நாடும் நடப்பும்

விவசாயிகள் போராட்டத்தை வீழ்த்த மத்திய அரசின் புது முயற்சிகள்சென்ற ஆண்டு நவம்பர் மாதத்தில் தலைநகர் டெல்லியின் எல்லைப்பகுதியில் முற்றுகை போராட்டத்தை துவங்கிய விவசாயிகள் இன்று வரை முற்றுகை போராட்டத்தை கைவிடவில்லை. தொடரும் அப்போராட்டம் மத்திய அரசுக்கு பெரும் தலைவலியாக இருப்பதை அறிவோம்.

மழை, குளிர் தற்போது சுட்டெரிக்கும் கோடை வெப்பம் என்பதை பொருட்படுத்தாது தொடரும் விவசாயிகளின் போராட்டத்தில் மிகப்பெரிய அச்சமாக இருப்பது கொரோனா தொற்று அவர்களிடம் பரவி விடுமா? என்ற கவலையும் இருந்தது.

இப்படி ஏழு மாதங்களாக தொடரும் முற்றுகை போராட்டத்தை கைவிட சொல்லி ஏன் மத்திய அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என நாடே கேட்க ஆரம்பிக்கும் முன்பே ஒரு சில அறிவிப்புகளை வெளியிட்டு இருப்பது விவசாயிகளை திருப்திப்படுத்தி விரைவில் போராட்டத்தை கைவிட வைத்து விடும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விட்டது.

கடந்த வார மத்தியில் வேளாண் விளைபொருட்களுக்கு அரசு வழங்கும் குறைந்தபட்ட ஆதரவு விலை (எம்எஸ்பி) தொடரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதன்படி குவிண்டால் நெல்லின் விலை ரூ.1,940 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டு நிர்ணயித்த விலை ரூ.1,868 ஆகும்.

இதேபோல பாஜ்ரா, பருப்பு வகைகள் உள்ளிட்டவற்றுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையும் அறிவிக்கப்பட்டுள்ளது. எள்ளுக்கான எம்எஸ்பி குவிண்டாலுக்கு கூடுதலாக ரூ.452-–ம் துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு உள்ளிட்டவற்றுக்கு குவிண்டாலுக்கு கூடுதலாக தலா ரூ.300–-ம் உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

மத்திய அரசின் கொள்முதல் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டுவந்த 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு நாடு முழுவதும் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு உருவானது. இந்த சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து டெல்லி எல்லையில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் எட்டப் படவில்லை. இந்த சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணய முறை கைவிடப்படும் என்ற அச்சமும் இதற்குக் காரணமாகும். ஆனால் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணய முறை தொடரும் என்று அரசு கூறி வருகிறது. –

பஞ்சாப் மாநில விவசாயிகள் தான் பெரும்பாலும் தற்போதைய போராட்ட களத்தில் தீவிரமாக பங்கேற்று இருப்பதை உணர்ந்து அவர்களுக்கு ஏதேனும் நன்மை செய்து விட்டால் மனம் மாறி போராட்டத்தை கைவிடலாம் என்ற எண்ணத்தோடு உணவு தானிய கொள்முதல் மிக அதிகமாகவே பஞ்சாப் மாநில விவசாயிகளிடம் இருந்தே பெறப்பட்டுள்ளதை கண்டோம்.

அதன் பயனாக விவசாயிகளுக்கு தரப்பட வேண்டிய உரிய மானிய தொகையும் உடனுக்குடன் அவரவர் வங்கி கணக்கில் வந்தும் விட்டது!

இப்படி மத்திய அரசு விவசாயிகளின் நலனில் அக்கறை காட்டுவது நல்லது தான். ஆனால் போராடும் பஞ்சாப் மாநில விவசாயிகளுக்கு விசேஷ சலுகைகள் சரியான முடிவா?

விவசாய சட்ட மசோதா கொண்டு வர இருக்கும் மாற்றம் தேசம் எங்கும் இருக்கும் விவசாயிகளுக்கு பல்வேறு பாதிப்புகளை கொண்டு வரும் என்ற அச்சம் இருப்பதால் தானே ஆரம்பம் முதலே இப்போராட்டம் துவங்கியது.

விவசாயிகளிடையே பிரிவினை ஏற்படுத்தி போராட்டத்தை வலு இழக்க செய்து விடமுடியுமா? என்பதை காலம் தான் பதில் சொல்லும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *