போஸ்டர் செய்தி

மேற்கு வங்காள வன்முறை எதிரொலி: ஒரு நாள் முன்பே இன்று முடிகிறது பிரச்சாரம்

கொல்கத்தா,மே.16–
மேற்கு வங்காள மாநிலத்தில் ஏற்பட்ட தேர்தல் வன்முறை தொடர்பாக அம்மாநிலத்தில் நாளை (மே 17) முடிய இருந்த தேர்தல் பிரச்சாரம் இன்று மே 16 ஆம் தேதி இரவு 10 மணியோடு முடிவதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
மக்களவைத் தேர்தலில் ஏழாவது கட்டம் மற்றும் நிறைவு கட்டமாக மேற்கு வங்காள மாநிலத்தில் தெற்கு கொல்கத்தா, வடக்கு கொல்கத்தா, டம் டம், பர்சாட், பசிர்ஹாத், ஜெய் நகர், மதுராபூர், ஜாதவ்பூர், வைரத் துறைமுகம் ஆகிய 9 தொகுதிகளில் மே 19ஆம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தொகுதிகளுக்கான தேர்தல் பிரச்சாரம் மே 17 ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில் நேற்று தேர்தல் ஆணையம் பிரச்சாரத்தை ஒருநாள் முன்னதாகவே நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
நேற்று டெல்லியில் அவசரமாகக் கூட்டப்பட்ட பத்திரிக்கையாளர் சந்திப்பில் துணை தேர்தல் ஆணையர் சந்திர பூஷன் குமார் இதை அறிவித்துள்ளார். அரசியல் சாசனத்தின் 324 ஆவது பிரிவு தேர்தல் ஆணையத்திற்கு அளித்துள்ள அதிகாரத்தின் படி மேற்கு வங்காளத்தில் பிரச்சாரத்தை ஒருநாள் முன்னதாகவே நிறுத்துவதாக அவர் அறிவித்துள்ளார்.மே 14-ஆம் தேதி கொல்கத்தாவில் பாஜக தலைவர் அமித்ஷா பங்கேற்ற பேரணியின்போது பாஜகவினருக்கும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே மோதல் அதிகரித்து வன்முறையாக வெடித்தது. கொல்கத்தா பல்கலைக்கழகம் அருகே நடைபெற்ற இவ் வன்முறையின்போது மேற்கு வங்காளத்தின் தத்துவமேதை ஈஸ்வர சந்திர வித்யாசாகர் சிலையும் வன்முறையாளர்களால் தகர்க்கப்பட்டது.
இதுபற்றி தனது கோபத்தை வெளிப்படுத்தி உள்ள தேர்தல் ஆணையம் வன்முறையாளர்களை மாநில அரசு நிர்வாகம் உடனடியாகக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தது. இந்த வன்முறைக்கு பின் பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்ட மனுவில் மம்தா பானர்ஜியின் பிரச்சாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தது. திருணமூல் காங்கிரஸ் கட்சி சார்பிலும் வன்முறைக்கு பாஜக காரணம் என்று புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் இந்திய தேர்தல் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு தேர்தல் பிரச்சாரம் ஒரு நாள் முன்னதாகவே முடித்து வைத்து விட்டது தேர்தல் ஆணையம். இந்திய தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக இப்படி உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் இது கடைசி முறையாக இருக்காது” என்றும் கூறியுள்ளார் துணைத் தேர்தல் ஆணையர் சந்திர பூஷன் குமார். மேலும் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்துறை முதன்மைச் செயலாளர் அத்திரி பட்டாச்சாரியா, ‌ சிஐடி போலீஸ் பிரிவின் ஏடிஜிபி ராஜ்குமார் ஆகிய உயர் அதிகாரிகள் தேர்தல் ஆணையத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.
தேர்தல் பிரச்சாரத்தை ஒருநாள் முன்னதாகவே முடிக்கும் தேர்தல் தேர்தல் ஆணையத்தின் முடிவை மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி கடுமையாக கண்டித்துள்ளார். நேற்று (மே 15) கொல்கத்தாவில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்திய மம்தா பானர்ஜி, “தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு அரசியல் சட்டத்துக்கு எதிரானது, நீதி நெறிகளுக்கும் மாறானது” என்று விமர்சித்துள்ளார். மேலும் இந்தத் தடை என்பது மோடி மற்றும் அமித் ஷாவுக்கு தேர்தல் ஆணையம் கொடுத்துள்ள பரிசு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *