செய்திகள்

‘வீரமரணம்’ வீரர்களுக்கு கருணைத் தொகை ரூ.40 லட்சமாக உயர்வு

நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு

சென்னை, மார்ச் 20–

போர்‌ மற்றும்‌ போரையொத்த நடவடிக்கைகளின்‌ போது உயிர்த்‌ தியாகம்‌ செய்த தமிழ்நாட்டைச்‌ சேர்ந்த படை வீரர்களின்‌ குடும்பத்தினருக்கு மாநில அரசால்‌ வழங்கப்படும்‌ கருணைத்‌ தொகை 2௦ லட்சம்‌ ரூபாயிலிருந்து, இருமடங்காக உயர்த்தி 40 லட்சம்‌ ரூபாயாக வழங்கப்படும்‌ என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.

நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர் கூறியதாவது:–

‘‘மேலும்‌, வீரதீரச்‌ செயல்களுக்கான உயர்‌ விருதுகளைப்‌ பெறும்‌ தமிழ்நாட்டைச்‌ சேர்ந்த பாதுகாப்புப்‌ படையினருக்கு தற்போது வழங்கப்படும்‌ பரிசுத்தொகையும்‌ நான்கு மடங்காக உயர்த்தி வழங்கப்படும்‌.

இந்த அரசின்‌ முன்னோடித்‌ திட்டமான மக்களைத்‌ தேடி மருத்துவம்‌ திட்டத்தில்‌, தொற்றா நோய்களை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து, குணப்படுத்த சிகிச்சைகள்‌ வழங்கப்படுகின்றன. மாநிலத்தின்‌ பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கும்‌ தொழிலாளர்களின்‌ நலனில்‌ தனி அக்கறை கொண்டுள்ள இந்த அரசு, தொழிற்சாலைகளிலும்‌, கட்டுமானம்‌ உள்ளிட்ட அமைப்புசாரா தொழில்களிலும்‌ ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்‌ தொற்றா நோய்களால்‌ பாதிக்கப்படுவதைத்‌ தடுக்க ஒரு சிறப்பு முயற்சியைத்‌ தொடங்க உள்ளது. இதன்படி, முதற்கட்டமாக 711 தொழிற்சாலைகளிலுள்ள 8.35 லட்சம்‌ தொழிலாளர்களுக்கு மக்களைத்‌ தேடி மருத்துவம்‌ திட்டம்‌ விரிவுபடுத்தப்படும்‌. உயர்‌ ரத்த அழுத்தம்‌, நீரிழிவு போன்ற தொற்றா நோய்களுக்கு முக்கியத்துவம்‌ அளித்து, இந்த மருத்துவ முகாம்கள்‌ நடத்தப்படும்‌. இத்திட்டத்தில்‌ புலம்பெயர்‌ தொழிலாளர்களும்‌ பயனடைவார்கள்‌.

ரூ.993 கோடியில்

உயிர்காக்கும்‌ சிகிச்சை

முதலமைச்சரின்‌ விரிவான மருத்துவக்‌ காப்பீட்டுத்‌ திட்டத்தில்‌, குடும்பம்‌ ஒன்றிற்கு ஆண்டுக்கு ஐந்து லட்சம்‌ ரூபாய்‌ காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில்‌, இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 11.82 லட்சம்‌ நோயாளிகளுக்கு 993 கோடி ரூபாய்‌ மதிப்பிலான உயிர்காக்கும்‌ சிகிச்சைகள்‌ அளிக்கப்பட்டுள்ளன.

கிண்டி கிங்‌ நோய்‌ தடுப்பு மற்றும்‌ ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில்‌ அமைக்கப்பட்டு வரும்‌ 1,000 படுக்கை வசதி கொண்ட ‘கலைஞர்‌ நினைவு பன்னோக்கு மருத்துவமனை இந்த ஆண்டு திறந்து வைக்கப்படும்‌. 1,020 கோடி ரூபாய்‌ செலவில்‌ மதுரை, கோயம்புத்தூர்‌, கீழ்ப்பாக்கம்‌ ஆகிய இடங்களிலுள்ள மூன்று அரசு மருத்துவக்‌ கல்லூரி வளாகங்களில்‌ கட்டப்பட்டு வரும்‌ புதிய உயர்மருத்துவக்‌ கட்டடங்களும்‌ விரைவில்‌ பயன்பாட்டிற்குக்‌ கொண்டுவரப்படும்‌.

ரூ.147 கோடியில் ஸ்டான்லியில்

புதிய கட்டிடங்கள்

திருச்சி மற்றும்‌ அதைச்‌ சுற்றியுள்ள மாவட்டங்களின்‌ உயர்மருத்துவ சிகிச்சைத்‌ தேவைகளை நிறைவு செய்து வரும்‌ மகாத்மா காந்தி நினைவு அரசினர்‌ மருத்துவமனையில்‌, 110 கோடி ரூபாய்‌ செலவில்‌ புதிய கட்டடங்கள்‌ கட்டப்படும்‌. வடசென்னை பகுதி மக்களின்‌ மருத்துவத்‌ தேவையை நிறைவு செய்யும்‌ வகையில்‌, அரசு ஸ்டான்லி மருத்துவமனையில்‌ நவீன வசதிகளுடன்‌ கூடிய புதிய பன்னோக்கு மருத்துவப்‌ பிரிவும்‌, செவிலியர்‌ பயிற்சி பள்ளி மற்றும்‌ விடுதிக்கு புதிய கட்டடங்களும்‌ 147 கோடி ரூபாய்‌ செலவில்‌ கட்டப்படும்‌.

மாநிலத்தின்‌ முதல்‌ அரசு சித்த மருத்துவக்‌ கல்லூரி பாளையங்கோட்டையில்‌ 1964–ம்‌ ஆண்டில்‌ நிறுவப்பட்டது. இக்கல்லூரியில்‌ தற்போது 10௦ இளங்கலை பட்டதாரிகளும்‌, 6௦ முதுகலை பட்டதாரிகளும்‌ பயின்று வருகின்றனர்‌. நாள்தோறும்‌ ஏறத்தாழ 1,000 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தக்‌ கல்லூரி மற்றும்‌ மருத்துவமனையின்‌ கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான பணிகள்‌ 40 கோடி ரூபாய்‌ செலவில்‌ மேற்கொள்ளப்படும்‌. வரவு -செலவுத்‌ திட்டத்தில்‌ மருத்துவம்‌ மற்றும்‌ மக்கள்‌ நல்வாழ்வுத்‌ துறைக்கு 18,661 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *