சிறுகதை

சிகை அலங்காரம் – ராஜா செல்லமுத்து

ரேஷ்மா தன் வீட்டை விட்டு கிளம்பும்போது டிப்டாப் உடையில் தான் செல்வாள் .

மிடி, ஜீன்ஸ், டீ- சர்ட் கூலிங் கிளாஸ் ஸ்கூட்டி என்று அவள் பந்தாவாக அந்த அப்பார்ட்மெண்ட்டை விட்டு வெளியே கிளம்பும்போது அத்தனை வாசல் கதவுகளுக்கும் சன்னல் கதவுகளுக்கும் பின்னால் இருக்கும் விழிகள் அவளை வேடிக்கை பார்க்கும் .

பிறந்தா ரேஷ்மா மாதிரிப் பிறக்கணும்; இல்ல பிறக்கக் கூடாது . என்ன ஒரு அழகு. என்ன ஒரு நடை; என்ன ஒரு ஸ்டைல் என்று அந்த அப்பார்ட்மெண்ட் முழுவதும் பேசிக் கொள்வார்கள்.

அவளின் மிடுக்கான நடை உடை பாவனைகளைப் பார்த்து பல பேர் அவள் வருகைக்காக வாசல் கதவுகளையும் சன்னல் கதவுகளையும் திறந்து வைத்திருப்பார்கள்.

நாலாவது மாடியில் இருந்து அவள் கீழே இறங்கி போவதை ரசித்துப் பார்க்கும் மனிதர்களும் இருந்தார்கள்.

காலையில் அப்பார்ட்மெண்டை விட்டு கிளம்புபவள் இரவு தான் திரும்பி வருவாள்.

ஆனால் அவள் என்ன வேலை செய்கிறாள்? எங்கு போகிறாள்? என்று யாருக்கும் தெரியாது .

அதைப் பார்ப்பதற்கு அவர்களுக்கு அந்த அப்பார்ட்மெண்ட் வாசிகளுக்கு விருப்பமும் இல்லாமல் இருந்தது. இப்படி ஒரு அழகி நம் அப்பார்ட்மெண்டில் இருக்கிறாள் என்பதை அவர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியைத் தந்தது.

ஒரு நாள் ரேஷ்மாவை பின்தொடர்ந்தான் அவள் வீட்டின் அருகில் இருந்த கிஷோர். அவன் அவளை ஒருதலையாக காதலித்தான். என்னென்னமோ குரங்கு வித்தைகள் எல்லாம் செய்து காட்டினான். அவனின் வித்தைகளுக்கெல்லாம் ரேஷ்மா விழவே இல்லை.

அவனுக்கு போக்கு காட்டிக்கொண்டே இருந்தாள்.அந்த அப்பார்மெண்டுக்கு புதிதாக வந்த கிஷோர் இவளை எப்படியாவது மடக்கி விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தான்.

எப்படியும் பல லட்சம் சம்பாதிப்பாள். இவளை கட்டிக் கொண்டாள் நம் வாழ்க்கையை ஓட்டி விடலாம் .நம் குடும்பத்தையும் முன்னுக்கு கொண்டு வந்து விடலாம் . இப்படி ஒரு பெண் கிடைப்பது அரிது என்று கிஷோர் தனக்குத்தானே ஒரு கணக்கு போட்டு இருந்தான்.

ஆனால் மின்னலாகப் பறந்து போகும் அவளைப் பின்தொடர்ந்து அவள் எங்கே பணிபுரிகிறாள்? என்பதைக் கண்டுபிடிப்பது கிஷோருக்கு பெரும் சவாலாக இருந்தது .

அன்று கங்கணம் கட்டிக் கொண்டான். இன்று அவளை சந்தித்து தான் ஆக வேண்டும் பேசித் தான் ஆக வேண்டும். இல்லையென்றால் தற்கொலை தான் தீர்வு என்ற முடிவில் இம்மியளவு பிசகாமல் அவளை பின்தொடரலானான் கிஷோர்.

பின்வருவதை அறியாத ரேஷ்மா தன் வழித்தடத்திலேயே சென்று கொண்டு இருந்தாள்.

டக்கென்று ஒரு திருப்பத்தில் ஒரு போன் கால் வர கிஷோர் தன்னையே மறந்து விட்டான்.

இப்போது அவள் எங்கே சென்றாள்? என்பது அவனுக்குத் தெரியவில்லை .ரொம்பவே அழுதான்.

இன்னைக்கும் தப்பிச்சுட்டாளே என்று அவனுக்குள் ஒரு உதறல் ஏற்பட்டது.

சரி வந்தது வந்துட்டோம். ஹேர் கட் பண்ணிட்டு போயிடலாம் முடியும் வளர்ந்து ரொம்ப நாளாச்சு முடிவெட்டியும் ரொம்ப நாளாச்சு என்று நினைத்தவன், ஒரு unisex இருபாலர்கள் முடி வெட்டும் கடைக்குச் சென்றான்.

எட்டுத் திசைகளும் கண்ணாடியில் ஒட்டப்பட்டு இருந்த அந்தக் குளிர்சாதன முடி வெட்டும் சலூனுக்கு சென்றிருந்தான் கிஷாேர்.

சலூனின் வரவேற்பறையே ஒரு 5 ஸ்டார் ஓட்டலுக்கு உண்டான தாெனியில் இருந்தது.

சார் கட்டிங், சேவிங், பிளீச்சிங் டையிங் என்று அத்தனை வார்த்தைகளையும் அடுக்கினாள் உதட்டில் சாயம் போட்ட ஒருத்தி.

கட்டிங் என்று சொல்லிவிட்டு 360 டிகிரி சுற்றும் ஒரு நாற்காலியில் அமர்ந்தான் கிஷாேர்.

ஒரு பெண் வந்து அவன் தோளைச் சுற்றி ஒரு போர்வையை போர்த்தினாள்.

இந்த முகத்தை எங்கேயோ பார்த்தது போல இருக்கிறதே என்று அவன் எதிரில் இருந்த கண்ணாடி, இடது பக்கம் , வலது பக்கம் ,பின்பக்கம் முன் பக்கம் இருந்த கண்ணாடிகளை 360 டிகிரியும் சுற்றி பார்த்தான்.

அதே ரேஷ்மா தான் .இவளா என்னைத் திணற வைத்தவள். அந்த அப்பார்ட்மெண்டில் ஒய்யாரமாக நடந்து வந்த தேவதையா இவள்? இவளா இந்த வேலை செய்து கொண்டிருக்கிறாள்? என்று முடி வெட்டும் பெண்ணாக ரேஷ்மாவைப் பார்த்தபோது கிஷோருக்கு அழுகையே வந்தது.

என்ன ரேஷ்மா இங்க இருக்க? என்ற அவன் வாய்விட்டு கேட்டபோது

சார் உங்களுக்கு கட்டிங் சேவிங் தான என்று அவள் கேட்பதற்குள், இவனுக்கு என்ன தேவை என்பதை சலூனில் வேலை செய்ய செய்து கொண்டிருந்த இன்னொரு பெண் விளக்கினாள்

கிஷோரின் தலையைக் குனிய வைத்து முடி வெட்ட ஆரம்பித்தாள் ரேஷ்மா.

அவள் வெட்டி போட வெட்டி போட கிஷோரின் தலைமுடி குறைந்து கொண்டே வந்தது.

தன்னை அறியாமலே அழுது கொண்டிருந்தான் கிஷாேர்.

மறுநாள் ரேஷ்மாவை பார்த்தான்; அவனுக்குள் அவளைப் பற்றிய அபிப்பிராயங்கள் குறைந்திருந்தன. ஆனால் ஒரு தன்னம்பிக்கை பெண் ரேஷ்மா என்பதை அவன் மனதில் அழுத்தம் திருத்தமாக கல்வெட்டு போல பதித்திருந்தான்.

அந்தக் காலையும் வழக்கம் போல டிப் டாப் உடையில் அந்த அப்பார்ட்மெண்ட்டை விட்டு வெளியேறினாள் ரேஷ்மா.

கிஷோர் அவளை வைத்த கண் வாங்காமலே பார்த்துக் கொண்டே இருந்தான்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *