கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது
சிறையில் அடைக்கப்பட்ட 5 பேரை 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி
கோவை, அக். 27–
கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் 6-வது நபரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 5 பேரை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கோவை கோட்டை மேட்டில் உள்ள ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த 23-ந் தேதி அதிகாலையில் கார் திடீரென்று வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் காரில் இருந்த ஒருவர் பலியானார். அவர் அதே பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் (வயது 29) என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக உக்கடத்தை சேர்ந்த முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), முகமது ரியாஸ் (27), பரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது உபா (சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம்) சட்டமும் பாய்ந்தது. அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கோவை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள ஜே.எம்.5 கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்தனர்.
மேலும் ஒருவர் கைது
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கைதான 5 பேரையும் 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். இந்த நிலையில், கார் வெடிப்பு சம்பவத்தில் 6-வது நபராக அப்சர்கான் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கார் வெடிப்பில் உயிரிழந்த ஜமேஷா முபினின் உறவினரான இவர் வெடி மருந்து சேகரிப்பில் முபினுக்கு உதவியது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அப்சர்கான் ஏற்கனவே காவல்துறையினரின் விசாரணை வளையத்தில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஜமேஷா முபின் வெடிப்பொருட்களை தயாரிப்பதற்கான வேதிப்பொருட்களை அமேசான், ஃபிளிப்கார்ட் மூலம் வாங்கியுள்ளதாகவும், இதில் மொத்தம் 76.5 கிலோ பொட்டாசியம், நைட்ரேட் ஜமேஷா முபின் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். கடந்த 2 ஆண்டுகளாக ஆன்லைன் மூலமாக வெடிபொருட்களை வாங்கி தனது வீட்டில் முபின் சேமித்து வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும்முபின் தடை செய்யப்பட்ட பல இஸ்லாமிய இயக்கங்களின் அதிகாரபூர்வ இணையதளப் பக்கங்களை அவர் பார்வையிட்டதற்கான தடயங்களும் கிடைத்துள்ளன என்று போலீசார் தெரிவித்தனர். இதேபோல ஜமேஷா முபின் டார்க் வெப்சைட்டுகள் ஏதும் பயன்படுத்தி பயங்கரவாத அமைப்பினருடன் தொடர்பில் இருந்துள்ளாரா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கார்கள் பறிமுதல்
கோவையில் வெடி விபத்து ஏற்பட்ட பகுதியைச் சுற்றியுள்ள இடங்களில் கடந்த ஒரு வாரமாக நின்றிருந்ததாக கூறப்படும் 12 கார்களை போலீசார் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர். இதில், 7 கார்களின் உரிமையாளர்கள் நேரில் ஆஜராகி உரிய ஆவணங்களை சமர்ப்பித்ததையடுத்து அந்த கார்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. மீதமுள்ள 5 கார்களின் உரிமையாளர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.