போஸ்டர் செய்தி

ரெயிலில் கொள்ளையடித்த ரூ.2 கோடியை எரித்தோம்-

சென்னை,நவ.11–
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததால் ரெயிலில் கொள்ளையடித்த ரூ.2 கோடியை எரித்ததாக கைதான கொள்ளையர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
சேலத்தில் இருந்து சென்னை வந்த எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடந்த 2016 -ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8- ந் தேதி ரூ.5 கோடியே 78 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. இவை அனைத்தும் பழைய மற்றும் கிழிந்த நோட்டுகள். சேலம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் இருந்து சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ரெயில் வரும் வழியில் மேற்கூரையில் துளையிட்டு அந்தப்பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. 2 ஆண்டுகளுக்குப்பின் துப்பு துலங்கிய இந்த கொள்ளை தொடர்பாக மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த மோகர்சிங், கிருஷ்ணா, மகேஷ்பாரதி மோகன் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள்.
இவர்களில் 5 பேரை போலீசார் நேற்று விருத்தாசலம், சின்னசேலம், ஆத்தூர், அயோத்தியாபட்டிணம், வாழப்பாடி, சேலம் ஜங்‌ஷன், செவ்வாய்ப்பேட்டை ரெயில்வே குட்ஷெட் ஆகிய இடங்களுக்கு நேரில் அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது கொள்ளையர்கள் எப்படி கொள்ளையடித்தோம் என்பதை நடித்து காட்டினார்கள். அவற்றை போலீசார் வீடியோ எடுத்தனர்.
இந்த கொள்ளையில் மொத்தம் 16 பேர் சம்பந்தப்பட்டுள்ளனர். தற்போது 7 பேர் பிடிபட்டுள்ளனர். மேலும் 9 பேரை தேடிவருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *