்களை அவர் இயக்கியுள்ளார்.ஆக 21–ம் நூற்றாண்டில் நமது விண்வெளி வரலாற்று பக்கங்களில் இடம் பெறப் போகும் பெயர்களை இன்றே தெரிந்து கொண்டு விட்டோம், முதலில் செயற்கை கோள்களை வெற்றிகரமாக அனுப்பினோம், பிறகு ராக்கெட் செலுத்துவதில் வல்லமை பெற்றோம், நிலவின் அருகாமைக்கு ராக்கெட்டை அனுப்பி வைத்தோம். இந்தப் பட்டியலில் செவ்வாய் கிரகத்திற்கு மங்கள்யான் ராக்கெட்டை அனுப்பி அங்கு

ஆய்வுகள் செய்ததுடன் துல்லியமாய் படங்களை எடுத்தும் பூமிக்கு அனுப்பி வைக்கும் வளமையை பெற்று இருந்தோம்.

விரைவில் மனிதனே வானவெளிப் பயணம் சென்று திரும்ப இந்திய விண்வெளி விஞ்ஞானிகள் தயாராகி விட்டனர்!

சூரியனின் அருகாமைக்கு சென்றுவிட்ட ஆதித்யா விண்கலம் விரைவில் பல புதுப்புது தகவல்களை தரும் முன்பே அடுத்த இமாலய முயற்சிக்கு இஸ்ரோ தயாராகி இருப்பது பாராட்டுக்குரியது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *