மேட்டூர், மே 21–
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 115.35 அடியாக உயர்ந்துள்ளது.
காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. மழையின் காரணமாக, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வந்தது. இதனால் மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 29,964 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து, இன்று காலை வினாடிக்கு 46,353 கன அடியாக அதிகரித்துள்ளது.
ஒரே நாளில் 3 அடி உயர்வு
அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி நீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது. இதனால் நேற்று காலை 112.77 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை 115.35 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் ஒரே நாளில் 3 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மேட்டூர் அணை இன்னும் சில நாள்களில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பருவ மலைக்கு முன்பாகவே அணையின் நீர்மட்டம் வேகமாக உயர தொடங்கியது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் குறுவை சாகுபடிக்காக முன்கூட்டியே மேட்டூர் அணை திறக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.