செய்திகள்

ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் மட்டுமே நின்று செல்லும்

சென்னை, நவ.8–

சென்னையிலிருந்து இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் மட்டுமே நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை வரும் 12–ந்தேதி கொண்டாடப்பட உள்ளதால், சென்னையில் தங்கி படிக்கும் மாணவர்கள் மற்றும் வேலை பார்க்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். மக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரெயில்கள் ஆகியவை அறிவிக்கப்பட்டு, சென்னையிலிருந்து மக்கள் பாதுகாப்பாக சொந்த ஊர்களாக பயணம் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும், சென்னை நகரப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு அங்கிருந்து பேருந்துகள் இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் செங்கல்பட்டு மார்க்கமாக செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் கோயம்பேட்டில் இருந்து புறப்பட்டு, புறவழிச்சாலை வழியே கிளாம்பாக்கத்தில் மட்டுமே நின்று செல்லும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 9, 10, 11–ந்தேதிகளில் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு செங்கல்பட்டு மார்க்கமாக செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் கோயம்பேட்டிலிருந்து புறப்பட்டு நசரத்பேட்டை புறவழிச்சாலை வழியாக கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையம் சென்று பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்லும். இந்த தேதிகளில் காவல்துறையின் உத்தரவு படி நகரத்தின் உட்பகுதிகளான வடபழனி முதல் தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் வரை ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது. எனவே பயணிகள் கோயம்பேடு அல்லது கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையம் ஆகிய 2 இடங்களில் ஆம்னி பேருந்துகளில் ஏறிச்செல்லலாம். கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பாண்டிச்சேரி வழியாக செல்லும் ஆம்னி பேருந்துகள் காவல்துறை அனுமதியுடன் வழக்கம்போல் இயக்கப்படும். மேலும் ஆம்னி பேருந்துகளில், சங்கம் நிர்ணயித்த கட்டணத்திற்கு மிகாமல் கட்டணம் வசூலிக்கும்படி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆம்னி பேருந்துகள் கட்டண விவரம் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. பயணிகள் ஆம்னி பேருந்து சம்பந்தமான புகார்களை 9043379664 என்ற சங்க தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம், என்று கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *