சிறுகதை

அறிவுக் குழந்தை – ராஜா செல்லமுத்து

குழந்தைகள் என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும். குழந்தையும் தெய்வமும் ஒன்று. எந்தப் பூவையும் யார் வேண்டுமானாலும் நுகரலாம். எந்தக் குழந்தையையும் யார் வேண்டுமானாலும் கொண்டாடலாம் .இதுதான் குழந்தையாய் இருப்பவர்களின் இலக்கணம்.

மதமோ ? மொழியோ ? இனமோ ? குழந்தைகளுக்குக் கிடையாது என்பதால் தான் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்ற வாசகத்தை முன் வைத்தார்கள்.

பிரார்த்தனாவும் அப்படித்தான் சுட்டி, செல்லம் என்று பெற்றோர்களாலும் பாட்டியாலும் உற்றார் உறவினர்களாலும் போற்றப்படும் செல்லக்குழந்தை.

அத்தனை அறிவுப்பூர்வமாய் பேசும் குட்டிப் பல்கலைக்கழகம். பிரார்த்தனாவுடன் பேசினால் பிரச்சனைகள் எல்லாம் பிய்த்துக் கொண்டு போய்விடும் என்று பாட்டி மேகலா சொல்லுவார்.

இந்தி பண்டிட் ஆக இருக்கும் மேகலாவிற்கே பெரிய ஆசிரியை போல பாடம் எடுக்கும் பேராசிரியர் பிரார்த்தனா .

அந்தக் குழந்தையின் அறிவைக் குறைத்து மதிப்பிடக் கூடாது என்பதற்காகவே மேகலாவும் குழந்தையாக மாறி அது சொல்லும் பாடங்களைக் கவனிப்பார்.

தன் தந்தையுடன் பிறந்த சித்தப்பாவை கூட

வாடா போடா என்று பேசும் அன்புக் குழந்தை . சித்தப்பா வெளியே செல்ல ஏற்பாடானால்

டேய் உன் கிட்ட காசு இருக்கா? என்று விசாரிக்கும்

என்கிட்ட காசு இல்ல என்று சித்தப்பா சொன்னால், ஓடிப் போய் தன் தாய் இல்லை தகப்பனிடம் பணத்தை வாங்கிக் கொண்டு,

இந்தா வச்சுக்க காசு இல்லனா என்கிட்ட கேளு என்று சித்தப்பாவுக்கும் அம்மாவைப் போல் நடந்து கொள்ளும் பெரிய மனுசி பிரார்த்தனா.

இப்படியாய் அவர் பேசும் வார்த்தைகள் எல்லாம் வயதுக்கு அப்பாற்பட்டு அறிவுக்கு மீறி மழலை மொழியில் வாக்கியங்கள் வந்து வழியும்.

ஐந்து வயதே நிரம்பிய பிரார்த்தனாவிற்குத் தன்னை அழகுபடுத்திக் கொள்வதில் அலாதிப் பிரியம்.

எந்தக் கடைக்குச் சென்றாலும் தன்னை அழகுபடுத்திக் கொள்ளும் பொருட்கள் வாங்குவதிலேயே கவனமாக இருப்பார்.

மஸ்காரா, ஐ லைனர், லிப்ஸ்டிக், நெய்ல் பாலிஷ் தொடங்கி முகத்திற்கு போடும் பவுடர் வரை அத்தனை பெயரும் அந்தக் குழந்தைக்கு அத்துபடி.

அதனால் குடும்பத்தாருடன் கடைக்குச் சென்றால் எல்லோரும் ஏதாவது பொருட்கள் வாங்க வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் பிரார்த்தனாவின் கவனம் மட்டும் அழகுப் பொருட்கள் மீதே குவியும்.

அதன் விலையோ? அதன் தரமாே அதுவெல்லாம் அதற்குத் தெரியாது. இதுவெல்லாம் பெண்கள் தன்னை அழகுபடுத்திக்கொள்ளப் பயன்படுத்தப்படும் பொருட்கள் என்று அந்தச் சிறு குழந்தைக்கு எப்படித்தான் தெரிந்ததாே தெரியவில்லை ? அத்தனை பொருட்களையும் எடுத்து அடுக்கி

இதெல்லாம் எனக்கு வேணும் பில் போடுங்க என்று சொல்லுவார்

பாட்டி மேகலா இவ்வளவு பொருள்கள் வேண்டாம்பா என்று சொல்ல

எனக்கு இதெல்லாம் வேணும். இத வாங்கி கொடுங்க என்று அடம்பிடிப்பார்.

பிரார்த்தனாவின் அப்பாவோ

சரி குழந்தை அழுகிறது. எல்லாத்தையும் வாங்கி குடுங்க என்ற உறுதியைச் சொல்ல சந்தோசமாக நின்று கொண்டு இருப்பார் பிரார்த்தனா.

பில் போடும் இடத்தில் பாட்டி மேகலா லேசாக கை காட்ட அருகில் நின்று கொண்டிருந்த அம்மா விலை உயர்ந்த, குழந்தைக்கு ஒவ்வாத பொருட்களைத் தள்ளிவிட்டு மீதத்தைப் பில் போடுவார்.

தான் எடுத்த அத்தனை பொருட்களும் வாங்கி கொடுத்து விட்டார்கள் என்ற சந்தோசத்தில் மகிழ்ந்திருக்கும் பிரார்த்தனா வீட்டுக்கு வந்து திறந்து பார்க்கும் போது, அவர் எடுத்து வைத்த பொருட்கள் எல்லாம் மாயமாகி இருப்பது தெரிந்து,

என்ன நான் எடுத்து வச்ச பொருட்களெல்லாம் காணல? என்று அந்த பொருட்களின் பெயர் சொல்லி கேட்பார் .

குழந்தையின் ஆசையை தவிர்க்க முடியாத அப்பா

இல்ல தங்கம், பில்லு போடும் போது அந்த கடைக்காரன் மறந்துட்டு போட்டான் போல அவனை இரு வச்சுக்கிறேன்

என்று குழந்தையின் மனம் கோணாமல் சொல்லுவார்.

இதை உண்மை என்று நம்பும் குழந்தை. கடைக்காரன் மீது பழியைப் போட்டுவிட்டதாய், குடும்பத்தில் இருப்பவர்கள் எல்லாம் சன்னமாகச் சிரித்துக் கொள்வார்கள்.

நாட்கள் நகர்ந்தன.

ஒரு நாள் மறுபடியும் அதே கடைக்கு பொருட்கள் வாங்க செல்ல வேண்டி இருந்தது.

அந்தப் பழைய நிகழ்ச்சி குழந்தையின் மனதில் அப்படியே ஒட்டியிருந்தது .

அதே கடைக்கு சென்று தான் எடுத்த பொருட்களை இதற்கு முன்பு ஒரு முறை கடைக்காரன் விட்டு விட்டு பில் போட்டு விட்டான் என்பதை அறிந்த குழந்தை அத்தனை பொருட்களையும் அள்ளிக்கொண்டு பில் போடும் இடத்திலேயே நின்றது.

பில் போடுபவன் அந்தக் குழந்தையை ஏற இறங்கப் பார்த்தான்.

என்ன பாக்குறீங்க? பில் போடுங்க. போன தடவ பில்லு போடும்போது, எவனோ ஒருத்தன் நான் எடுத்த பொருள்கள எல்லாம் தள்ளிவிட்டு, மத்த பில் போட்டு இருக்கான். அறிவு கெட்டவன் என்று மழலை மொழியில் பிரார்த்தனா பேசியபோது, பில் போடுபவன் சிரிப்பு தாளாமல் சிரித்து விட்டான்.

என்ன சிரிப்பு? நான் இங்க தான் இருப்பேன் .எந்த பொருளையும் மறக்காம பில்லு போடு. தொலைச்சுப்புடுவேன். தொலைச்சு என்று தன் ஆட்காட்டி விரலைக் காட்டி நாக்கைத் துருத்தி பேசியது பிஞ்சுக் குழந்தை .

இதைக் கேட்டு கொண்டிருந்த குடும்பத்தார்களும் கடைக்காரர்களும் கொள் என்று சிரித்தார்கள்

சார் போன தடவை , நீங்க அந்த குழந்தையை ஏமாத்துனது மாதிரி இப்ப ஏமாத்த முடியாது .அதுக்கு எல்லாம் தெரிஞ்சு போச்சு. நீங்க பண்ணுன தப்பு மறைச்சு என்னய சொல்லி இருக்கீங்க .என்னை இந்தத் திட்டுத் திட்டது .வேற வழி இல்ல சார் .நான் அத்தனை பொருட்களுக்கும் பில் போட்டு தான் ஆகணும்

என்று பில் போடுபவன் மறைமுகமாக பிரார்த்தனாவின் காதுகளுக்கு எட்டாதவாறு சொன்னான்.

சரி பில்லு போடுங்க

என்று குடும்பத்தார்கள் சொல்ல பில் போட்டு அத்தனை பொருட்களையும் சோதனை செய்து ஒவ்வொரு பொருளாகப் பெயர் சொல்லி இருக்கிறதா? என்று பார்த்த பிறகே கடையை விட்டு இறங்கியது அந்தக் குழந்தை.

இது சாதாரணக் குழந்தை இல்லைங்க. அறிவுக் குழந்தை என்று அந்தக் கடையில் உள்ளவர்கள் சொல்லி மெச்சினார்கள்.

அதைக் கேட்டுப் பாட்டி, அம்மா, அப்பா சிரித்தார்கள் .

தான் வாங்கிய அத்தனை பொருட்களையும் சரியாக இருக்கிறதா? என்று மீண்டும் மீண்டும் சரிபார்த்தபடியே தன் பிஞ்சு பாதங்களை மெதுவாக எடுத்துவைத்து நடந்து போய்க் கொண்டிருந்தது அந்த அறிவுக் குழந்தை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *