செய்திகள்

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் இறந்து கிடந்த பெண்

சென்னை, ஜூன் 11–

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அழுகிய நிலையில் இறந்து கிடந்த பெண் கொரோனா நோயின் தாக்கத்தால் உயிரிழந்துள்ளார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொரோனா வார்டு இயங்கும் கட்டிடத்தின் 8-வது தளத்தில் அழுகிய நிலையில் பெண் உடல் கிடந்தது. அந்த பெண்ணின் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் பிணமாக கிடந்த பெண், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 3வது தளத்தில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குரோம்பேட்டையை சேர்ந்த சுனிதா என்பது தெரியவந்தது. அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 22ந்தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மறுநாள் மாயமாகி உள்ளார்.

சுனிதா, மாயமானதால் அதிர்ச்சி அடைந்த அவரது கணவர், பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் கடைசியாக 31ந்தேதி போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதற்கிடையில்தான் அந்த பெண்ணின் உடல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அழுகிய நிலையில் மீட்கப்பட்டு, அவரது கணவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அந்த பெண் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தினார். ஆக்சிஜன் அளவு குறைவாக இருந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுனிதாவால் எப்படி 8-வது மாடி வரை செல்ல முடிந்தது, 8-வது மாடியில் பெண் பிணம் கிடப்பது மருத்துவமனை நிர்வாகத்தால் எப்படிக் கண்டறிய முடியாமல் போனது, 23ந்தேதி காணாமல் போனவர் 31–ந்தேதி வரை ஏன் தேடப்படவில்லை, எப்போது சுனிதா இறந்தார் என்று போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் சுமிதாவின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு அதன் முடிவுகள் வந்துள்ளன.

இதுகுறித்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சுமிதாவின் சடலம் அழுகிய நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுமிதாவின் சடலம் அவரது கணவரான மவுலி மூலம் உறுதி செய்யப்பட்டு பூக்கடை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

சுமிதாவின் உடல் ஜூன் 9ந்தேதி பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. மருத்துவர்கள் அளித்த பிரேதப் பரிசோதனை அறிக்கையில், சுனிதாவின் மரணம் நோயின் தாக்கத்தால் உண்டானதாக அறிவித்ததை அடுத்து அவரது கணவரான மவுலியிடம் சுனிதாவின் உடல் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. இவ்வழக்கு உயர் அதிகாரிகள் மேற்பார்வையில் விசாரணை நடைபெற்று வருகிறது

இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *