செய்திகள்

யு17 மகளிர் கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும்: பிபா அறிவிப்பு

ஜெனீவா, மே 22–

2020ல் இந்தியாவில் நடைபெறுவதாக இருந்த யு17 மகளிர் கால்பந்து போட்டி, கொரோனா பீதி காரணமாக 2022 அக்டோபரில் நடத்தப்படும் என்று பிபா அறிவித்துள்ளது.

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிபா ) முதல்முறையாக இந்தியாவில் உலக கோப்பை தொடர் ஒன்றை நடத்த அனுமதித்தது. அதன்படி 17 வயதுக்கு உட்பட்ட மகளிருக்கான கால்பந்து உலக கோப்பை தொடர் 2020ல் நடத்த முடிவானது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில் கொரோனா பீதி காரணமாாக தொடர் 2021க்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்தியாவில் 2வது அலை பெருந்தொற்று தீவிரமாக பரவி வருவதால் யு17 மகளிர் உலக கோப்பை மீண்டும் மறுதேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் பிபாவின் 71வது ஆலோசனை கூட்டம் சமீபத்தில் ஜெனீவாவில் நடந்தது. காணொளி கூட்டமான அதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதன்படி இந்தியாவில் தள்ளி வைக்கப்பட்ட யு17 மகளிர் உலக கோப்பை தொடர் 2022, அக்டோபர் 11 முதல் 30ம் தேதி வரை கொல்கத்தா, டெல்லி உட்பட முக்கிய நகரங்களில் நடக்கும். போட்டியை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் இந்தியா முதல்முறையாக யு 17 மகளிர் உலக கோப்பையில் விளையாடும்.

பிபா ஆண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி 2022ல் கத்தாரில் நடைபெற உள்ளது. அடுத்த உலக கோப்பை போட்டியை 2026ல் கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய நாடுகள் கூட்டாக நடத்த பிபா ஆலோசனை கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டது. கூடவே 2023 மகளிர் உலக கோப்பை போட்டியை நியூசிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகள் நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டது.

பிபா அனுமதி அளித்தபடி, கொரோனாவால் தள்ளி வைக்கப்பட்ட யு20 மகளிர் உலக கோப்பை இந்த ஆண்டு ஆகஸ்டில் கோஸ்டாரிகாவிலும், பிபா அரபு கோப்பை அடுத்த மாதமும் நடக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *