ஐதராபாத், நவ. 19–
தெலங்கானா கட்சியின் 4 எம்எல்ஏக்களிடம் பாஜக ரூ.100 கோடி குதிரை பேரம் நடத்திய ஆடியோ, வீடியோ வெளியான நிலையில், முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மகள் கவிதாவை பாஜகவில் இணையும்படி சிலர் கூறியது அரசியல் களத்தில் தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது.
தெலங்கானாவில், தெலங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தெலங்கானா சட்டசபை தேர்தலில், எந்த வழியிலாவது தெலங்கானா ராஷ்ட்ர சமிதியை தோற்கடிக்க பாஜக முடிவு செய்து களப்பணி ஆற்றி வருகிறது. இதனால் இரண்டு கட்சியினர் இடையே கடுமையான மோதல் போக்கு உள்ளது. இதற்கிடையே, பாஜகவினர் தலா ரூ.100 கோடி தருவதாக, சந்திரசேகர ராவ் கட்சி எம்எல்ஏக்களிடம் குதிரை பேரம் நடத்தியது தொடர்பான ஆடியோ வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
ஷிண்டே மாடல் – மகள் பேட்டி
இந்நிலையில் சந்திரசேகர ராவின் மகளும், சட்ட மேலவை உறுப்பினருமான கவிதாவை, பாஜகவில் இணைய வேண்டும் என சிலர் கூறிய விவகாரம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி சந்திரசேகர ராவ் மகள் கவிதா கூறியதாவது:–
நான் ஒரு கண்ணியமான அரசியல்வாதி. இந்த நாட்டில் நீண்ட காலம் அரசியலில் இருக்க விரும்புகிறேன். பாஜகவில் இணையுமாறு அந்த கட்சியை சேர்ந்த நண்பர்கள் என்னிடம் கூறினார்கள். மகாராஷ்டிராவில் ‘ஷிண்டே’ மாடல் என்ற வகையில் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த வாய்ப்பை நான் பணிவாக மறுத்துவிட்டேன். இந்த விஷயத்தில் நான் யார் பெயரையும் கூற விரும்பவில்லை.
எனது தலைவர் சந்திரசேகர ராவ் தான். நாம் அனைவரும் சொந்த பலத்தில் தலைவராக உருவாகி உள்ளோம். பின்பக்கம் வழியாக நாம் நுழையவில்லை. என்னை பற்றி தவறான தகவல்களை பாஜகவினர் நிறுத்த வேண்டும். என்னை பற்றி அவதூறு பரப்பினால் செருப்பால் அடிப்பேன் என பகிரங்கமாக கூறினார். அதாவது, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவிடம் கவிதா பேசியதாக பாஜக எம்பி கூறிய நிலையில், கவிதா ஆக்ரோஷமாக இவ்வாறு கூறியுள்ளார்.