3 நாட்களில் 5½ லட்சம் பேர் நகைகளை திரும்பப் பெற்றனர்
சட்டசபையில் அமைச்சர் ஐ. பெரியசாமி விளக்கம்
சென்னை, மார்ச் 24–
நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தில் பயனடைந்து தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 5 லட்சத்து 48 ஆயிரம் பேர் தங்கள் நகைகளை திரும்பப் பெற்றனர் என்று அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்தார்.
தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடிக்காக ரூ. 1,000 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி சட்டசபையில் இன்று தெரிவித்தார்.
கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் தள்ளுபடி குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று அமைச்சர் ஐ.பெரியசாமி விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:–
கடந்த 3 நாட்களில் 5.48 லட்சம் பேருக்கு நகைகள் திரும்ப வழங்கப்பட்டுள்ளன. தள்ளுபடி ரசீதுகளையும், நகைகளையும் பெற்றுச் சென்றனர். நகைக்கடன் தள்ளுபடிக்காக நேற்று 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
வரும் 31–ம் தேதிக்கு பதிலாக நகைக்கடன் தள்ளுபடி பெற்ற அனைவருக்கும் வரும் 28–ம் தேதிக்குள்ளேயே நகைகள் திரும்ப ஒப்படைக்கப்பட்டு, தள்ளுபடி ரசீது தரப்படும் என்றும் அமைச்சர் ஐ.பெரியசாமி நம்பிக்கை தெரிவித்தார்.