வாழ்வியல்

வானிலை முன்னறிவிப்பை முன்கூட்டியே தெரிவிக்க உதவும் இந்தியக் கடல் ஆராய்ச்சி

வானிலை முன்னறிவிப்பை முன்கூட்டியே தெரிவிக்க இந்தியக் கடல் ஆராய்ச்சி உதவும் என்று இந்தியக் கடல் ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்துகிறார்கள்.

இந்தியக் கடலின் இயைபை ஆராய்ந்ததிலிருந்து உறுதிப்படுத்தப்பட்ட உண்மைகள் வருமாறு:–

இந்தியக் கடலிலுள்ள மீன்களுக்கும் மற்ற உயிர்களுக்கும் போதுமான ஆக்சிஜன் என்னும் உயிர்க் காற்று பெருமளவுக்கு உள்ளது. இதில் விதிவிலக்குகள் அரபிக்கடலும் வங்காள விரிகுடாவும் ஆகும். இங்குச் சில இடங்களில் ஆக்சிஜன் காணப்படவில்லை. இங்கு நீர் போதுமான அளவுக்குச் செங்குத்தாக ஓடாததே ஆக்சிஜன் இல்லாமைக்குக் காரணமாகும். இவ்விடங்களில், உயிர்களுக்கு ஊறுதரும் ஐடிரஜன் சல்பைடு என்னும் வாயு அதிகமாகக் காணப்படுகிறது. இந்தியக் கடலை முழுமையாக ஆராய்வதால் வானிலை அறிவும் தட்ப வெப்பநிலை அறிவும் சிறப்பாகப் பெருகும் என்பதில் ஐயமில்லை. இதனால் நீண்ட எல்லை வானிலை முன்னறிவிப்பை முன்கூட்டியே தெரிவிக்க இயலும். இந்தியக் கடற்பகுதிகளைச் சூழ்ந்த நாடுகளுக்கு மட்டுமல்லாமல் அவற்றிற்கு அப்பாலும் வானிலை முன்னறிவிப்பைத் தெரிவிக்க இயலும்.

உலக வானிலை முன்னறிவிப்பைத் தெரிவிப்பதில் மற்ற கடல்கள் போன்று இந்தியக் கடலும் சிறந்த இடத்தைப்பெறும்.

உலகின் புற வெளியான வான்வெளியை அறிந்த அளவுக்கு அதன் அக வெளியான கடலை பற்றி அறியவில்லை என்பது எல்லோருக்கும் உள்ள பெரிய பொதுக் குறையாகும்.

இந்தக் குறை உலக அளவில் தீவிரக் கூட்டு முயற்சியுடன் செய்யப்படும் இந்தியக் கடல் ஆராய்ச்சியினால் அறவே நீங்க வழியுண்டு.

மேலும் இந்த ஆராய்ச்சி மற்ற பெருங்கடல்களை எதிர்காலத்தில் ஆராய்வதற்கும் முன் மாதிரியாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *