செய்திகள்

வெளி மாநில தொழிலாளர்கள் இருக்கும் பகுதிக்கு சென்று விவரங்கள் இணையதளத்தில் பதிவு செய்யவேண்டும்

சொந்த ஊர்களுக்கு செல்ல

வெளி மாநில தொழிலாளர்கள் இருக்கும் பகுதிக்கு சென்று விவரங்கள் இணையதளத்தில் பதிவு செய்யவேண்டும்

திராவிட தேசம் தலைவர் கிருஷ்ணா ராவ் வலியுறுத்தல்

 

சென்னை, மே.10–

சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்பும் வெளி மாநில தொழிலாளர்களின் விவரங்களை அவரவர் இருக்கும் பகுதிக்கு அதிகாரிகள் சென்று இணையதளத்தில் பதிவு செய்யவேண்டும் என்று திராவிட தேசம் தலைவர் வீ.கிருஷ்ணா ராவ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

கொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டில் வேலை இல்லாமல், கையில் பணம் இல்லாமல் பல்வேறு தொழிலாளர்கள் கஷ்டப்படுகிறார்கள். தங்களது வாழ்வாதாரம் காரணமாக பல கட்டிட தொழிலாளர்கள், மீனவர்கள் வேலை தேடி தமிழகத்தில் தங்கி பல நிறுவனங்களில் வேலை செய்து வருகிறார்கள்.

தற்சமயம் அனைவரும் பணி இன்றி சிரமத்துக்கு உள்ளாகி இருக்குகிறார்கள். இந்த சமயத்தில் தமிழக அரசு, பல மாநிலங்களிலிருந்து தமிழகம் வந்து, ஊரடங்கு உத்தரவு சமயத்தில் சிரமப்படும் அனைத்து தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளை கண்டறிந்து அவரவர்களின் வீட்டுற்கே சென்று அனைவருக்கும் ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கியது.

தற்சமயம் பல தொழிற்சாலைகள், பல கட்டிடங்கள் திறக்கப்பட்டு சிறிய அளவில் பணியாளர்களை வைத்து வேலைகள் செய்துகொள்ள அரசு அனுமதி வழங்கியது. இப்பணிகளில் கலந்து கொள்ள இங்கேயே தங்க விரும்பிய பணியாளர்கள் போக மீதியுள்ள பணியாளர்கள் பிற மாநிலங்களில் உள்ள தங்களது கிராமங்களுக்கு செல்ல விரும்புகிறார்கள்.

வீட்டிற்கே சென்று பதிவு

இப்படிப்பட்டவர்கள் தமிழக இணையதளத்திலும் மற்றும் அவரவர்களின் சொந்த மாநிலங்கள் இணையதளத்திலும் அவர் அவர்களின் பெயர்கள் மற்றும் பல விவரங்கள் பதிவு செய்யும்படி அரசு சமீபத்தில் கூறியுள்ளது. இப்படி பதிவு செய்தவர்களுக்கு மட்டும் பிற மாநிலங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

படிப்பறிவு இல்லாத இந்த தொழிலாளர்களுக்கு இணையதளத்தில் பதிவுசெய்யும் அளவுக்கு போதிய அறிவு இல்லாததால் இரு மாநிலங்கள் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி அரசு அதிகாரிகள் மூலமே தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று அவர்கள் விவரங்கள் அனைத்தும் இணையதளத்தில் பதிவு செய்ய உதவி செய்யும்படி வேண்டிக்கொள்கிறேன்.

அதேபோன்று பொது தொண்டு நிறுவனங்களின் நிர்வாகிகளும் இவர்களுக்கு உதவி செய்ய கேட்டுக்கொள்கிறேன். ஏற்கனவே இலவச ரேஷன் பொருட்கள் வழங்கியபோது அனைவர்களின் விபரங்கள் அரசு அதிகாரிகளிடம் இருக்கிறது. ஆகவே அரசு அதிகாரிகள் தொழிலாளர்களின் பகுதிகளுக்கு செல்வதும் எளிதாகும். இப்படி செய்தால் மட்டுமே அவரவர்கள் அவர்களின் சொந்த கிராமங்களுக்கு செல்ல மத்திய மாநில அரசுகள் உதவியோட ரெயில் மற்றும் பேருந்து பயண வசதிகள் எளிதாக செய்ய உதவும்.

இவ்வாறு திராவிட தேசம் தலைவர் வீ.கிருஷ்ணா ராவ் கூறியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *