அந்த முதியவர் ஓட்டலுக்கு வந்ததும் அங்கு தினமும் சாப்பிடுகிறவர்கள் மட்டுமின்றி ஓட்டல் முதலாளி மற்றும் சிப்பந்திகள் கண்கள் அவர் பக்கமே இருக்கும். அவரது தள்ளாத வயது மற்றும் கை நடுக்கம் காரணமாக அவர் உண்ணும் போது உணவு ஆங்காங்கே சிதறும். அவர் ஆடையும் உணவுச் சிதறல்களால் நிரம்பியிருக்கும். பார்ப்பவர்கள் ஒரு மாதிரி நினைத்தாலும் அவர்களுக்கு அவர் மேல் ஒரு கரிசனம் ஏற்படும். அவர் சாப்பிட்டு முடித்ததும் ஒரு நல்ல ஆடை உடுத்திய, மாஸ்க் அணிந்த, கண்களில் கண்ணாடி போட்ட ஒரு மனிதர் அவரைக் கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டு போய் அவரின் மேல் மற்றும் அவர் ஆடையின் மேல் உள்ள உணவுச் சிதறல்களை சரிப்படுத்தி விட்டு சென்று விடுவார். முதியவர் சாப்பிட்டதற்கு பணம் கொடுத்து விட்டு செல்வார். ஓட்டல் முதலாளிக்கு அவரிடம் பணம் வாங்கும் பொழுது ஒரு விதமான கலக்கம் அவருக்கு ஏற்படும். மேலும் இது நாளுக்குள் நாள் தொடர இவர் யார் எங்கிருந்து வருகிறார் என்று அறியும் ஆவல் அங்கு வருபவர்களுக்கு ஏற்பட்டது.
முதியவரிடம் ஏதாவது கேட்டால் புன்னகை ஒன்றே பதிலாக அமையும்.
காலையும் மாலையும் முதியவர் ஒரு சின்னக் கடையில் டிபன் அருந்தி விடுவார். அங்கும் ஒருவர் வந்து கவனிப்பதாக அறிந்த ஓட்டல் முதலாளி இது என்ன புதிராக உள்ளதே. இதற்கு விடை தெரிந்தேயாக வேண்டும் என்ற ஆவல் அவருக்கு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போனது.
பாஸ்கர் அன்று ஓட்டலுக்கு வந்து சாப்பிட வந்தான். அப்போது அந்த முதியவர் வந்து சாப்பிட ஆரம்பித்ததிலிருந்து அவரை சுத்தம் செய்த நிகழ்வு வரை பார்த்தவனுக்கு மிகவும் மனம் வேதனையடைந்து மட்டுமல்லாமல் அவரை சுத்தம் செய்தவரின் ஈடுபாடு அவனை பிரமிக்கச் செய்தது.
பாஸ்கருக்கு சுத்தம் செய்தவரை சரியாக அடையாளம் காண முடியவில்லை. ஏனெனில் அவரை அடையாளம் தெரிந்து கொள்ளக் கூடாது என்று அந்த மனிதர் தன் கண்களுக்கு கண்ணாடி மற்றும் முகத்தில் மாஸ்க் போட்டிருந்தார்.
முதியவர் ஓட்டலை விட்டு கிளம்பியதும் பாஸ்கர் ஓட்டல் முதலாளியிடம் இவரைப் பற்றிக் கேட்க, அவர் இந்த நிகழ்வு கிட்டதட்ட இரண்டு மாதமாக நடக்கிறது என்றும் மேற்கொண்டு ஏதும் தெரியாது என்றும் கூறினார்.
பாஸ்கர் ஓட்டலை விட்டு வெளியே வந்து அந்த முதியவரை பின் தொடந்தான். அவர் அந்த வீட்டில் நுழைந்ததைக் கண்டு அதிர்ந்தான்.
அன்று ஒரு மீட்டிங் சம்பந்தமாக மானேஜர் முத்துக்குமார் பாஸ்கர் உட்பட நான்கு பேருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது கடிகாரம் ஒரு மணி அடித்தவுடன் பேசிக் கொண்டிருந்த மானேஜர் உணவுக்கு அப்புறம் பார்க்கலாமென வெளியே சென்றார். சரியாக அரை மணி நேரம் கழித்து வந்தவர் சாதாரண மனிதர் போல் நடந்து கொண்டார்.
பாஸ்கர் சில நாட்களாகவே தினமும் நடக்கும் ஓட்டல் நிகழ்வால் மிகவும் யோசனையில் ஆழ்ந்தான். அன்று மாலை வேலை முடிந்து எல்லோரும் வீடு சென்றதும் பாஸ்கர் மானேஜர் அறைக்குச் சென்று அவரிடம் வெளிப்படையாகவே தான் கண்ட ஓட்டல் நிகழ்வு பற்றிக் கூறினான். எனக்கு உண்மை தெரிந்து விட்டது என்றதும் மானேஜர் முத்துக் குமார் இடி கேட்ட நாகம் போல் பயந்து கண்கள் கலங்கக் கூறினான்.
எனது அம்மா இறந்த பிறகு எனது தந்தை நடராஜன் விருப்பத்திற்கேற்ப கோமளாவை கை பிடித்ததாகவும் முதலில் சில வருடங்கள் கோமளா நல்ல விதமான வீட்டை மற்றுமின்றி எங்களையும் நன்றாகவே கவனித்தாள்.
அப்பாவிற்கு சற்று உடல் நலக் குறைவு ஏற்பட்டு தடுமாற்றம் அவரை தொற்றிக் கொண்டதும் சில நாட்களாகவே அவள் வீட்டில் எங்கள் இருவர் மேலும் நெருப்பைக் கக்குகிறாள். சில வார்த்தை நல்லதாகவே பேசினாலும் அதில் குறை கண்டு பிடித்து கத்துகிறாள். இனிமேல் அவருக்கு என்னால் பணிவிடை செய்ய முடியாதெனக் கூறியவள் இப்போது என்னையும் மதிப்பதில்லை. அதனால் நான் அப்பா சாப்பிடும் ஹோட்டலுக்கு அவர் உண்ணும் நேரம் பார்த்துச் சென்று பணிவிடை செய்கிறேன். தயவு செய்து யாரிடமும் கூறாதீர்கள் என்று கூறி எப்படி கண்டுபிடித்தீர்கள் என்று பாஸ்கரைக் கேட்க, இரண்டு நாட்களுக்கு முன்னால் நீங்கள் அலுவலகம் விட்டு செல்லும் முன் அந்த கண்ணாடி மற்றும் மாஸ்க்கை பத்திரமாக டிராயரில் வைப்பதைப் பார்த்து தான் அறிந்தேன் என்றான்.
மறுநாள் சாப்பாட்டு வேளையில் ஓட்டலுக்கு சென்ற முத்துக் குமார் அங்கு அப்பாவைக் காணாது கண்கள் அலைபாய்ந்து நிற்க அங்கு வந்த ஓட்டல் முதலாளி அவரை அழைத்துக் கொண்டு ஒரு அறைக்குச் சென்றார். அங்கு அவர் அப்பாவிற்கு ஓட்டல் சிப்பந்தி உணவை ஸ்பூன் மூலம் கொடுத்துக் கொண்டிருந்தான். எங்களுக்கு விடை தெரிந்தது பாஸ்கர் சார் மூலம், இனிமேல் அவர் எங்களுக்கும் அப்பா தான் என்று ஓட்டல் முதலாளி கூற, பாஸ்கர் ஒரு தெய்வமாகவே முத்துக் குமாருக்கு தெரிந்தான்.