சென்னை, ஜன. 18–
ராமஜெயம் கொலை வழக்கில் சென்னை தடயஅறிவியல் கூடத்தில் இன்று திண்டுக்கல்லைச் சேர்ந்த 4 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படுகிறது.
அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக பத்து ஆண்டுகளாக கொலையாளிகளை கண்டு பிடிக்க முடியாத நிலையில் தற்போது சி.பி.சி.ஐ.டி.யின் சிறப்பு புலனாய்வு குழுவினர் கடந்த 6 மாதமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எஸ்பி ஜெயக்குமார் மேற்பார்வையில் நடந்து வரும் இந்த விசாரணையில் இதுவரை 700 பேரிடம் போலீசார் துருவியுள்ளனர். இதில் சந்தேகப்படும்படியான 13 பேரை அடையாளம் கண்டு அவர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்தனர். இதற்கு வலுவான ஆதாரங்கள் இருப்பதாக சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் உறுதிபட தெரிவித்துள்ளனர்.
12 பேருக்கு உண்மை
கண்டறியும் சோதனை
மேலும் இது தொடர்பாக ராமஜெயம் கொலை செய்யப்பட்ட நாளுக்கு முந்தைய தினம் திருச்சி தில்லை நகர் பகுதியில் சந்தேகத்துக்குறிய 12 பேரில் 5 பேரின் செல்போன் பயன்பாடு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 12 பேருக்கும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த போலீசார் முடிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்படும் 13 பேருக்கும் முழு உடல் தகுதி மருத்துவ பரிசோதனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அதன்படி சாமி ரவி, திலீப், சிவா ராஜ்குமார், சத்யராஜ், சுரேந்தர், நாராயணன், சிவா, கணேசன், தினேஷ், கலைவாணன், மாரிமுத்து, செந்தில், மோகன்ராம் ஆகிய 12 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிறப்பு அனுமதி கேட்டு டெல்லியில் உள்ள ஆய்வகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அந்த கடிதத்தின்பேரில், இன்று முதல் 21ஆம் தேதி வரை சென்னையில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த டெல்லி ஆய்வக அலுவலர்கள் சம்மதம் தெரிவித்து, சிறப்பு புலனாய்வுக் குழுவினருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். அதனைத் தொடர்ந்து ராமஜெயம் கொலை வழக்கு சம்பந்தமாக பிரபல கூலிப்படை கும்பல் தலைவன் திண்டுக்கல் மோகன்ராம், திண்டுக்கல் நரைமுடி கணேசன், திண்டுக்கல் தினேஷ், சீர்காழி சத்யா என்ற சத்தியராஜ் ஆகியோரிடம் இன்று உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து காமராஜர் சாலையில் உள்ள தடய அறிவியல் கூடத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளது. அவர்களுக்கு அங்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படுகிறது.