செய்திகள்

ஸ்டாலின் புலம்புகிறார்; விரக்தியின் விளிம்பில் இருக்கிறார்: எடப்பாடி பழனிசாமி பேச்சு

அம்மா அரசின் சாதனைகள், திட்டங்களை கண்டு பொறுத்து கொள்ள முடியவில்லை

ஸ்டாலின் புலம்புகிறார்; விரக்தியின் விளிம்பில் இருக்கிறார்:

எடப்பாடி பழனிசாமி பேச்சு

பட்டாசு தொழிலுக்கு துணைநிற்போம் என உறுதி

சிவகாசி, மார்ச் 27–

அம்மா அரசின் சாதனைகள், திட்டங்களை கண்டு ஸ்டாலினால் பொறுத்து கொள்ள முடியவில்லை. எனவே அவர் புலம்புகிறார். விரக்தியின் விளிம்பிற்கு சென்று விட்டார் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று விருதுநகர் மாவட்டம், சிவகாசி சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசியதாவது:–

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் சிவகாசி சட்டமன்ற தொகுதி கழக வெற்றி வேட்பாளர் லட்சுமி கணேசனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள். பண்பாளர், ஏற்கனவே திருத்தங்கல் நகராட்சியின் தலைவராக இருந்து பணியாற்றியவர். கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து சேவை செய்பவர். அவர் இந்த தொகுதியுடைய பிரச்சினைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்து நிறைவேற்றக்கூடிய திறமையான வேட்பாளர். சிவகாசி சட்டமன்ற தொகுதி அண்ணா தி.மு.க.வின் கோட்டை. இது தேர்தல் பிரச்சார கூட்டம் அல்ல, வெற்றி விழா கூட்டம் போல காட்சி அளிக்கின்றது.

இந்த தேர்தல் தி.மு.க.வின் இறுதித்தேர்தலாக இருக்க போகிறது. தி.மு.க மக்களை மறந்தார்கள். மக்கள் தி.மு.க.வை 10 வருடம் வன வாசம் அனுப்பிவிட்டார்கள், இன்னும் திருந்தவில்லை. தி.மு.க.வில் தற்பொழுது உதயநிதி முளைத்துவிட்டார். அவர் தி.மு.க.விற்கு வந்து 2 வருடங்கள் கூட ஆகவில்லை. அதற்குள் வேட்பாளராக அறிவித்து விட்டார்கள். அவருக்குள்ள ஒரே அடையாளம் ஸ்டாலினின் மகன். அவருக்கு எவ்வளவு மரியாதை. தி.மு.கவில் பதவி கொடுத்தாலும் குடும்பத்திற்குத்தான் கொடுப்பார்கள். அதிகாரம் கொடுத்தாலும் குடும்பத்திற்குத்தான் கொடுப்பார்கள். அது ஒரு குடும்ப கட்சி. இந்த தேர்தலோடு வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழ்நாட்டில் இனி வாரிசு அரசியலே இருக்கக் கூடாது. உழைத்தவர்கள் உயர் பதவிக்கு வர வேண்டும்.

ஸ்டாலின் புலம்பல்

மக்களின் ஆதரவோடு 4 ஆண்டு காலம் 2 மாதங்களை அம்மாவின் அரசு நிறைவு செய்துள்ளது. வெற்றிநடை போடும் தமிழகமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. இதை ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை. பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் தினந்தோறும் விளம்பரம் தருகின்றார்கள் என்று கூறி வருகிறார். நாங்கள் செய்த சாதனையை விளம்பரமாக கொடுக்கின்றோம். அதில் தவறு இருந்தால் சொல்லுங்கள், பதில் கூறுகின்றோம். அண்ணா தி.மு.க ஆட்சியில் இவ்வளவு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றதா என ஸ்டாலின் வியப்பாக பார்க்கின்றார். நாட்டைப் பற்றி கவலைப்படாத ஒரே தலைவர் தி.மு.க தலைவர். அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களினால் பொதுமக்கள் இவ்வளவு நன்மை பெறுகிறார்கள் என்று அவர் எண்ணி, எண்ணி புலம்பிக் கொண்டிருக்கின்றார். விரக்தியின் விளிம்பிற்கே சென்று விட்டார். அதனால் தான் இப்படிப்பட்ட வார்த்தைகளைப் பேசி வருகிறார்.

தி.மு.க. ஆட்சி, அதிகாரத்தில் இல்லாதபோதே இவ்வளவு அட்டூழியங்கள் செய்கின்றனர். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் நாடு தாங்குமா என்பதை மக்கள் எண்ணி பார்க்கவேண்டும். இப்போது தமிழ்நாடே அமைதியாக இருக்கிறது. அம்மா ஆட்சியில் இறைவன் ஆசியால் பருவ மழை நன்றாக பொழிந்து மக்கள் சிறப்பாக வாழ்கின்றனர். எனவே, அம்மாவின் ஆட்சி தொடர இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களியுங்கள்.

பட்டாசு தொழிலுக்கு துணை நிற்போம்

இந்தத் தொகுதியின் பிரதான தொழில்களான பட்டாசு மற்றும் தீப்பெட்டி தயாரிக்கும் தொழில் சிறக்க நாங்கள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். ஆனால் தி.மு.க.வின் பொதுச் செயலாளர், முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தி.மு.க. ஆட்சியில் பட்டாசு தொழிற்சாலை மூடப்படும் என்கிறார். அவர்கள் எடுத்துள்ள முடிவை தெளிவுபடுத்தியுள்ளனர். தீப்பெட்டி, பட்டாசு தொழில் சிறக்க அம்மாவின் அரசு நல வாரியம் அமைத்துள்ளது. பட்டாசு தொழில் தொடர நடைபெற எங்கள் அரசு தொடர்ந்து குரல் கொடுத்து வந்துள்ளது. இதனை பட்டாசு மற்றும் தீப்பெட்டி தயாரிக்கும் உரிமையாளர்களும் தொழிலாளர்களும் எண்ணிப் பார்க்க வேண்டும். எனவே, இந்தத் தொழில்கள் சிறக்க அம்மாவின் அரசு என்றென்றும் துணை நிற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

வரி குறைப்பு

பட்டாசு உற்பத்திக்கான ஜி.எஸ்.டி. வரியை 28 விழுக்காட்டிலிருந்து 18 விழுக்காடாகவும் தீப்பெட்டி உற்பத்திக்கான ஜி.எஸ்.டி. வரியை 18 விழுக்காட்டிலிருந்து 12 விழுக்காடாகவும் குறைத்துக் கொடுத்துள்ளோம். சிவகாசி தொகுதியில் சீவலப்பேரி–தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றியது அம்மாவின் அரசு. சிவகாசி தாத்தியாபுரம் இரயில்வே மேம்பாலம் திருத்தங்கல் இரயில்வே பாலம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

சாத்தூர்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி றே்று விருதுநகர் மாவட்டம், சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசுகையில் கூறியதாவது:–

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் சாத்தூர் சட்டமன்ற தொகுதி கழக வெற்றி வேட்பாளர் அருமை சகோதரர் ஆர். கே. ரவிச்சந்திரனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள். திறமையானவர், பண்பாளர், இந்த பகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கூடிய திறமையான வேட்பாளர். அருமை சகோதரர் ஆர்.கே.ரவிச்சந்திரன், முன்னாள் அமைச்சர் அண்ணன் காளிமுத்துவின் சொந்த தம்பி. அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள் என இருகரம் கூப்பி கேட்டுக் கொள்கிறேன். இந்த சாத்தூர் சட்டமன்ற தொகுதி அண்ணா தி.மு.க.வின் கோட்டை என்பதை நிரூபித்துக் காட்டுங்கள். இது பட்டாசு தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. பட்டாசு தொழில் சிறக்க அம்மாவின் அரசு அனைத்து நடவடிக்கை எடுக்கும். பட்டாசு தொழிலுக்கு பாதுகாப்பு வழங்கப்படும். தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைத்த அரசு அம்மாவின் அரசு. தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழிலுக்கு ஜி.எஸ்.டி வரியை குறைத்த அரசு அம்மாவின் அரசு. சாத்தூர் பகுதி விவசாயம் மற்றும் பட்டாசு தொழில் நிறைந்த பகுதி. இந்த இரண்டு தொழில்களும் சிறக்க அம்மாவின் அரசு அனைத்து நடவடிக்கையும் எடுக்கும்.

தீப்பெட்டி தொழில் சிறக்க, பட்டாசு தொழில் ஏற்றம் பெற, சாத்தூர் சட்டமன்ற தொகுதி கழக வெற்றி வேட்பாளர் அருமை சகோதரர் ஆர். கே. ரவிச்சந்திரனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யுங்கள் என இருகரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *