செய்திகள்

ஸ்வேதாவின் ஓவிய கண்காட்சி

சென்னை, மார்ச் 15–

சென்னை எழும்பூரில் உள்ள ஓட்டல் அம்பாசடர் பல்லவாவில் நடைபெற்ற ஸ்வேதா ஓவிய கண்காட்சியில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு ஓவியங்களை கண்டு வியப்படைந்தனர்.

சென்னை சூளைமேட்டில் வசிக்கும் எஸ்.ஜி. மகாதேவனின் மகள் எம்.எஸ். ஸ்வேதா. பி.எப்.ஏ. (நுண்கலை இளம்பட்டப்படிப்பு) நான்காம் ஆண்டு படித்து வரும் ஸ்வேதாவிற்கு ஓவியக் கலையில் மிகுந்த ஆர்வம் உண்டு. தனது 3 வயதிலிருந்து அவர் ஓவியம் பயிலத் தொடங்கினார். இவரது ஆர்வத்திற்கு அவரது தந்தை மகாதேவன் பக்கபலமாக இருந்தார்.

ஸ்வேதா பல்வேறு ஓவியப் போட்டிகளில் கலந்து கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட பரிசுகளை வென்றுள்ளார். தமிழக அரசின் ‘கலை இளமணி விருது’ பெற்றுள்ளார்.

தன்னிடம் உள்ள ஓவியத்திறமையை மற்றவர்களுக்கும் அளிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் 15 வயதில் ஓவிய வகுப்பு எடுக்க ஆரம்பித்தார். முதலில் ஒரு குழந்தையுடன் ஆரம்பித்த ஓவிய பள்ளியில் தற்போது மூன்று வயது முதல் 50 வயது வரை உள்ளவர்கள் என சுமார் 80 பேர் பயின்று வருகிறார்கள். வசதியில்லாதவர்களுக்கு இலவசமாக கற்றுக் கொடுக்கிறார்.

இதுவரை இவர் 10 ஓவிய கண்காட்சிகளை நடத்தி உள்ளார். இவருடைய முதல் ஓவிய கண்காட்சியை நடிகரும் ஓவியருமான சிவகுமார், மணியன் செல்வம், அனுராதா ரமணன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

எஸ்.வி. சேகர் தயாரித்து இயக்கிய ‘நினைவில் நின்றவள்’ திரைப்படத்தில் டைட்டில் பாடலில் சுமார் 50 ஓவியங்களை ஸ்வேதா வரைந்திருக்கிறார். இவருடைய ஓவியங்கள் கனடா, லண்டன் போன்ற ஊர்களுக்கு அனுப்பப்படுகின்றன. இவர் மனித உருவங்களை தத்ரூபமாய் வரைகிறார். இதனால் பலரும் இவரை நாடி வந்து படங்களை வரைந்து செல்கின்றனர்.

இவருடைய 11வது கண்காட்சி சென்னை எழும்பூரில் உள்ள ஓட்டல் அம்பாசிடர் பல்லவாவில் நடந்தது. இதில் அவர் சுமார் 30க்கும் மேற்பட்ட அற்புதமான ஓவியங்களை காட்சிக்கு வைத்திருக்கிறார்.

அரங்கில் நுழையும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு படத்தையும் சில நிமிடங்கள் நின்று பார்த்து கலையம்சத்தை கண்டு வியந்தனர். அவரது ஒவியத் திறனை கண்டு வியப்படைந்து அவருக்கு தங்களது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்தனர்.

ஓவியர் ஸ்வேதா, ஆயில், அக்ரிலிக், வாட்டர் கலர், ஆயில் பேஸ்டல், சாட் பேஸ்டல், பென்சில் ஷேடிங், சார்கோல் ஓவியங்களை மிக திறமையாக வரைவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *