சிராக் பாஸ்வான் பேட்டி
சென்னை, மார்ச் 6–
வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் பாதுகாப்பாக உள்ளனர் என லோக் ஜன சக்தி கட்சித் தலைவர் சிராக் பாஸ்வான் கூறியுள்ளார்.
தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோ சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் பரவியது. இதையடுத்து இது போலியான தகவல்கள் என தமிழக அரசு உறுதி செய்தது.
இந்த நிலையில் பீகாரில் இருந்து லோக் ஜன சக்தி கட்சித் தலைவர் சிராக் பாஸ்வான் எம்.பி. இன்று விமானம் மூலம் சென்னை வந்தார்.
இதையடுத்து பல்லாவரம், தாம்பரம் மற்றும் புறநகரில் உள்ள பீகார் தொழிலாளர்களை சந்தித்து தமிழகத்தில் நிலவும் நிலைமைகளை கேட்டறிந்தார். இதையடுத்து கிண்டி ராஜ் பவன் சென்று கவர்னர் ரவியை சந்தித்து பேசினார். அப்போது புலம் தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பான மனுவை கவர்னர் ரவியிடம் அளித்தார்.
முன்னதாக பல்லாவரத்தில் சிராக் பாஸ்வான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:–
சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோக்களை வட மாநிலத் தொழிலாளர்கள் நம்ப வேண்டாம். இந்தியாவில் எந்த இடத்திலும் பணியாற்ற உரிமை இருக்கிறது. போலி செய்திகளை பரப்புவோரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பீகாருக்கும் தமிழகத்திற்கும் இடையே நல்ல நட்புறவு நீடிக்கிறது. மக்கள் கூறுவதை மட்டுமே நான் நம்புவேன். நான் தமிழகத்திற்கு வருவது முதல் முறை அல்ல. பலமுறை வந்திருக்கிறேன். என்னைப்போல பலர் பீகாரில் இருந்து தமிழகத்திற்கு வந்து செல்கின்றனர். இங்கு எந்த பாதுகாப்புப் பிரச்சினையும் இல்லை. வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் பாதுகாப்பாக உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.