செய்திகள்

மேட்டூர் அணையிலிருந்து கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீர் நிறுத்தம்

சேலம், ஜன. 15–

மேட்டூர் அணையிலிருந்து கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்பட்டு வந்த தண்ணீர், இன்று மாலையோடு நிறுத்தப்படுகிறது.

மேட்டூர் அணை கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனம் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் 45,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் டிசம்பர் 15ஆம் தேதி வரை கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 137 நாட்களுக்கு 9 டி.எம்.சி தண்ணீர் திறக்கப்பட வேண்டும்.

பாசன பகுதிகளில் மழை பெய்தால் பாசன தேவை குறையும். நடப்பு ஆண்டில் அணைக்கு வரும் நீரின் அளவும் அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இருந்ததால் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. டிசம்பர் 15ஆம் தேதி கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தப் பட்டிருக்க வேண்டும்.

வேண்டுகோளால் நீட்டிப்பு

ஆனால் விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று மேலும் 31 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு நீட்டிக்கப்பட்டது. இன்று மாலையுடன் காலக்கெடு முடிந்ததால் இன்று மாலை ஆறு மணிக்கு மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்படுகிறது. ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் இன்றுவரை கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து 8 டி.எம்.சி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.71 அடியிலிருந்து 114.21அடியாக குறைந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 600 கன அடியிலிருந்து 300 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2154 கன அடியிலிருந்து 1926 கன அடியாக சரிந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 84.53 டி.எம்.சி.யாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *