செய்திகள்

விருதுநகர், வேலூர், கள்ளக்குறிச்சி, கோவையில் புதிய சிப்காட் தொழில் பூங்கா

ரூ.1.5 லட்சம் கோடி முதலீட்டில் 85 புதிய தொழில் திட்டங்கள்: 2 லட்சம் பேருக்கு வேலை

சென்னை, திருச்சி, மதுரை, கோவை மாநகராட்சிகளில் இலவச வைபை

சென்னை, மார்ச் 20–

பின் தங்கிய மாவட்டங்களில் 1 லட்சத்து 44 ஆயிரத்து 28 கோடி முதலீட்டில் 85 தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும். இவற்றின் மூலம் 2 லட்சத்து 14 ஆயிரத்து 478 கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று சட்டசபையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:–தமிழ்நாடு, கடந்த இரண்டு ஆண்டுகளாக, தொழில்துறையில் அதிக அளவிலான முதலீடுகளை ஈர்த்து வருகிறது. 2021–ம் ஆண்டு மே மாதம் முதல் இதுவரை 3,89,651 பேர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கக்கூடிய 221 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகி உள்ளன. இவற்றின் மூலம், 2,70,020 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் பெறப்படும்.

இந்த முதலீடுகளின் பலன்களை ஒருங்கிணைத்து, 2030–ம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை நோக்கி பயணிக்க, உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024–ம் ஆண்டு ஜனவரி மாதம் 10, 11 நாட்களில் சென்னையில் நடத்தப்படவுள்ளது. தொழில்கள் செழிக்கும் தமிழ்நாட்டின்

தனிச் சிறப்புகளையும், முதலீட்டை ஈர்ப்பதற்கு உகந்த சூழலையும் எடுத்துக்காட்டும் தளமாக இம்மாநாடு அமையும்.

மேலும், மாநிலத்தில் உள்ள பெருந்தொழில்கள், சிறு தொழில் நிறுவனங்கள், புத்தொழில்கள் ஆகியவற்றை முதலீட்டாளர்களுடனும் உலகச் சந்தையுடனும் இணைக்க ஒரு வாய்ப்பாகவும் இது அமையும். இதற்கென, வரவு-செலவுத் திட்டத்தில் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தொழில் வளர்ச்சியை மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் பரவலாக்க வேண்டும் என்பது இந்த அரசின் குறிக்கோளாகும். அண்மையில் கையொப்பமிட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 85 தொழில் திட்டங்கள் தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளன. இத்திட்டங்களின் மூலம் 1,44,028 கோடி ரூபாய் முதலீட்டில் 2,14,478 பேர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

32 ஆயிரம் பெண்களுக்கு

வேலை வாய்ப்பு

தொழில்துறையில் அதிக முதலீடுகளை ஈர்ப்பதோடு மட்டுமல்லாமல் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில், குறிப்பாக பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் இந்த அரசு முனைப்பாக உள்ளது.

பெண்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தோல் அல்லாத காலணிகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு அரசு சிறப்பு முன்னுரிமை அளித்து வருகிறது. இத்தொழிற்சாலைகள் ஏற்கனவே செய்யாறு, பர்கூர் ஆகிய இடங்களில் செயல்பாட்டில் உள்ளன. திண்டிவனத்தில் 5,400 பெண்களுக்கும், பெரம்பலூரில் 31,600 பெண்களுக்கும் வேலைவாய்ப்புகள் தரக்கூடிய இரண்டு தொழிற்சாலைகளுக்கு முதலமைச்சர் அவர்கள் நேரில் சென்று அடிக்கல் நாட்டியுள்ளார்.

மேலும், இரண்டு புதிய தொழிற்சாலைகள் ராணிப்பேட்டையிலும், கள்ளக்குறிச்சியிலும் அமைக்கப்படவுள்ளன. இவற்றில் 32,000 பெண்களுக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும். தோல் அல்லாத காலணிகள் உற்பத்தி துறையில் மேலும் முதலீடுகளை ஊக்குவிக்க இதற்கென தனிக்கொள்கை வெளியிட்டுள்ளதுடன், தைவான் காலணி உற்பத்தியாளர்கள் சங்கத்துடன் ‘தமிழ்நாடு வழிகாட்டி’ நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் கையொப்பமிட்டுள்ளது.

சிப்காட் தொழில் பூங்கா

விருதுநகர், வேலூர், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் புதிய சிப்காட் தொழில் பூங்காக்கள் 410 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். இதனால், ஏறத்தாழ 22,000 பேர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். மேலும், கங்கைகொண்டானில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,500 பணியாளர்கள் தங்கும் வசதிகளுடன் தொழிலாளர் குடியிருப்புகள் ஏற்படுத்தப்படும். இம்மதிப்பீடுகளில் தொழில் துறைக்கு 3,268 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இலவச வைபை

இன்றைய இணைய உலகத்தில், தகவலே ஆற்றலுக்கும் அதிகாரத்திற்கும் அடித்தளம். எனவே அதன் அடிப்படையில், முதற்கட்டமாக சென்னை, தாம்பரம், ஆவடி, கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம் மாநகராட்சிகளின் முக்கிய பொது இடங்களில் இலவச வைபை சேவைகள் வழங்கப்படும்.

உலகளவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழ்நாட்டை ஒரு முக்கிய மையமாக நிலைநாட்டுவதற்கும், பெருகி வரும் அலுவலகக் கட்டமைப்புத் தேவைகளை நிறைவு செய்வதற்கும், சென்னை, கோயம்புத்தூர் மற்றும் ஓசூரில்,“தமிழ்நாடு தொழில்நுட்ப நகரங்களை” இந்த அரசு அமைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *