செய்திகள்

மேகதாது அணை விவகாரம்: தமிழக அரசு மேல்முறையீடு

புதுடெல்லி, ஆக.12-

மேகதாது அணை கட்டுமான விவகாரத்தில், தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தின் வழக்கை முடித்து வைத்த தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது.

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

பசுமை தீர்ப்பாயத்தின் (என்.ஜி.டி.) உத்தரவு பசுமை தீர்ப்பாய சட்டத்தின் நோக்கத்துக்கு எதிராக இருப்பதால் அதை ரத்து செய்ய வேண்டும். பசுமை தீர்ப்பாய விதிகளுக்கு எதிராக கர்நாடக அரசின் மறுஆய்வு மனுவை தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்துக்கு அனுப்பாமல், தேசிய பசுமை தீர்ப்பாயமே விசாரித்துள்ளது.

மேலும் மேகதாது அணை திட்டம் தொடர்பாக கர்நாடக அரசுக்கு அளிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கைக்கான அனுமதிக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த இடைக்கால மனு மட்டுமே சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது.

எவ்வித ஒப்புதலுமின்றியும், பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள அணை தொடர்பான பணிகளை மட்டுமே தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. ஒட்டுமொத்த விவகாரமே சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதாக பசுமை தீர்ப்பாயம் தவறாக தெரிவித்துள்ளது.

பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி, விலங்குகள் சரணாலயம் அமைந்துள்ள பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை பசுமை தீர்ப்பாயம் கருத்தில் கொள்ளவில்லை. சுற்றுச்சூழல், காடுகள், இயற்கை வளங்களை பாதுகாப்பதை உறுதி செய்ய அமைக்கப்பட்ட பசுமை தீர்ப்பாயம் அதன் நோக்கங்களுக்கு முரணாக செயல்பட்டுள்ளது.

மேகதாது அணை திட்டத்துக்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையின் படி, அனுமதியை கர்நாடக அரசு பெறவில்லை என்பதையும் கருத்தில் கொள்ள பசுமை தீர்ப்பாயம் தவறிவிட்டது.

அணை கட்டுவதால் 5,252 ஹெக்டேர் வனப்பகுதி தண்ணீருக்குள் மூழ்கி பாதிப்பை ஏற்படுத்தும். இதற்கான அனுமதியை கர்நாடக அரசுக்கு வனத்துறை அளிக்கவில்லை என்பதையும் கருத்தில் கொள்ள பசுமை தீர்ப்பாயம் தவறியுள்ளது.

மேகதாது அணை கட்டுமானம், சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பாக ஆய்வு செய்ய குழு நியமித்த தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தின் வழக்கை முடித்து வைத்த தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் ஜூன் 17-ந் தேதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *