செய்திகள்

ராமநாதபுரம் அருகே மின்னல் தாக்கி பெண் பலி; 2 பேர் காயம்

ராமநாதபுரம், செப். 20–

கமுதி அருகே மழையின்போது மின்னல் தாக்கி இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த 2 பெண்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள நெரிஞ்சிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் நாகசெல்வம் மனைவி கற்பகவள்ளி (வயது 34). இவர் நேற்று அதே பகுதியை சேர்ந்த முத்துலெட்சுமி, அருணாச்சலம் ஆகியோருடன் தோட்டத்தில், பருத்தி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து கொண்டிருந்தது. எனினும், மழையில் நினைந்த படி மூவரும் பணியில் ஈடுபட்டனர்.

பெண் பலி

அப்போது, எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கியது. இதில் மூவரும் பலத்த காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள், மூவரையும் மீட்டு சிகிச்சைக்காக கமுதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கற்பகவள்ளியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

ஆனால், முத்துலெட்சுமி, அருணாச்சலம் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து கோவிலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்னல் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் நெரிஞ்சிப்பட்டி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *