செய்திகள்

வடபழனி பேருந்து பணிமனை விபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம், அரசு வேலை

Spread the love

சென்னை, ஆக. 26–

வடபழனி பேருந்து பணிமனை விபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் மற்றும் அரசு வேலை வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

சென்னை மாவட்டம், மாம்பலம் வட்டம், வடபழனி பேருந்து பணிமனையில் 28.7.2019 அன்று அதிகாலை எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, கட்டட சுவர் மீது மோதி, சுவர் இடிந்து விழுந்ததில், சம்பவ இடத்தில் இருந்த மாநகர போக்குவரத்துப் பணியாளர்களான சென்னையைச் சேர்ந்த கே. சேகர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ப. பாரதி ஆகியோர் பலத்த காயமடைந்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன்.

கட்டட சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த சேகர் மற்றும் பாரதி ஆகியோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரச் சம்பவத்தில் ஆறு நபர்கள் காயமடைந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து வருத்தமடைந்தேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா 25,000 ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

மேலும், இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் ஒருவருக்கு சிறப்பு நிகழ்வாக தகுதியின் அடிப்படையில் அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணி வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *