சினிமா செய்திகள்

வாழ்நாளில் காந்தி பார்த்த ஒரே படம் ‘ராமராஜ்யா’ : தமிழில் ‘டப்’ செய்து சாதனை படைத்த ஏவிஎம் செட்டியார்

75 ஆண்டுகளுக்கு முன் மும்பை ஜூஹூ நகரில் வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு

வாழ்நாளில் காந்தி பார்த்த ஒரே படம் ‘ராமராஜ்யா’ :

தமிழில் ‘டப்’ செய்து சாதனை படைத்த ஏவிஎம் செட்டியார்

இன்று ஸ்ரீராமர் கோவில் அடிக்கல் நாளில் ஒரு பிளாஷ்பேக்

நினைப்பெல்லாம் இன்றைக்கு சுமார் 80 வருஷம் பின்னாலே போயிடுச்சு, அயோத்தியில் ஸ்ரீராமனுக்கு பிரம்மாண்ட கோவில் கட்டுவதற்கான அடிக்கல் என்ற செய்தி கேட்டு.

ராமராஜ்யம் –இது ஏவிஎம் செட்டியார் எடுத்த தமிழ் டப்பிங் படம் 1945 வாக்கில். அப்போ, தீபாவளி பண்டிகைக்கு படம் ரிலீஸ் ஆச்சு. இந்தியில் இந்தப் படத்தோட பேரு ராம ராஜ்யா.

தேசப்பிதா மகாத்மா காந்தி தன்னுடைய வாழ்நாளில் பார்த்த ஒரே படம் முதலும் கடைசியுமாய் இந்தப்படம் ராம ராஜ்யா தான்.

வரலாற்று சிறப்பு, அந்தப் பெருமை இந்த ஒரு படத்துக்கு தான்.

ராமராஜ்யம் சென்னை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, காரைக்குடி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராஜபாளையம்… இப்படி எட்டே எட்டு சென்ட்ல தான் ரிலீஸ் ஆச்சு.

சென்னை ராயப்பேட்டை மணிக்கூண்டு கிட்ட இப்போ இருக்கிற எக்ஸ்பிரஸ் அவென்யூ வளாகத்துக்கு பக்கத்துல இருக்கிற ஓடியன் தியேட்டரில் ராமராஜ்யா ஹிந்தி படம் ஓடிட்டு இருந்தது. படத்தை ஏவிஎம் செட்டியார் போய் பார்த்திருக்கிறார்.

‘கொரோனா’ இன்றைக்கு உலகத்தையே நடுநடுங்க வைத்து கொண்டு இருக்கிறது. இந்த நேரத்தில் ராமாயண் டிவி மெகா தொடர் இந்தியா பூரா ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இது இந்தியிலே நம்பர் ஒன் புரொடியூசர் – டைரக்டர் ராமானந்த் சாகரின் பிரமாண்ட படைப்பு.33 வருடங்கள் கழித்து மறு ஒளிபரப்பு.

துணிச்சல் + நம்பிக்கை ரெண்டிலும் வெற்றி

கிட்டத்தட்ட நம்ம இந்திய ஜனத்தொகையில் ஏழு கோடி பேருக்கு மேல இந்த ராமாயண மெகா டிவி தொடரைப் பார்த்துக் கொண்டு இருப்பதாக ஒரு புள்ளி விபரம் கூறுகிறது. இது இமாலய சாதனை.

‘‘ராம ராஜ்யா இந்தி படத்தை தமிழில் எடுத்தால் அது ஓடும் என்கிற நம்பிக்கை எனக்கு இல்லப்பா. தேவையில்லாமல் ஏன் ரிஸ்க் எடுக்கணும்….?’’ என்று ஹிந்தியில் எடுத்த ப்ரொட்யூசர்

அதைரியப்படுத்தி விட்டாராம் செட்டியாரை. அதை செட்டியார் காதில் வாங்கவில்லை. இந்தி புரொடியூசர் போட்ட கண்டிஷனை ஒத்துக்கொண்டு ரைட்ஸ் வாங்கினார். துணிச்சலா எடுத்தார். நம்பிக்கையோடு ரிலீஸ் பண்ணினார். ஜெயித்துக் காட்டினார், முயற்சி திருவினையாக்கும் செட்டியார்.

காந்தி மாதிரியே முதலும் கடைசியும்…

டப்பிங் வசனம், பாடல்கள் இரண்டையும் திருநெல்வேலி கள்ளிடைக்குறிச்சி குளத்து அய்யரிடம் ஒப்படைத்தார். மகாத்மா காந்தி எப்படி தன் வாழ்நாளில் ராம ராஜ்யா ஒரே படத்தை முதலும் கடைசியுமாக பார்த்து இருந்தாரோ அதே மாதிரிதான் இந்த குளத்து ஐயரும். இவர் ‘டப்பிங்’ வசனம் பாடல்கள் எழுதிய முதல் படமும் இதுவே, கடைசி படமும் இதுவே.

அப்பா குளத்து ஐயருக்கு உதவியாளராக இருந்தவர் தான் அவருடைய மகன் தேவநாராயணன். ராமானந்த் சாகரின் ராமாயண் மெகா டிவி தொடருக்கு டப்பிங் வசனகர்த்தா– பாடலாசிரியர் ஆக இவர் ஒப்பந்தமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி… இப்படி கிட்டத்தட்ட 700 படங்களுக்கு டப்பிங் பண்ணி இருப்பவர் தேவநாராயணன். இந்தப் படங்களிலும் இவர் பாடல்களை எழுதி இருக்கிறார்.

தும்பைப் பூ மாதிரி வெள்ளை வெளேர் கதர் வேட்டி, கதர் சட்டையில் கண்ணில் காட்சி தருபவர். காந்தீயவாதி– இந்த தேவ நாராயணன். இவருக்கு டப்பிங் பிதாமகன் என்று பெயர் இந்த பீல்டுல. இன்றயை தேதியில் இவருடைய மகன் ரவிசங்கரும் – தாத்தா, அப்பா வழியிலே வந்த ஒரு டப்பிங், குடும்பமும் ஆர்டிஸ்ட்டுகள். 75 வருஷமா மூன்று தலைமுறை குடும்பம் டப்பிங்கில். வாழையடி வாழையாக இதுவும் ஒரு சாதனைதான்.

ஹிந்தி ராம ராஜ்யா படத்தில் இருந்து எதையும் செட்டியார் மாற்றவில்லை. அப்படியே டப் பண்ணினார். எதைச் செய்தாலும் அதில் தன்னுடைய டச் இருந்தே ஆக வேண்டும் என்று நினைப்பவர். ஆகவே அந்த நாளில் நம்பர் ஒன் வரிசையிலிருந்த பிரபல பாடகி டி.கே. பட்டம்மாளை (நித்யஸ்ரீ மகாதேவனின் பாட்டி) அழைத்து ஒரு பாடலை பாட வைத்தார்.

அருணாச்சல கவிராயருடைய ‘‘எனக்கு உன் இருபதம் நினைக்க அருள்தா’’ என்ற பாட்டை (அந்த நாள் பாஷைன்னா– அது கீர்த்தனை) மட்டும் சேர்த்தார். அது டைட்டில் சாங். திரையில் ஆறு நிமிடம் ஓடும். அது காதில் ஒலிக்கும் அதே நேரம் அந்த ஆறு நிமிடத்திற்குள் ராமாயணத்தின் முன் கதைச் சுருக்கத்தை நிழல் சித்திரமாக ஓடவிட்டு இருப்பார். அதற்குப் பிறகுதான் ராம ராஜ்ஜியம் கதையே வரும். நகரும்.

சீதாதேவியை விழுங்குவது: செட்டியார் கேவிக் கேவி…

உணர்ச்சிவசப்பட்டால் தான் மனுஷன். இல்லாவிட்டால் பெரும் ஜடம் தான். ஒரு சில படங்களில், ஒரு சில காட்சிகளில் கதையோடு, கதாபாத்திரங்களின் நடிப்போடு நாம் ஒன்றிப் போய் விடுவோம். அப்படி ஒன்றிப் போய் விட்டால்… நம்மையும் அறியாமல் விழி ஓரம் கண்ணீர் வந்துவிடும. இளகிய மனசு தாய்க்குலம் விசும்பி விசும்பி அழுது விடும். இது வாடிக்கை.

ராமராஜ்யாவில் ஒரு சீன். பூமி இரண்டாகப் பிளந்து சீதாதேவியை விழுங்குவது மாதிரி , அதாவது பூமிக்குள்ளே இழுத்துக்கொண்டு போகிற மாதிரி. இந்தக் காட்சியை பார்த்த செட்டியார், தியேட்டரில் தன்னையுமறியாமல் கேவிக் கேவி அழுது விட்டாராம்.

மனசுக்கு ஒரு படம் நமக்கு ரொம்பவே பிடித்துப் போய்விட்டது என்றால் இரண்டாவது தடவை பார்ப்போம். ஒரு சிலர் மூன்று தடவை கூட பார்ப்பார்கள். இன்னும் சிலரோ 4, 5 தடவைகூட பார்ப்பவர்களும் இருக்கிறார்கள். இந்த ஹிந்தி படத்தை ஏவிஎம் செட்டியார் அடுத்தடுத்து நான்கு தடவை பார்த்தாராம். இது தான் ஒரு படத்தின் தாக்கம்.

மறக்க முடியுமா?

வீ. ராம்ஜீ

தேவநாராயணனின் முதலும் – முடிவும்கூட ராமராஜ்யமே.

1945ல் ‘ராம–ராஜ்யம்’ டப்பிங் வசனம் – பாட்டு (அப்பாவுக்கு உதவி) மூலம் கலை வாழ்க்கையை துவக்கியவர் தேவநாராயணன். இறக்கும் தருவாயில் இருக்கும் போது அவர் எழுதி, ஏவிஎம் ரமணன் வெளியிட்ட புத்தகமும் ‘ராமராஜ்யம்’ வசந்த் தொலைக்காட்சி தொடருக்காக அவர் தந்தது லவகுசா தேவநாராயணனின் வாழ்க்கை ராமனோடு சம்பந்தப்பட்டதே. அவரது மகன் ரவிசங்கர், இவரது மனைவி வித்யா, இன்னொரு மகன் மோகன் குமார், இவரது மனைவி கீர்த்தி, பேத்தி மோகிதா (எம்பிபிஎஸ் படித்து வருபவர்). இப்படி மொத்த குடும்பமே டப்பிங் தொழிலில் தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *