செய்திகள்

முடுவார்பட்டியில் கோவில் மாடு இறந்தது: கிராம மக்கள் அஞ்சலி

அலங்காநல்லூர் அருகே

முடுவார்பட்டியில் கோவில் மாடு இறந்தது:

கிராம மக்கள் அஞ்சலி

 

அலங்காநல்லூர்,ஏப்,13–

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே முடுவார்பட்டி கிராமத்தில் செல்லாயி அம்மன் கோவில் கிராமத்து கோவில்மாடு உலகப் புகழ் அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுகளில் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி, கட்டில், பீரோ உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்களை வாங்கி இருந்தது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சிறந்த காளையாகவும் பரிசு பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த கோவில் காளை உடல் நலக்குறைவால் இறந்துவிட்டது. இதனை பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் கிராமத்துக் கோவில் மாட்டை அலங்கரித்து பொதுமக்கள் பார்வைக்காக கோவில் முன்பாக மாட்டு வண்டியின் மீது வைத்திருந்தனர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள ஏராளமான கிராமத்தைச் சேர்ந்த மாட்டின் உரிமையாளர்களும் மாடுபிடி வீரர்களும் கிராம பொதுமக்களும் வந்து கொரோனா சமூக விலகலை கடைபிடித்து மலர் மாலை, ரூபாய் நோட்டு, வேஷ்டி, துண்டு, உள்ளிட்ட பொருட்களும் சந்தனம், ஜவ்வாது உள்ளிட்ட வாசனை பொருட்களையும் கோவில் காளைக்கு காணிக்கையாக செலுத்தி வணங்கினர். இதனால் முடுவார்பட்டி கிராமமே சோகத்தில் மூழ்கியது. பின்னர் ஊருக்கு வெளியே உள்ள கிராம கோவிலுக்கு சொந்தமான இடத்தில் அங்கு அடக்கம் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *