போஸ்டர் செய்தி

ரூ.83.15 கோடி செலவில் சாலை மேம்பாலம்; 8 ஆற்று பாலங்கள்: எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்

சென்னை, செப்.14–

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (14–ந்தேதி) தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில், திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் 43 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சாலை மேம்பாலத்தை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

மேலும், காஞ்சிபுரம், திருவள்ளூர், தஞ்சாவூர், தருமபுரி, நாமக்கல், ஈரோடு, கோயம்புத்தூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் 40 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 8 ஆற்றுப்பாலங்கள், நெடுஞ்சாலை இல்லம் மற்றும் சாலை பாதுகாப்பு உருளை தடுப்பு ஆகியவற்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

மாநிலத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் சாலை உள்கட்டமைப்பு வசதிகளின் முக்கியத்துவத்தினை உணர்ந்து, பெருகிவரும் போக்குவரத்து தேவைக்கேற்ப சாலைகளின் கொள்ளளவை அதிகரிக்கவும், பாதுகாப்பான பயணத்தினை உறுதி செய்யவும், மாநிலம் முழுவதும் புதிய பாலங்களை கட்டுதல், தேவையான பகுதிகளில் தரமான சாலைகள் அமைத்தல், சாலைகள் மற்றும் பாலங்களை பராமரித்தல் போன்ற பணிகளை அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், திருப்பூர் மாநகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, திருப்பூர் பழைய பேருந்து நிலையம் மற்றும் தாராபுரம் சாலை சந்திப்பு அருகில் அவினாசி–திருப்பூர்–பல்லடம்–பொள்ளாச்சி–கொச்சின் (வழி) மீன்கரை சாலையில், 43 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சாலை மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொலிக் காட்சி மூலமாக பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இப்புதிய பாலத்தினால், திருப்பூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வீரபாண்டி, நல்லூர், மண்ணரை, பாளையக்காடு, சந்திராபுரம், கருவம்பாளையம், ராயபுரம், செட்டிபாளையம், குமார் நகர், வேலம்பாளையம் ஆகிய பகுதிகள் மற்றும் கணபதிபாளையம், அருள்புரம், இடுவாய், இடுவம்பாளையம், உகாயனூர், கரைப்புதூர், நொச்சிபாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயனடைவார்கள்.

கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே பாலம்

மேலும், காஞ்சிபுரம் மாவட்டம், சட்ராஸ் அருகே 8 கோடியே 87 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சட்ராஸ்–செங்கல்பட்டு–காஞ்சிபுரம்–அரக்கோணம்–திருத்தணி சாலையில் கட்டப்பட்டுள்ள பாலம் மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் விளம்பூர் அருகே சாலை வளைவில் 82 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு உருளை தடுப்பு;

திருவள்ளூர் மாவட்டம், குருவாயல் அழிஞ்சிவாக்கம் கிராமங்களுக்கு இடையே 13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம்; தஞ்சாவூர் மாவட்டம், திருகாட்டுப்பள்ளி செங்கிப்பட்டி பட்டுக்கோட்டை சாலையில், நம்பிவயல் கிராமத்தில் 7 கோடியே 41 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்; தருமபுரி மாவட்டம்–அ. பள்ளிப்பட்டியில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்; நாமக்கல் மாவட்டம்–சில்லாங்காடு கிராமத்தில் 1 கோடியே 82 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்,

ஈரோடு மாவட்டம், பெரும்பள்ளம் கிராமத்தில் 2 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம் மற்றும் கொம்பனைபுதூர் கிராமத்தில் 1 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்; கோயம்புத்தூர் மாவட்டம், ரெட்டியார்மடம்–ஆண்டியூர் சாலையில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்;

நெடுஞ்சாலை இல்லம்

சென்னை, கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தில் 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நெடுஞ்சாலை இல்லம்; என மொத்தம், 83 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒரு சாலை மேம்பாலம், 8 ஆற்றுப் பாலங்கள், நெடுஞ்சாலை இல்லம் மற்றும் சாலைப் பாதுகாப்பு உருளை தடுப்பு ஆகியவற்றை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) என். சாந்தி, தலைமைப் பொறியாளர் (நபார்டு மற்றும் கிராமச் சாலைகள்) எம்.கே செல்வன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *