ஆர். முத்துக்குமார்
அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும், ரஷ்யாவை புறக்கணிக்கும் தீர்மானத்தை நிறைவேறிய போது, ரஷ்ய தொழில் துறையும், வங்கி சேவைகளும் சிரமப்படும் என்று உலகமே எதிர்பார்த்தது. ஆனால் ரஷ்யாவின் தொழில் துறையும், வங்கி சேவைகளும் கடந்த ஓர் ஆண்டாக எல்லா தடைகளையும் தாண்டி நன்றாகவே செயல்பட்டு வருகிறது.
மேலும் ரஷ்ய நுகர்வோருக்கு தலைவலி தரும் நோக்கத்துடன் அன்றாட உபயோகப் பொருட்கள், உணவு மற்றும் காப்பீடு நிறுவனங்களும் ரஷ்யாவில் இனி சேவைகளை தொடர மாட்டோம் என்று அறிவித்து வெளியேறினர்.
குறிப்பாக விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள் விற்பன்னர்கள், வடிவமைப்பாளர்கள் ரஷ்யாவை புறக்கணித்து விட்டனர். இதற்கெல்லாம் உச்சமாய் ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பேனிஷ் போன்ற பல்வேறு ஐரோப்பிய மொழி திரைத்துறையினரும் இனி ரஷ்யாவில் படங்களை திரையிட மாட்டோம் என்று அறிவித்தது. மேலும் இன்று பிரபலமாக இருக்கும் ஓடிடி ஸ்ட்ரீமிங் தளங்களும் ரஷ்யாவில் ஒளிபரப்பை தடைசெய்தது.
ஆக சர்வதேச திரை உலகின் கணிசமான வருவாய் தந்து வந்த ரஷ்யாவை புறக்கணித்தது உலக சினிமாத் துறை. ஆனால் சீனாவும், இந்தியாவும் ரஷ்ய மார்க்கெட்டில் எழுந்துள்ள புதிய வாய்ப்புகளை வரவேற்று அங்குள்ள தேவைகளை நிறைவு செய்து வருகிறது.
ரஷ்யர்களிடம் வரவேற்பு
17 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமான சீனாவில் உருவாகும் திரைப்படங்கள் மிகக் குறைவு. இசை மற்றும் கலைத் துறைக்கு சாமானியன் அங்கு வரவேற்பு தருவதும் மிகக் குறைவாகும். ஆனால் இந்திய திரை உலகம் நமது கலாச்சாரத்தின் பிரதிபலிப்பாக இருக்கிறது. நமது திரைப்படங்களில் இருக்கும் அனைத்து தரப்பு கலை அம்சங்களும் ரஷ்யர்களால் வரவேற்கப்படும் அம்சமாகும்.
நாம் சுதந்திரம் பெற்ற பிறகு சோவியத் ரஷ்யா தங்களது நட்பு ஆதரவை அப்போதைய பிரதமர் நேரு போன்றவர்களுக்கு உறுதி தந்ததுடன் இந்தி திரைப்படங்களையும் வரவேற்றது. ஹாலிவுட் திரைப்படங்கள் தயாரிப்பை தொடங்கிய நாட்கள் முதலாய், ரஷ்யர்களை தீயவர்கள், வில்லன்களாக மட்டுமே சித்தரித்து படம் எடுத்தனர்.
இது ரஷ்ய திரைப்பட ரசிகர்களுக்கு எரிச்சல் தரும் சமாச்சாரம் என்பதால் ராஜ்கபூரின் ‘மேரா நாம் ஜோக்கர்’, ‘ ஆவாரா ‘ போன்ற படங்கள் ரஷ்யாவில் 1950களில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதை அறிவோம். இன்றும் ரஷ்ய இல்லங்களில் ‘மேரா நாம் ஜோக்கர்’ ஒளிபரப்பானல் அதைப் பார்த்து பரவசப்படுவார்கள். குறிப்பாக, ராஜ்கபூரின் மீது தங்களது அபிமானத்தை வெளிப்படையாக விவரித்தும் ரசிப்பார்கள்.
வசூலைக் குவித்த படங்கள்
தற்போது ‘புஷ்பா–தி ரைஸ்’ படம் கடந்த மாதம் ரஷ்யாவின் 11 மாகாணங்களில் 25 நாட்கள் திரையிடப்பட்டு, ரூ.13 கோடியை சம்பாதித்து விட்டது. இது ‘பாகுபலி’ அங்கு பெற்ற வெற்றியை விட அதிகமாகும். அது மட்டுமா? ஆர்ஆர்ஆர், தங்கல், வார் போன்ற பல படங்களும் ரஷ்யாவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தமிழ் திரையுலகமும் ரஷ்யாவில் திரைப்படங்கள் எடுக்கச் சென்றாலும், இங்கே தயாராகும் திரைப்படங்களையும் ஒளிபரப்பத் துவங்கினால் அதற்கு நல்ல வரவேற்பு நிச்சயம் காத்திருக்கிறது. கலை, கலாச்சார பரிவர்த்தனை இரு நாடுகளில் உள்ள மக்களை இணைக்கும் ஆற்றல் கொண்டதாகும்.
ரஷியர்களின் ஆர்வம், இந்திய கலாச்சாரத்தின் மீது இருப்பதை உணர்ந்து, வரும் காலங்களில் எல்லா மொழி இந்திய திரைப்படங்களும் ரஷ்ய, ஆங்கில அடி வசனங்களுடன் அங்கு வெளியிடப்பட்டால் பொருளாதார ரீதியில் லாபகரமான வர்த்தகமாக இருப்பதுடன் இரு நாடுகளின் மக்களையும் இணைக்கும் பாலமாகவும் இருக்கும்.