செய்திகள்

வீட்டில் இருந்துகொண்டே டயாலிஸிஸ் செய்யலாம்: புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாதனை

புதுக்கோட்டை, ஜூலை.1–

வாரம் இருமுறை அல்லது மூன்று முறை மருத்துவமனைக்கு வந்து டயாலிசிஸ் செய்து கொள்ளும் நோயாளிகளுக்கு ஒரு புது வழியை காட்டி இருக்கிறது அரசு புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை.

புதுக்கோட்டை மச்சுவாடி பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய அருண்குமார் என்பவர் ஜூன் 15ஆம் தேதி சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டயாலிசிஸ் செய்து வந்த மருத்துவர்கள் வீட்டிலேயே அவர் டயாலிசிஸ் செய்து கொள்ளும் வண்ணம் ஒரு மாற்று சிகிச்சையினை அளித்துள்ளனர்.

அனுமதிக்கப்பட்ட மூன்றாம் நாள் அவருக்கு மயக்க மருந்து கொடுத்து ஒரு சிறு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

சிறுநீரக மருத்துவ நிபுணர் சரவணகுமார், சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் லதா, மயக்கவியல் மருத்துவர்கள் டாக்டர் சாய்பிரபா, பாலசுப்ரமணியம் ஆகியோர் அடங்கிய குழு இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டது. அதில் இரண்டு குழாய்கள் பெரிட்டோனியம் என்று சொல்லப்படுகின்ற வயிற்றினுள் உள்ள உறைக்குள் வைக்கப்பட்டன. ஒரு குழாய் வழியாக சிறுநீரகம் போல் வேலைசெய்யும் திரவங்கள் செலுத்தப்பட்டு ஆறு மணி நேரம் வயிற்றினுள் நிறுத்தப்படும். உடலில் உள்ள கழிவுப் பொருட்கள் பெரிட்டோனிய உறை வழியாக இந்த திரவத்தை வந்தடையும் .பிறகு இரண்டாவது குழாய் திறக்கப்பட்டு அதன் வழியே கழிவுப்பொருட்கள் வெளியேற்றப்படும். இதுபோல் ஒரு நாளைக்கு மூன்று முறை அவர் செய்துகொள்ளவேண்டும். இந்தப் பயிற்சியினை நோயாளிக்கு மருத்துவர்கள் வழங்குவார்கள்.

தொடர்ந்த நடமாடும் பெரிடோனியல் டயாலிசிஸ் என்ற இந்த சிகிச்சையினை புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் முறையாக பெற்ற அருண்குமார் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். இதுபற்றி மருத்துவமனை முதல்வர் மீனாட்சி சுந்தரம் கூறியதாவது,” இந்த வெற்றிகரமான சிகிச்சையினை சாதித்துக் காட்டியதன் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஒரு மிகப்பெரிய கௌரவம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் நோயாளி மருத்துவமனைக்கு வர வேண்டிய அவசியம் இல்லை. இந்த கொரோனா காலத்தில் மருத்துவமனைக்கு அடிக்கடி வருவது இச்சிகிச்சையின் மூலம் தவிர்க்கப்படுகிறது.

மேலும் ஹீமோ டயாலிசிஸ் செய்து கொள்வதனால் ஏற்படும் பின் விளைவுகளும் குறிப்பாக நோய்த்தொற்று இதன்மூலம் தவிர்க்கப்படுகிறது. ஒவ்வொரு நோயாளிக்கும் ஒரு லிட்டர் முதல் 3 லிட்டர் வரை டயாலிசிஸ் திரவங்கள் தேவைப்படலாம். ஒரு நாளைக்கு 1000 ரூபாய் முதல் 1200 ரூபாய் வரை செலவாகக் கூடிய இந்த சிகிச்சை முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 30 டயலிசிஸ் மெஷின்கள் மூன்று சுழற்சிகளில் இயங்குவதாகவும் கூடிய விரைவில் ராணியார் தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவமனையிலும் டயாலிசிஸ் வசதி செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *