செய்திகள்

வங்கி தலைவர்களுடன் 25 ந்தேதி நிர்மலா சீதாராமன் ஆலோசனை


டெல்லி, ஆக. 17–

நிதி செயல்பாடுகள் குறித்து பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுடன் நிர்மலா சீதாராமன் 25ஆம் தேதி ஆலோசனை நடத்துகிறார்.

கொரோனாவால் உருக்குலைந்துள்ள பொருளாதார வளர்ச்சிக்கு புத்துயிரூட்ட தேவையான எல்லா செயல்களையும் ஒன்றிய அரசு செய்யும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் தெரிவித்தார். தேவையை உருவாக்குவதிலும், நுகர்வை அதிகரிப்பதிலும் வங்கித்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. அதை கருத்தில்கொண்டு, பொதுத்துறை வங்கிகளின் நிர்வாக இயக்குநர்கள் மற்றும் தலைமை செயல் அதிகாரிகளுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்த உள்ளார். வருகிற 25ஆம் தேதி இந்த ஆலோசனை நடக்கிறது. மும்பையில் இந்தக் கூட்டம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவல் தொடங்கிய பிறகு நேரடியாக நடக்கும் முதலாவது சந்திப்பு இதுவாகும்.
ஆலோசனை ஏன்?
வங்கிகளின் நிதி செயல்பாடுகளையும், கொரோனாவால் சீர்குலைந்துள்ள பொருளாதாரத்தை ஊக்குவித்த வங்கிகள் எடுத்த நடவடிக்கைகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தையும் நிர்மலா சீதாராமன் ஆய்வு செய்கிறார். ரிசர்வ் வங்கி அறிவித்த கடன் மறுசீரமைப்பு திட்டத்தின் முன்னேற்றம் குறித்து கேட்டறிகிறார். உற்பத்தி சார்ந்த துறைகளில் கடன் வழங்குவதை அதிகரிக்குமாறு வலியுறுத்துவார் என்றும் தெரிகிறது. ரூ.4.5 லட்சம் கோடி அவசரகால கடன் உத்தரவாத திட்டம் பற்றி ஆய்வு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், வங்கிகளின் வாராக்கடன் நிலவரம் பற்றியும், அதை மீட்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றியும் ஆலோசனை நடத்தப்படுகிறது. இந்திய அரசு எடுத்த நடவடிக்கைகளால் கடந்த ஆறு நிதி ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடிக்கு மேற்பட்ட வாராக்கடன் மீட்கப்பட்டுள்ளது. அத்துடன், வர்த்தக வங்கிகள் கடன் கொடுப்பதும் அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி, வங்கிகள் கொடுத்த மொத்த கடன் ரூ.114 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டில் பொருளாதாரம் 7.3 சதவிகிதம் வீழ்ச்சியைச் சந்தித்தது. இருப்பினும், பொதுத்துறை வங்கிகள் மொத்தம் ரூ.31,816 கோடி லாபம் ஈட்டியுள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில் இதுதான் அதிகமான லாபமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *