செய்திகள்

ரேஷன் கடைகளில் பொருள் இருப்பை தெரிந்துகொள்ள செல்போன் செயலி: அமைச்சர் சக்கரபாணி அறிமுகம்

சென்னை, நவ.4-

உணவுத்துறை சார்பில் ரேஷன் கடைகளை ஆய்வு செய்வதற்கான செல்போன் செயலியை அமைச்சர் சக்கரபாணி அறிமுகம் செய்து வைத்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அளித்த பேட்டி வருமாறு:-

ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு தரமான சேவை வழங்குவதை உறுதி செய்யும் வகையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது இந்த ஆய்வுகள் கடைகளில் உள்ள விற்பனை முனைய எந்திரம் வழியாக மேற்கொள்ளப்படுகிறது.

கடைகளுக்கு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஆய்வுக்கு செல்லும்போது, விற்பனை முனைய எந்திரத்தை நிறுத்தி ஆய்வு செய்தால் பொருள் வாங்க பொதுமக்கள் காத்திருக்கும் நிலை ஏற்படும். அதை தவிர்க்க, ஒவ்வொரு அலுவலரும் அவர் வைத்துள்ள செல்போன் மூலம் ஆய்வு செய்வதற்கான செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியில், கடையை முழுமையாக ஆய்வு செய்யவும், இருப்பில் உள்ள பொருட்கள் மேலோட்டமாக ஆய்வு செய்யவும் வசதிகள் உள்ளன. இதை தற்போது அறிமுகம் செய்துள்ளேன்.

இந்த செயலி மூலம் ஆய்வு செய்யும்போது அங்குள்ள குறைபாடுகளை உடனே அறிய முடியும். பொருட்கள் பொதுமக்களுக்கு கிடைப்பதையும், ஆய்வு அலுவலர்களையும் கண்காணிக்க இயலும். மாதந்தோறும் மாவட்ட கலெக்டர், 10 கடைகள், கூடுதல் பதிவாளர் 200 கடைகள் என அலுவலர்கள் ஒவ்வொருவரும் எத்தனை கடைகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

ரேஷன் கடைகளில் 98.3 சதவீதம் பயோமெட்ரிக் பயன்பாட்டில் உள்ளது. பல்வேறு மாநிலங்களில் கருவிழி பதிவு மூலம் பொருட்கள் வழங்கப்படுவதால், தமிழகத்தில் சோதனை முறையில் திருவல்லிக்கேணி தொகுதியிலும், அரியலூர் மாவட்டத்தில் ஒரு கிராமத்திலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இந்த திட்டம் மூலம் பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படும். அரிசி கடத்தலை கண்காணிக்க கேமராக்கள் கொள்முதல் செய்யவும், ‘ஜிபிஎஸ்’ கருவிகளை பொருத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

38 ஆயிரம் ரேஷன் கடைகளில் 25 ஆயிரம் கடைகள் சொந்த கட்டிடங்களில் உள்ளன. 2,405 கடைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. விரைவில் அனைத்து கடைகளும் புதுப்பிக்கப்படும். கடைகளில் ராகி வழங்குவது தர்மபுரி, நீலகிரி மாவட்டங்களில் ஜனவரி முதல் செயல்படுத்தப்படும்.

நெல் கொள்முதல்

கடந்த செப்டம்பர் மாதம் முதல் இம்மாதம் 2ந் தேதிவரை 8 லட்சத்து 6 ஆயிரத்து 442 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 1 லட்சத்து 12 ஆயிரத்து 534 விவசாயிகளுக்கு ரூ.1,500.91 கோடி வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 4,096 விவசாயிகளுக்கு ரூ.42.99 கோடி வழங்கப்பட வேண்டும். கடந்தாண்டை விட இந்தாண்டு 2.16 லட்சம் டன் அதாவது 35 சதவீதம் நெல் அதிகமாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் 75 சதவீதம் கூடுதலாக கொள்முதலாகியுள்ளது.

22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்ய மத்திய அரசிடம் கோரப்பட்டது. 19 சதவீதம்தான் மத்திய அரசு அனுமதித்தது. ஆனால், டெல்டா மாவட்டங்களில் 95 சதவீதம் கொள்முதல் முடிந்துவிட்டது. 5 சதவீதம் தான் மீதமுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப்பின்றி நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

போதிய கிடங்குகள்

கொள்முதல் செய்த நெல்லை சேமிக்க ரூ.238 கோடி செலவில் 2.86 லட்சம் டன் கொள்ளளவு கொண்ட ‘செமி’ குடோன்கள் 20 இடங்களில் கட்டப்பட்டு வருகின்றன. விரைவில் டிசம்பர் 10-ந் தேதிக்குள் அவை பயன்பாட்டுக்கு வரும். ஏற்கனவே 7.94 டன் நெல் சேமிப்பு கிடங்குகள் உள்ளன. அந்த வகையில் மொத்தம் 11 லட்சம் டன் கொள்ளளவு கொண்ட குடோன்கள் இருக்கும். எனவே திறந்த வெளியில் நெல்லை வைக்க இனி அவசியம் வராது. அதன்படி, 103 திறந்த வெளி கிடங்குகளும் இருக்காது. கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல்லை நேரடியாக அரவை ஆலைக்கு அனுப்பும் வகையில் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. அரிசியாகவே குடோன்களுக்கு அனுப்பும் நடவடிக்கைக்காக இந்த ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. 6,500 டன் தினசரி அரைக்கும் ஆலைகளிடம் ஒப்பந்தம் கோர உள்ளோம். ஜனவரிக்குள் இது நடைமுறைக்கு வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *