சிறுகதை

மெய் – ராஜா செல்லமுத்து

பத்மநாபனுக்கு ஒன்றும் புரியவில்லை. பரபரப்பாகவே இருந்தார். அவர் அலுவலகத்திற்கு கிளம்புவதற்கான நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. அந்த அவசரத்தில் இன்னொரு பரபரப்பு தொற்றிக் கொண்டது. அவரின் செய்கையில் மாற்றம் இருந்ததால் மனைவி மீனா அவரைக் கவனிக்கத் தவறவில்லை. அவர் முகத்தில் முகாமிட்டிருந்த அவசரத்தை அவள் புரிந்து கொண்டாள்.

என்ன தான் செய்கிறார்? பார்க்கலாம் என்று பத்மநாபனை நோட்டமிட்டுக் கொண்டிருந்தாள் மீனா.

என்றைக்கும் இல்லாத அந்த பரபரப்பு அவருடைய முகத்தில் ஒற்றி இருந்தது. அந்த நேரம் பார்த்து பத்மநாபன் வீட்டு வேலைக்காரி நுழைந்ததும் பத்மநாபனின் முகத்தில் காேபம் கொஞ்சம் கூடுதலாக இருந்தது.

என்ன வேலைக்காரியைப் பார்த்ததும் ரொம்ப கோவப்படுறீங்க? ‘ஒருவேளை அப்படி இப்படி இருக்குமோ’ என்று மீனா தனக்குத்தானே நினைத்துக் கொண்டாள். ‘அப்படி எல்லாம் இருக்காது. நம்மவர் அப்படி இல்லை’ என்று அவளாகவே சமாதானம் செய்து கொண்டாள்.

பிறகு எதற்கு இவ்வளவு மோசமா முகத்த வச்சு இருக்காரு என்று மீனா புரிந்துகொள்ள முடியவில்லை.

வேலைக்காரி வீட்டிற்குள் நுழைந்ததும் அவளுடைய வேலைகளை செய்ய ஆரம்பித்தாள். பத்து பாத்திரம் தேய்ப்பது. சமையல் செய்வது என்று அவள் வேலையில் முனைந்தாள். இடையே மீனாவிடம் பேசினாள்.

‘அம்மா இன்னைக்கு என்ன குழம்பு வைக்கட்டும்? காரக் குழம்பு இல்ல தக்காளி சாதமா? என்று அடுப்பங்கரையில் இருந்து குரல் கொடுத்தாள்.

‘இன்னிக்கு தக்காளி சாதம்’ என்று எதிர் குரல் கொடுத்த மீனா மறுபடியும் கணவன் பத்மநாபனைப் பார்த்தாள்.

அப்போதும் அவரின் முகம் சுருங்கி இருந்தது. எப்போதும் இப்படி இருக்க மாட்டாரே? ஏன் இன்னைக்கு இப்படி இருக்கார்? என்று நினைத்த மீனா பத்மநாபன் அருகே போனாள்.

ஆபீஸ் போற நேரம். முகத்த இப்பிடி வச்சு இருக்கீங்க? ஏதாவது பிரச்சனையா? என்று கேட்கப் பதில் சொல்லாமல் தலையை மட்டும் ஆட்டினார் பத்மநாபன்.

‘என்னன்னு சொல்லுங்க சொன்னாத்தானே அதற்கான தீர்வு சொல்லமுடியும்?’ என்று மீனா சொல்ல…….. ‘ஒன்னுமில்ல’ என்று மீனாவுடன் பேசிய படியே கண்ணாடியில் முகம் பார்த்து தலை வாரிக் கொண்டிருந்தார் பத்மநாபன். அப்போதுதான் மீனாவிற்கு ஒன்று புலப்பட்டது. ‘எங்க உங்க கையில் போட்டிருந்த மோதிரத்தை காணோம்?’ என்று கேட்டபோது அதற்கு பதில் சொல்லாமல் இருந்தார் பத்மநாபன்.

‘உங்கள தான் கேட்கிறேன். எங்க மோதிரம்?’ என்று கேட்க பதில் சொல்லாமலே சட்டை மாட்டிக் கொண்டிருந்தார்.

மீண்டும் அதட்டிக் கேட்டாள், மீனா அவர் பதில் சொல்லவே இல்லை. இதையெல்லாம் அடுப்பறையில் இருந்து கவனித்துக் கொண்டிருந்தாள் வேலைக்காரி.

‘நம்ம எதுக்கு இத பேசணும்? வேண்டாம். அவங்க குடும்ப பிரச்சனை’ என்று தனக்குத் தானே நினைத்துக் கொண்ட வேலைக்காரி அவளுடைய வேலையிருந்து கொஞ்சம் கூட மாறவில்லை. மறுபடியும், மறுபடியும் மோதிரத்தைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தாள் மீனா.

‘தெரியல நேத்து காணாப் போச்சு எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல’ என்று வேலைக்காரியை பார்த்தபடியே பேசிக் கொண்டிருந்தார் பத்மநாபன்.

‘என்ன சொல்றீங்க? எங்கேயாவது வச்சிட்டீங்களே?’ என்று கேட்டபோது….. ‘இல்ல இரண்டு நாளாக என்னுடைய மோதிரத்தைக் காணோம். அது தான் உன்கிட்ட நான் சொல்லல. எனக்கு தெரிஞ்சு இந்த வேலைக்காரி எதுவும் எடுத்து இருப்பாளா? எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு’ என்று வேலைக்காரிக்கு கேட்காமல் சன்னமாகப் பேசினார் பத்மநாபன்.

‘இருக்காதுங்க. நம்ம வீட்டுல பத்து பதினைந்து வருஷம் வேலை பார்த்துட்டு இருக்கா. அவளிடம் போய் இருக்காது’ என்று சமாதானம் சொன்னாள் மீனா.

‘இல்ல நேத்து கூட அவங்க பையனுக்கு காலேஜ் ஃபீஸ் கட்டணும்னு பணம் கேட்டு வந்தா நாம கொடுக்கல. ஒருவேளை என்னுடைய மோதிரத்தை திருடி கூட வித்திருக்கலாம் இல்லையா?’ என்று பத்மநாபன் சொன்னபோது,

‘அப்படிலாம் இருக்காதுங்க’ என்று சொன்னாள்.

‘இல்லை எனக்கு வேலைக்காரி மேல கொஞ்சம் சந்தேகம் இருக்கு’ என்று பொதுவாகச் சொன்னார் பத்மநாபன்.

‘என்ன சொல்றீங்க? அவளோட நடவடிக்கை சரியில்லை. நான் பாத்துட்டு தான் இருக்கேன்’ என்று கணவனும் மனைவியும் பேசி ஒரு வழியாக வேலைக்காரியை குற்றவாளிக் கூண்டில் ஏற்றி நிறுத்தினார்கள்.

‘இப்ப என்ன செய்யலாம்? போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்கலாமா? நாம கேட்டா உண்மைய சொல்ல மாட்டா. அதுதான் சரியான வழி’ என்று பத்மநாபன் சொல்ல….. சரி போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்கலாம்’ என்று இருவரும் அந்த அறைக்குள் பேசி முடித்து வெளியே வந்தார்கள்.

வீட்டில் இருந்த அத்தனையும் கூட்டி முடித்துவிட்டு கட்டிலுக்குக் கீழே கூட்டிக் கொண்டிருந்தாள் வேலைக்காரி.

‘மீனம்மா அம்மா’ என்று குரல் காெடுத்தாள். ‘என்ன?’ என்று முறைத்தபடியே கேட்டாள், மீனா.

‘ஐயாவோட 2 மோதிரம் கட்டிலுக்கு கீழ கிடந்துச்சு. இந்தாங்க’ என்று வெள்ளந்தியாக 2 மாேதிரத்தையும் வேலைக்காரி நீட்டியபோது இரண்டு பேருக்கும் தூக்கி வாரிப்போட்டது.

இந்த மோதிரம் எங்கு கிடந்தது? என்று மீனா கேட்க,

‘கட்டிலுக்கு அடியில் கிடந்ததும்மா நானும் ரெண்டு நாளா வீடு பெருக்கல. இப்பதான் கூட்டும் பாேது மோதிரம் கிடந்தது’ என்று சொல்ல, பத்மநாபன் இரவு படுக்கும் போது மோதிரத்தைக் கழற்றி வைத்தது ஞாபகம் வந்தது.

‘சரி நீ போ’ என்று வேலைக்காரியைப் போகச் சொன்ன மீனா, பத்மநாபனை சகட்டுமேனிக்குத் திட்டினாள்.

‘பாத்திங்களா, நீங்க தப்பு பண்ணிட்டு, ஒரு அப்பாவி மேலே பழி போடுறிங்க. ரெண்டு நாளைக்கு முன்னாடி தூங்கும் போது, நீங்க மோதிரத்தைக் கழட்டி வச்சத நான் பார்த்தேன். அதுக்குள்ள அந்த வேலைக்காரியை போய் நீங்க சந்தேகப்பட்டுடிங்க’ என்று மீனா சொல்ல பத்மநாபனுக்கு என்னவோ போல் ஆனது. இருவரும் அலுவலகம் கிளம்பி போக ஆயத்தமானார்கள். அடுப்படியில் வேலைக்காரி சமைத்துக் கொண்டிருந்தாள்.

‘அம்மா உங்களுக்கு டிபன் ஐயாவுக்கு டிபன் எடுத்துட்டு போங்க’ என்று வெள்ளந்தியாகச் சொன்னாள் அந்த வேலைக்காரி. பத்மநாபனுக்கு மீனாவுக்கும் கண் கலங்கியது. இப்படிப்பட்ட பொண்ண போய் நாம தவறா நினைச்சுட்டோம் என்ற மீனா வேலைக்காரியின் கையைப் பிடித்து ஐயாயிரம் ரூபாயை திணித்தாள்.

‘அம்மா எதுக்கு பணம் வேண்டாம். இரண்டு நாள்தான் இருக்கு மாசம் சம்பளம் வாங்கவேன். இது வேண்டாம் எனக்கு. என் பையனுக்கு இன்னும் 2 நாள் கழிச்சு பீஸ் கட்டிக்கிறேன். இப்ப வேண்டாம்மா’ என்று வேலைக்காரி சொல்ல, ‘இல்ல இது சம்பளம் இல்ல. உனக்கு போனஸ். உன் பையனோட பீஸ் கட்டு’ என்று சொல்லிய மீனாவும் பத்மநாபனும் அவரவர்களுக்கு கட்டி வைத்த மதிய உணவை எடுத்துக் கொண்டு கிளம்பினார்கள்.

வேலைக்காரியும் வீட்டையும் வேலையை முடித்து விட்டுக் கிளம்பினாள்.

அவர்கள் தனக்கு எதற்கு 5000 ரூபாய் கொடுத்தார்கள் என்று அந்த வேலைக்காரிக்குத் தெரியாது.

ஆனால் பத்மநாபனுக்கும் மீனாவுக்கும் மட்டும் தெரியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *