போஸ்டர் செய்தி

வாஜ்பாய் உருவப்படம்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்தார்

புதுடெல்லி, பிப். 12–

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்தை பார்லிமெண்ட் மைய மண்டபத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், வாஜ்பாயின் நற்செயல்களை பற்றி பேச ஆரம்பித்தால், அது மணிக்கணக்கில் நீண்டு கொண்டு போகும். தற்போது, வாஜ்பாய் பார்லிமென்ட் மையமண்டபத்தில் இருந்து நம்மை வழிநடத்துவார். ஆசிர்வதிப்பார். வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்த நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்து உள்ளது என்றார்.

வாஜ்பாய்க்கு நீண்ட அரசியல் அனுபவம் உள்ளது. அவரது வாழ்க்கையில், பெரும்பகுதியில் எதிர்க்கட்சி தலைவராகவே கழித்தார். பொது மக்கள் பிரச்னைக்காக குரல் எழுப்பிய போதும், வாஜ்பாய் ஒரு போதும் தனது கொள்கையை விட்டு கொடுத்தது கிடையாது. அவரின் பேச்சுக்கள் மிகவும் பிரபலமானது. அவரது பேச்சில் ஒரு சக்தி இருக்கும் என்று புகழாரம் சூட்டினார்.

பாரதீய ஜனதா மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான வாஜ்பாய் நாட்டின் பிரதமராக மூன்று முறை பதவி வகித்துள்ளார். 1996-ம் ஆண்டு 13 நாட்களும், 1998 முதல் 1999 வரையிலான காலக்கட்டத்தில் 13 மாதங்களும், 1999 முதல் 2004-ம் ஆண்டு வரை 5 ஆண்டுகள் எனவும் மூன்று முறை பிரதமராக இருந்துள்ளார். கடந்த 2018 ம்ஆண்டு ஆகஸ்ட் மாதம், தன் 93வது வயதில் காலமானார்.

இந்தியாவின் மிகவும் உயரிய விருதான பாரத ரத்னா விருதினை வாஜ்பாய் பெற்றுள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18-ம் தேதி மக்களவை சபாநாயர் சுமித்ரா மகாஜன், துணை சபாநாயகர் தம்பித்துரை, காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நாட்டிற்கு பெரும் பங்கு ஆற்றிய வாஜ்பாயின் உருவப்படத்தை பார்லிமெண்ட்டில் திறக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இதன்படி வாஜ்பாயின் உருவப்படம் இன்று திறக்கப்பட்டுள்ளது.

பார்லிமெண்ட் வளாகத்தில் உள்ள மைய மண்டபத்தில் மகாத்மாகாந்தி, முன்னாள் பிரதமர்களான நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், ரவீந்திரநாத் தாகூர், பி.ஆர்.அம்பேத்கர், தாதாபாய் நவ்ரோஜி, ஷ்யாம் பிரசாத் முகர்ஜி ஆகியோரின் உருவப் படங்களும் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிரித்த முகம்

வேட்டி – குர்தா, ஸ்லீவ்லெஸ் (கையில்லாத) கறுப்பு ஜாக்கெட் அணிந்து சிரித்த முகத்தோடு அந்தப் படத்தில் வாஜ்பாய் காட்சி தருகிறார். கிருஷ்ண கன்ஹாய் என்னும் ஓவியர் இந்த உருவப்படத்தை வரைந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *