செய்திகள்

ரூ.30 கோடியில் விவேகானந்தர் மண்டபம் – திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி நடைபாலம்

பாறைகளின் மாதிரிகளை சேகரித்து ஆய்வு

கன்னியாகுமரி, ஜன.12-–

கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபம்- – திருவள்ளுவர் சிலை இடையே ரூ.30 கோடியில் கண்ணாடி நடைபாலம் அமைப்பது குறித்து ஆய்வு நடந்தது.

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் படகில் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு சென்று ரசிப்பது வழக்கம். பின்னர் அங்கிருந்து 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு செல்வார்கள்.

கடலில் நீரோட்டம் குறைவாக இருந்தால் திருவள்ளுவர் சிலைக்கு படகு இயக்கப்பட மாட்டாது. இதனால் விவேகானந்தர் மண்ட பத்தில் இருந்து திருவள்ளுவர் சிலைக்கு பாலம் அமைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்து வந்தனர்.

அதைத்தொடர்ந்து திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபம் இடையே கண்ணாடி யிலான நடை பாலம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி ரூ.30 கோடி செலவில் கண்ணாடி நடைபாலம் அமைக்கும் பணியினை சென்னையைச் சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவனம் டெண்டர் எடுத்துள்ளது. இந்த கண்ணாடி பாலம் 97 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்டதாக அமைக்கப்படுகிறது. இந்தப் பாலத்தின் மீது சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும்போது தங்களது பாதங்களின் கீழே கடல் அழகை ரசிக்கும் படியாக வெளிநாடுகளில் அமைக்கப்பட்டுள்ளது போல இந்த கண்ணாடி பாலம் அமைக்கப்பட உள்ளது.

இதற்கான முதற்கட்ட பணி நேற்று தொடங்கியது. விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை ஆகிய இரண்டு பாறைகளின் மாதிரிகளை சேகரித்து சென்னை ஐ.ஐ.டி.க்கு அனுப்பப்படுகிறது. அங்கு பாறைகளின் திறத்தன்மையை ஆய்வு செய்யும் பணி நடக்கிறது.

இந்த ஆய்வுகளின் முடிவுகள் வந்த பிறகு விரைவில் பாலத்திற்கான கட்டுமான பணிகள் தொடங்கும் எனவும், ஒரு வருடத்திற்குள் பாலப்பணிகள் நிறைவடையும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *