செய்திகள்

விழுப்புரத்தில் பிளாஸ்டிக் பைகள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி:

விழுப்புரம், ஆக.26–-
விழுப்புரத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில், பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு இயக்க விழிப்புணர்வுப் பேரணி நேற்று நடைபெற்றது.
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் பிளாஸ்டிக் பைகள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி விழுப்புரம் நான்கு முனைச் சாலை சந்திப்பு அருகே தொடங்கியது. இந்தப் பேரணியை, மாநில சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.
பேரணியில் பிளாஸ்டிக் மாசில்லாத தமிழகத்தை உருவாக்குவது தொடர்பானவிழிப்புணர்வு பதாகைகளை விஆர்பி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஏந்திச் சென்றனர். இவர்களுடன் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள், அலுவலர்களும் பேரணியில் கலந்துகொண்டனர். இந்தப் பேரணி, விழுப்புரம் நான்குமுனைச் சாலை சந்திப்பில் தொடங்கி, நேருஜி சாலை, பூந்தோட்டம் சாலை, ரங்கநாதன் வீதி, திருச்சி சாலை வழியாக வந்து மீண்டும் நான்குமுனை சாலை சந்திப்பில் முடிவடைந்தது. நெகிழிப் பைகளை பயன்படுத்தக்கூடாதென வலியுறுத்தி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கிச் சென்றனர்.
இந்த நிகழ்ச்சியில், மக்கள் இனி பிளாஸ்டிக் பைகளை உபயோகப்படுத்தாமல் துணிப்பைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என விழிப்புணர்வை ஏற் படுத்தும் வகையில், அரசு சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள மாதிரி துணிப் பைகளை அமைச்சர் சி.வி.சண்முகம் பொது மக்களுக்கு வழங்கினார். தொடர்ந்து, பிளாஸ்டிக் பைகள் உபயோகத்தை தவிர்ப்பது குறித்த துண்டுப் பிரசுரங்களையும் அவர் விநியோகம் செய்தார்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.பிரியா, விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் சு.ராஜேந்திரன், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் வெ.மகேந்திரன், செயற்பொறியாளர் ராஜா, மகளிர் திட்ட இயக்குநர் சுந்தரராஜன், முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) வளர்மதி, மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் கு.வரலட்சுமி, நகராட்சி ஆணையர்(பொ) ராஜா, முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஜி.பாஸ்கரன், சுரேஷ்பாபு, எல்.கண்ணன், ராமதாஸ், முருகவேல், பாலாஜி, ராஜி, ரமேஷ், வழக்குரைஞர்கள் செந்தில், வேலவன் உள்ளிட்ட அதிமுகவினர் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *