போஸ்டர் செய்தி

வாழப்பாடியில் புதிய கிரிக்கெட் மைதானம்

Spread the love

சேலம், பிப்.9–
சேலம் வாழப்பாடியில் 13 ஏக்கர் பரப்பளவில் ரூ.3 கோடி மதிப்பிலான புதிய கிரிக்கெட் மைதானத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
சர்வதேச போட்டிகளில் பதக்கம் பெறும் வாய்ப்பு உள்ளவர்களுக்கு ஊக்க தொகை வழங்கப்படுகிறது என்று முதல்வர் தெரிவித்தார்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி காட்டுவேப்பிலைப்பட்டியில், சேலம் கிரிக்கெட் பவுண்டேஷனால் 13 ஏக்கர் பரப்பளவில் ரூ.3 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய கிரிக்கெட் மைதானத்தை இன்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத்தலைவரும் முன்னாள் கிரிக்கெட் சங்கத்தின் தலைவருமான என்.சீனிவாசன், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும், தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குநரும் ராகுல் டிராவிட் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், செல்லூர் கே. ராஜூ, பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், பா.பென்ஜமின், மாவட்ட கலெக்டர், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் ரூபா குருநாத் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், சேலம் மாவட்ட கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:–
இளைய சமுதாயத்தினரின் அறிவு வளர்ச்சியை மட்டுமல்லாது, அவர்களது உடல் வளர்ச்சி, மன வளர்ச்சி, உடல் நலம் ஆகியவற்றை பேண வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு, அம்மாவும், அவரை பின்பற்றி அம்மாவின் அரசும், கல்விக்கு அளிக்கும் அதே முக்கியத்துவத்தை விளையாட்டிற்கும் அளித்து வருகிறது. உயர் தரமான விளையாட்டு கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தியும், விளையாட்டு கலாச்சாரத்தினை அனைவரிடமும் ஊக்குவித்தும், அடித்தட்டு நிலையில் உள்ள இளைஞர்களின் திறமைகளை மெருகேற்றியும், அவர்களது திறனை முழு அளவில் வளர்த்து தேசிய மற்றும் சர்வதேச அளவில் அவர்கள் பதக்கங்கள் பெற்றிட, எங்களுடைய அரசு அவர்களுக்கு விளையாட்டுத் துறையில் செய்துள்ள சாதனைகள் சிலவற்றை இங்கே குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன்.
நவீன வசதிகளுடன்
விளையாட்டு அரங்கங்கள்
1995-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக, உலகத் தரம் வாய்ந்த ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், நேரு உள் விளையாட்டரங்கம், மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கம், நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டு அரங்கம், வேளச்சேரி நீச்சல் வளாகம் ஆகிய விளையாட்டு அரங்கங்கள் அம்மாவினால் உருவாக்கப்பட்டன. இந்த அரங்குகள் அனைத்தும் நவீன வசதிகளுடன் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் 2005ம் ஆண்டு அம்மாவினால் துவக்கப்பட்டது. அம்மாவின் முயற்சியால் 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் உலக சதுரங்க போட்டி தமிழ்நாட்டில் நடத்தப்பட்டது.
அரசு மற்றும் பொதுத் துறை வேலை வாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் தலைசிறந்த விளையாட்டு வீரர்களை பணி நியமனம் செய்ய வழிவகை செய்து ஆணை வெளியிடப்பட்டது. இதுவரை தமிழ்நாட்டைச் சார்ந்த மூன்று தலைசிறந்த சர்வதேச விளையாட்டு வீரர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
ரூ.49 கோடி ஊக்கத் தொகை
ஒலிம்பிக், ஆசிய, காமன்வெல்த், தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வெல்லும் தமிழக வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை கௌரவிக்கும் வகையில், உயரிய ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த உயரிய ஊக்கத் தொகை விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமன்றி, சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கும் பயிற்சியாளர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
இது வரை 925 விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு 49 கோடியே 28 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு விளையாட்டை ஊக்குவிக்கின்ற அரசு அம்மாவினுடைய அரசு,
ஒலிம்பிக் மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கம் பெற வாய்ப்புள்ள திறன் வாய்ந்த 12 விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்து, சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான ஊக்கத் தொகையாக, ஆண்டு ஒன்றுக்கு ஒவ்வொரு வீரருக்கும் தலா 25 லட்சம் ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் தொகை, விளையாட்டு வீரர்கள் வெளிநாடு சென்று பயிற்சி மேற்கொள்ளவும், வெளிநாட்டுப் பயிற்சியாளரை அமைத்துக் கொண்டு பயிற்சி பெறவும், தரமான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் சீருடைகளை வாங்கிக் கொள்ளவும், உயரிய ஊட்டச்சத்து உணவுகளை உட்கொள்ளவும், பல்வேறு போட்டிகளில் பங்கேற்பதற்கான பயணச் செலவுகளை மேற்கொள்ளவும் வீரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.
இதுபோன்ற எண்ணற்ற திட்டங்களை அம்மாவின் அரசு செயல்படுத்தி வருகிறது.
தமிழ்நாடு விளையாட்டு
மேம்பாட்டு ஆணையம்
விளையாட்டை மேம்படுத்தும் நோக்கத்துடனும், இளைஞர்களிடையே விளையாட்டு ஆர்வத்தினை வளர்க்கும் நோக்கத்துடனும், அம்மாவினால் 1992ம் ஆண்டு இளைஞர் மற்றும் விளையாட்டு பயிற்சித் துறை மற்றும் தமிழ்நாடு மாநில விளையாட்டு வாரியம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, இந்திய விளையாட்டு ஆணையத்திற்கு இணையான தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்” என்ற ஒரு ஆணையம் உருவாக்கப்பட்டது.
இந்த ஆணையம் எடுத்த நடவடிக்கைகள் காரணமாக, தமிழ்நாட்டு இளைஞர்கள் இன்று தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடக்கும் அனைத்து போட்டிகளிலும் பங்கு பெற்று சாதனை படைத்து வருகிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் இந்த நிகழ்ச்சியின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன்.
அம்மா இளைஞர்
விளையாட்டுத் திட்டம்
கிராமங்களில் உள்ள இளைஞர்களின் ஆரோக்கியம் மற்றும் மன வளத்தை மேம்படுத்தவும், கூட்டு மனப்பான்மையை உருவாக்கவும், இளைஞர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கவும், அதை வெளிக் கொணரவும், அம்மாவின் அரசால் 12 ஆயிரத்து 524 ஊராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகளில் 76 கோடியே 23 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ‘‘அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டம்”என்ற ஒரு அற்புதமான திட்டத்தை நாங்கள் துவக்கி வைத்திருக்கின்றோம்.
இந்த திட்டத்தின் மூலம் கிராம ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் கிரிக்கெட், கபடி, வாலிபால், பூப்பந்து ஆகிய விளையாட்டுகளுக்கு ஆடுகளங்கள் அமைப்பதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டு, அப்பணிகள் தற்போது துரிதமாக முடிக்கப்பட்டு வருகின்றன. இந்த விளையாட்டுகளுக்குத் தேவையான உபகரணங்கள், பயிற்சிகள் மற்றும் கருவிகளை ஒரு வருட காலம் தொடர்ந்து வழங்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். ஒன்றிய, மாவட்ட மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டு, மாநில அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
இன்றைய காலகட்டத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் விரும்பி விளையாடும் விளையாட்டு கிரிக்கெட் ஆகும். அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டத்தின் மூலம் கிராமங்களில் அமைக்கப்படும் கிரிக்கெட் ஆடுகளத்தினால், கிராமப்புற இளைஞர்கள் அதிக அளவில் ஊக்கப்படுத்தப்படுவார்கள். இதன் விளைவாக வருங்காலத்தில், தமிழ்நாட்டிலிருந்து குறிப்பாக கிராமப்புறத்தில் இருந்து இளைஞர்கள் அதிக அளவில் மாநில மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளில் இடம் பெற்று, சர்வதேச போட்டிகளில் பங்கு கொள்ளும் நிலை உருவாகும் என்பதை நான் இங்கே உறுதிபட தெரிவித்துக் கொள்கிறன். மேலும், கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் பள்ளி மாணவர்களுக்கான மூன்று விளையாட்டு விடுதிகள் அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இளைஞர்களுக்கு
வரப்பிரசாதம்
சென்னையிலுள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானமும், அதன் அரங்கமும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மூலமாக நிர்வகிக்கப்படுகிறது. அந்த மைதானத்திலுள்ள மூன்று அரங்கங்கள் சில பிரச்சினைகள் காரணமாக வெகு காலமாக உபயோகப்படாத நிலையில் இருந்தது. இப்பிரச்சினைகளை எங்களுடைய அரசு களைந்துள்ளது. அதன் அடிப்படையில், அனைத்து அரங்கங்களும் ரசிகர்கள் போட்டிகளைக் கண்டுகளிக்கும் வகையில் விரைவான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று, இங்கே இவ்விழாவில் பங்கேற்றிருக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகளையும், என்.சீனிவாசனை யும் இந்த நிகழ்ச்சியின் வாயிலாக கேட்டுக் கொள்கிறேன்.
சேலம் நகருக்கு அருகில் உள்ள வாழப்பாடியில் சுமார் 3 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த கிரிக்கெட் மைதானம், இப்பகுதியில் வசிக்கும் கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். இப்பகுதியில் மட்டுமல்ல, இந்த மாவட்டத்தைச் சுற்றியுள்ள பல்வேறு மாவட்டத்தில் இருக்கின்ற இளைஞர்களும் இங்கே வந்து ஆர்வமுடன் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபடக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட்டிருக்கின்றது. இப்பகுதியில் உள்ள இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்களது பங்கேற்புடன் இம்மைதானத்தில் போட்டிகளை நடத்த வேண்டும் என சேலம் கிரிக்கெட் பவுண்டேஷனை இந்த நேரத்திலே கேட்டுக் கொள்கிறேன்.
கிரிக்கெட் தந்தை
என்.சீனிவாசன் கிரிக்கெட் வாரியத் தலைவராக இருந்தபொழுது பல்வேறு சாதனைகளை புரிந்திருக்கின்றார். தமிழகம் மட்டுமல்ல, உலகளவில் அவர் பெயரைச் சொன்னால், குறிப்பிட்டுச் சொன்னால், கிரிக்கெட் தந்தை என்றுகூட சொல்லலாம், அந்தளவிற்கு கிரிக்கெட் மீது நேசம் கொண்டவர், நேசிக்கக்கூடியவர். அப்படி நேசிக்கக்கூடியவர் இருக்கக்கூடிய காரணத்தினாலேதான் இப்படிப்பட்ட மைதானம் நமக்குக் கிடைத்திருக்கின்றது. அவர் ஐபிஎல் கிரிக்கெட் இந்த மைதானத்திலே நடைபெறும் என்ற ஒரு அறிவிப்பை இங்கே வெளியிட்டிருக்கின்றார், உண்மையிலேயே நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.
இதுவரை, ஐபிஎல் விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் தான் நடந்ததாக நான் அறிகிறேன். தமிழகத்தில் வேறு எந்த மாவட்டத்திலும் ஐபிஎல் போட்டி நடைபெறவில்லை. முதன்முதலாக தமிழகத்தில் உள்ள சேலம் மாவட்டம், வாழப்பாடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த பிரம்மாண்டமான கிரிக்கெட் மைதானத்திலே ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடக்கும் என்ற அறிவிப்பை வெளியிட்ட என்.சீனிவாசனுக்கு உங்கள் சார்பாக, கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள் சார்பாக, எனது சார்பாக நன்றியை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன்.
ஐபிஎல் போட்டி நடைபெறுவதற்குத் தேவையான வசதிகளை மேற்கொள்ள வேண்டும், அதற்கு அரசு துணை நிற்க வேண்டுமென்று இங்கே கேட்டுக் கொண்டார். ஐபிஎல் போட்டி நடைபெற வேண்டுமென்று சொன்னால், அதற்குத் தகுந்தாற்போல் இந்த விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும். அதற்குத் தேவையான கட்டட வசதிகள் வேண்டுமென்று இங்கே குறிப்பிட்டார். அதற்கு, எங்களுடைய அரசு அனைத்து வகையிலும் உங்களுக்குத் துணை நிற்கும் என்ற செய்தியை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன்.
அதுமட்டுமல்லாமல், நம்முடைய தமிழக இளைஞர்களைப் பொறுத்தவரையில், எந்த விளையாட்டை எடுத்துக் கொண்டாலும் முதன்மையாக வரவேண்டும் என்ற ஆர்வமோடு விளையாடி சாதனை படைக்கக்கூடிய வீரர்கள் தமிழ்நாட்டு இளைஞர்கள். இன்றைக்குக்கூடி ஜல்லிக்கட்டு பல்வேறு இடங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அப்பொழுதெல்லாம் ஒரு சில இடங்களில் தான் ஜல்லிக்கட்டு நடைபெறும், அதிலும் குறிப்பாக, தென்மாவட்டங்களில் தான் ஜல்லிக்கட்டு அதிகளவில் நடைபெறும். வீரவிளையாட்டாகக் கருதப்படும் ஜல்லிக்கட்டு இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் பரவி, நம்முடைய இளைஞர்கள் மிகச் சிறப்பாக, எழுச்சியாக பங்கேற்குக் கொண்டிருக்கிறார்கள். அனைத்து தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. நம்முடைய இளைஞர்கள் அதிகளவில் ஜல்லிக்கட்டில் ஈடுபட்டு நம்முடைய வீரத் திறமையை காட்டுகின்றனர்.
அண்மையில்கூட, உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஒரே நபர் 16 காளைகளை அடக்கியுள்ளார். அவருக்கு ஹூண்டாய் காரை பரிசாக வழங்கினோம். அப்படி, ஒரே ரவுண்டில் 16 ஜல்லிக்கட்டுக் காளைகளை அடக்கக்கூடிய திறமைபடைத்த இளைஞர் தமிழ் மண்ணிலே பிறந்து, நமது பாரம்பரிய விளையாட்டை நிலை நாட்டியிருக்கின்றார். நம்முடைய இளைஞர்கள் அனைத்து விளையாட்டு களிலும் சிறந்து விளங்குகின்றார்கள் என்பதை இந்த நேரத்திலே தெரிவித்து, இந்த விளையாட்டு மைதானம், கிராமப் பகுதியில், இயற்கை சூழ்ந்த, காற்றோட்டமுள்ள பகுதியில் அமைந்துள்ளது. இதனை, நமது மாவட்ட இளைஞர்களும், அருகாமையில் உள்ள மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களும் பங்குபெற்று நம்முடைய கிரிக்கெட் மைதானத்தை நல்ல முறையில் பயன்படுத்தி, உலகளவில் பிரசித்தி பெறவேண்டுமென்று என தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *